“5 கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான் தியேட்டர்கள் திறக்கப்படும்..” – புதிய தலைவலி..!

“5 கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான் தியேட்டர்கள் திறக்கப்படும்..” – புதிய தலைவலி..!

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான திருப்பூர் சுப்ரமணியம் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக தமிழக அரசிடம் அளித்திருக்கும் 5 கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான் தியேட்டர்களை திறக்க முடியும் என்று சங்கத்தின் சார்பாக அறிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்காக வெளியிட்ட ஆடியோவில் விரிவாகப் பேசியுள்ளார் திருப்பூர் சுப்ரமணியம்.

அந்த ஆடியோவில் திருப்பூர் சுப்ரமணியம் பேசும்போது, “வரும் மே 25 அல்லது ஜுன் முதல் வாரம் திரையரங்குகளைத் திறக்க தமிழக முதல்வர் அனுமதி அளிக்க உள்ளதாக நம்மிடம் தெரிவித்திருக்கிறார்.

இந்த நேரத்தில் திரையரங்குகளை திறப்பதற்கு முன்பாக நாம் நீண்ட நாட்களாகக் கேட்டுக் கொண்டிருக்கும் ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றும்படி அரசிடம் கேட்க வேண்டும். அந்தக் ஐந்து கோரிக்கைகளை விளக்கி தமிழக அரசிடம் ஏற்கெனவே நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து மனுவெல்லாம் கொடுத்திருக்கிறோம். ஆனால் அது பற்றி அரசு இன்னமும் பதில் சொல்லவில்லை.

அந்த ஐந்து கோரிக்கைகளை மறுபடியும் இங்கே நமது உறுப்பினர்களுக்கு நான் மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன்.

முதல் கோரிக்கை : ஃபிலிம் நடைமுறையில் இருந்தபோது ஆபரேட்டர் உரிமம் அவசியமானதாக இருந்தது. ஆனால் தற்போது டிஜிட்டல் முறைக்குத் திரையிடல் மாற்றமடைந்திருப்பதால் ஆபரேட்டர் உரிமம் வேண்டியதில்லை. அதனை ரத்து செய்ய வேண்டும்.

இரண்டாவது கோரிக்கை : தற்போது நடைமுறையில் இருக்கும் வருடத்திற்கு ஒரு முறை திரையரங்கிற்கான உரிமத்தை புதுப்பிக்கும் நடைமுறையை 3 வருடங்களுக்கு ஒரு முறை உரிமத்தைப் புதுப்பிக்கலாம் என்று மாறுதல் செய்ய வேண்டும்.

மூன்றாவது கோரிக்கை : அதிக இருக்கைகள் உள்ள பெரிய திரையரங்குகளை சிறிய திரையரங்குகளாக மாறுதல் செய்து கொள்ள பொதுப்பணித் துறை, மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் அனுமதி பெற்றாலே போதுமானது. இதற்கான முறைப்படியான அரசாணையை இன்னமும் அரசு வெளியிடவில்லை. இந்த அரசாணையை உடனேயே தாமதிக்காமல் வெளியிட வேண்டும்.

நான்காவது கோரிக்கை : புதிய திரையரங்குகளை அமைக்கும்போது மொத்த இடத்தில் 10 சதவிகித காலியிடத்தை உள்ளாட்சிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்கிற விதியை ரத்து செய்ய வேண்டும்.

ஏனெனில் சினிமா தியேட்டர்களை கேளிக்கைகள் சட்டத்தின் கீழ்தான் வரும். பத்து சதவிகித காலியிடத்தில் கேளிக்கை சட்டப்படி பூங்காக்களைத்தான் அமைக்கப் போகிறார்கள். நாமே ஏற்கெனவே அதே கேளிக்கை சட்டப்படிதான் தியேட்டர்களை அமைத்து வருவதால் பூங்காக்கள் நமது தியேட்டர்கள் அருகில் தேவையில்லை. அதனால், இந்த விதிமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

ஐந்தாவது கோரிக்கை : இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடைமுறையில் இல்லாத 8 சதவிகித கேளிக்கை வரி தமிழகத்தில் அமுலில் உள்ளது. அதனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

தமிழக அரசு நமது மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தராத பட்சத்தில் திரையரங்குகளை நாம் திறந்து நடத்துவது நமக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். ஏற்கனவே கடந்த 50 நாட்களுக்கும் மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால் நாம் மிகப் பெரிய நஷ்டத்தில் இருக்கிறோம்.

இந்த நேரத்தில்தான் நாம் இந்தக் கோரிக்கைகளை அரசிடம் வலியுறுத்தி பெற வேண்டும். எனவே நாம் அனைவரும் ஒன்றுகூடி உடனடியாக ஒரு முடிவை எடுக்க வேண்டும். இந்த கொரோனா ஊரடங்கு நேரத்தில் நாம் அனைவரும் ஒன்று கூடுவது சாத்தியமில்லை என்பதால் நமது சங்க உறுப்பினர்கள் அனைவரும் இதற்கு ஆதரவு தெரிவித்து நமது வாட்ஸ்அப் குழுமத்திலேயே ஆதரவு செய்தியை அனுப்ப வேண்டும்.

இதை வைத்து சங்கத்தின் அனுமதி கிடைத்ததாக நினைத்து மேற்கொண்டு அரசிடம் நமது சங்கம் பேச்சுவார்த்தை நடத்தும். அதன் பின்பு தியேட்டர்களை திறப்பதா வேண்டாமா என்பது பற்றி நாம் யோசித்து முடிவெடுப்போம்..." என்று திருப்பூர் சுப்ரமணியம் பேசியுள்ளார்.