full screen background image

‘துமாரி சுலு’ தமிழ் ரீமேக்கில் வித்யா பாலன் வேடத்தில் ஜோதிகா நடிக்கிறார்..!

‘துமாரி சுலு’ தமிழ் ரீமேக்கில் வித்யா பாலன் வேடத்தில் ஜோதிகா நடிக்கிறார்..!

‘நாச்சியார்’ வெற்றிக்குப் பிறகு அடுத்தப் படத்திற்கு தயாராகிவிட்டார் ஜோதிகா. இந்த முறை அவர் நடிக்கப் போவது ஒரு இந்தி படத்தின் தமிழ் ரீமேக்.

சென்ற ஆண்டு இந்தியில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற திரைப்படம் ‘துமாரி சுலு’. இந்தப் படத்தில்தான் கதையின் நாயகியாக நடிக்கவிருக்கிறார் ஜோதிகா.

டி-சீரிஸ் மற்றும் எல்லிப்சிப்ஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து இந்தியில் இந்தப் படத்தைத் தயாரித்திருந்தன.

இந்தப் படத்தில் வித்யா பாலன் கதையின் நாயகியாக நடித்திருந்தார். மேலும், மனவ் கௌல், நேகா துபியா, மலிஷ்கா மென்டோன்ஸா ஆகியோரும் நடித்திருந்தனர். அறிமுக இயக்குநரான சுரேஷ் திரிவேணி இயக்கியிருந்தார்.

2017 நவம்பர் 17-ம் தேதி வெளியான இத்திரைப்படம் இந்தியா முழுவதுமே பல்வேறு மொழி சினிமா ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டு வரவேற்பைப் பெற்றது. 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம், இந்தியாவில் மட்டும் 51 கோடி ரூபாயை  வசூலித்திருக்கிறது.

வசூல் மட்டுமல்ல விருதுகளையும் இத்திரைப்படம் அதிகமாகவே பெற்று பெருமைப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது,  ஸ்டார் ஸ்கிரீன் விருது இரண்டையுமே இந்தப் படத்திற்காக நடிகை வித்யா பாலனே பெற்றார்.

இதேபோல் சிறந்த அறிமுக இயக்குநருக்கான 2017 ஸ்டார் ஸ்கிரீன் விருதை சுரேஷ் திரிவேணியும், சிறந்த துணை நடிகைக்கான 2017 ஸ்டார் ஸ்கிரீன் விருதை நேகா துபியாவும் பெற்றனர்.

கணவர், பையன், குடும்பம் என்று இருக்கும் நிலையில் ஒரு நடுத்தர வயதுப் பெண் தான் விரும்பிய தனியார் ரேடியோ ஆர்.ஜே.வாக எப்படி மாறுகிறார்..? அதில் எப்படி வேலை செய்கிறார்…? என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறது இத்திரைப்படம்.

இப்போது இந்தப் படத்தை தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயனின் பாஃப்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா நிறுவனம் தமிழில் மொழி மாற்றம் செய்கிறது.

பாஃப்டா நிறுவனம் தற்போது இயக்குநர் திருவின் இயக்கத்தில் கார்த்திக், கௌதம் கார்த்தி, ரெஜினா கேஸண்ட்ரா, வரலட்சுமி சரத்குமார் ஆகியோரின் நடிப்பில் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ என்ற படத்தை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக இந்த ‘துமாரி சுலு’வின் தமிழ்ப் பதிப்பு உருவாகிறது.

இன்னமும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தில் வித்யா பாலன் கேரக்டரில் ஜோதிகா நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் ராதா மோகன் இயக்கவுள்ளார்.

இது பற்றி பேசிய இயக்குநர் ராதா மோகன், “இந்தியில் பெரும் வெற்றியைப் பெற்ற இந்தப் படத்தை தமிழில் இயக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறது. நான் ஏற்கெனவே ஜோதிகாவுடன் ‘மொழி’ படத்தில் பணிபுரிந்திருக்கிறேன். இந்தப் படம் மூலமாக மீண்டும் அவருடன் பணி புரிய வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. யதார்த்தப் பாணியிலான ‘துமாரி சுலு’வின் தமிழ்ப் பதிப்பு, ஜோதிகாவின் நடிப்பில் சிறப்பாக அமையும் என்று நம்புகிறேன்..” என்றார்.

இந்தப் படத்தில் நடிக்கவிருப்பது பற்றி நடிகை ஜோதிகா பேசுகையில், “இந்த ‘துமாரி சுலு’ எல்லோரும் விரும்பக் கூடிய, நேர்மையான, யதார்த்தமான நல்ல படம். நான் வித்யா பாலனின் தீவிர ரசிகை. நான் அவரது படங்கள் எதையும் தவற விட்டதில்லை. அவரது குரல் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது உச்சரிப்பு தொனி பாலிவுட்டில் அரிதான விஷயம். அவர் நடித்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது ‘துமாரி சுலு’. வித்யாபாலன் நடித்த வேடத்தை தமிழில் நான் செய்வது, என்னை கௌரவப்படுத்துவதாகவே கருதுகிறேன்…” என்றார்.

படத்தின் தயாரிப்பாளரான ஜி.தனஞ்ஜெயன் பேசுகையில், “இந்த அருமையான படத்தின் தமிழ் உரிமை எங்களுக்குக் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். இதற்காக டி சீரிஸ் மற்றும் எல்லிப்சிஸ் எண்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்களுக்கு நன்றி. இது எங்களுக்கு மறக்க முடியாத ஒரு படமாக அமையும் என்று நம்புகிறோம்..” என்றார்.

 

Our Score