full screen background image

எல்லாப் புகழும் சமந்தாவுக்கே..!!!

எல்லாப் புகழும் சமந்தாவுக்கே..!!!

கன்னட சினிமாவில் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் இயக்குநர் பவன் குமார். அவரது முதல் படமான ‘லூசியா’ இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் கன்னட சினிமாவை அடுத்தத் தலைமுறையினரிடத்தில் கொண்டு போய் சேர்த்தது. இவரது அடுத்த படமான ‘யு-டர்ன்’, கன்னட சினிமாவின் மீதான ஈர்ப்பை மேலும் அதிகமாக்கியது.

u-turn-movie-poster-1

தற்போது இந்த ‘யு-டர்ன்’ படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே நேரத்தில் தயாராகியுள்ளது. இந்தப் படத்தையும் பவன் குமாரே இயக்கியிருக்கிறார்.

ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரீன் மற்றும் வி.ஒய். கம்பைன்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் ஸ்ரீனிவாச சித்தூரி மற்றும் ராம்பாபு பண்டாரு ஆகியோர் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்கள்.

இந்தப் படத்தில் கதையின் நாயகியாக சமந்தா நடித்திருக்கிறார். ஆதி, நரேன், ராகுல் ரவிந்திரன், பூமிகா சாவ்லா மற்றும் பிரபல நடிகர், நடிகைகள் பலரும் நடித்துள்ளனர்.

நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். பூர்ண சந்திர தேஜஸ்வி இசையமைக்க, சுரேஷ் ஆறுமுகம் படத் தொகுப்பு செய்துள்ளார். ஏ.எஸ். பிரகாஷ் கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

சமீபத்தில் இந்த ‘யு-டர்ன்’ திரைப்படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் நிறைவு பெற்றுள்ளது.

இந்தப் படம் பற்றிப் பேசிய இயக்குநர் பவன் குமார் இந்தப் படத்தில் அதிக ஈடுபாடு காட்டி நடித்திருக்கும் நாயகி சமந்தாவை புகழ்ந்து தள்ளுகிறார்.

samantha-4

அவர் சமந்தா பற்றி பேசுகையில், “ஆரம்பத்தில் இருந்தே படத்தின் மீது தீவிர ஈடுபாட்டை காட்டிய சமந்தாவுக்கே எல்லா புகழும் சேரும். படத்தின் ஒரிஜினல் பதிப்பு ரிலீஸ் ஆகும் முன்பேயே இந்தப் படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு இந்தப் படத்தின் மீது பிணைப்போடு இருந்தார் சமந்தா.

மேலும் கன்னட ‘யு டர்ன்’ படத்தை தானாகவே முன் வந்து விளம்பரப்படுத்தினார். பொருத்தமான நடிகர்கள் படத்துக்குள் வரும்போதுதான் ஒரு இயக்குநரின் படைப்பு முழுமையடைகிறது.

குறிப்பாக, ‘யு டர்ன்’ போன்ற புகழ் பெற்ற படங்களை ரீமேக் செய்யும்போது, கேரக்டர்களுக்கு பொருத்தமான கலைஞர்களைக் கண்டறியும் பொறுப்பு மிகப் பெரிய சுமை. ஆனால், சமந்தாதான் அதை எங்களுக்கு எளிதாக்கினார்.

சமந்தா தென்னிந்திய சினிமாவில் மிகப் பெரிய அளவிலான ரசிகர்களைக் கொண்டிருப்பதால், என்னுடைய வேலைக்கு மிகப் பெரிய மைலேஜ் கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சியும் அடைகிறேன்…” என்றார் இயக்குநர் பவன் குமார்.

_41A7051

நடிகை சமந்தா இயக்குநர் பவன் குமார் பற்றி கூறும்போது, “இந்தப் படத்தை நான் தேர்ந்தெடுக்கவில்லை. அதுதான்  என்னைத் தேர்ந்தெடுத்தது. இது போன்ற வாய்ப்புகளை பெறுவது ஒரு ஆசீர்வாதம், அதை தவறவிட்டால், அது வாழ்நாள் முழுக்க குற்ற உணர்வாக இருக்கும்.

நான் அவரது ஒரிஜினல் ‘யு-டர்ன்’ படத்தை பார்த்தபோது, என்னால் அதில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை. ‘யு-டர்ன்’ படம் வேகம், மர்மம் மற்றும் வலுவான ஒரு பிரச்சினை கலந்த ஒரு கலவை.

அந்தப் படத்தின் கதைக் கரு தினமும் நம்முடைய வாழ்க்கையில் நாம் கண்ட  அன்றாட பிரச்சனைகளில் ஒன்று. அதுதான் இந்தப் படத்தில் நடிக்க என்னைத் தூண்டியது. இதில் ஒரு பொதுவான விஷயம் என்னவெனில், ஒரிஜனல் பதிப்பின் வெற்றியும், அதன் ரீமேக் பதிப்புகளின் வெற்றியும் ஒரே மாதிரியாக இருக்காது. அதுதான் பிராந்திய மொழி ரீமேக் படங்களுக்கு ஒரு பெரிய சவாலாக மாறிவிடுகிறது.

ஆனால் பவன், இந்தப் படத்திற்கான முன் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தினார். மேலும் நடிகர்கள் தேர்வும் மிக முக்கியமானது. இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்தது, கதையை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும்…” என்றார்.

‘யு-டர்ன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இந்த படம் எதைப் பற்றியது என்ற தீவிர விசாரணையை உருவாக்கியுள்ளது. சமந்தாவின் தோற்றத்தோடு சாலை, ரத்தம் தெறிப்புகள், போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை இணைத்து சிறப்பான வகையில் படத்தின் போஸ்டரை வடிவமைத்திருக்கிறார்கள்.

இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 13-ம் தேதி தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நாளில் வெளியாகவுள்ளது.

Our Score