full screen background image

TRAUMA – சினிமா விமர்சனம்

TRAUMA – சினிமா விமர்சனம்

மூன்றுவிதமான கதை மாந்தர்கள்.. மூன்று சம்பவங்கள்… இவை அனைத்தும் இறுதியில் ஒரு புள்ளிகள் இணைகின்றன. இதை நான் லீனியர் முறையில் சொல்லும்  புதிய திரைப்படம்தான் இந்த ட்ராமா.

விவேக் பிரசன்னாவும், சாந்தினியும் தம்பதிகள். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி நான்கு வருடங்களாகியும் குழந்தை இல்லை. அந்த வருத்தத்தில் இருவருமே காலம் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். விவேக் பிரசன்னாவுக்கு தன்னிடம் தான் குறை இருக்கிறது என்பது தெளிவாக தெரிந்தும் தன்னுடைய பெற்றோருக்காக திருமணம் செய்திருக்கிறார். தன்னுடைய குறையை சாந்தியிடம் சொல்லிவிடலாம் என்று தவிக்கிறார். ஆனால், அவரால் சொல்வதற்கு முடியவில்லை. தைரியமும் இல்லை.

இந்த நேரத்தில் விவேக் பிரசன்னாவின் கண்களில் ஒரு பெர்டிலிட்டி சென்டரின் விளம்பரம் சிக்குகிறது. அங்கே சென்று தன்னுடைய உடல் குறைபாட்டுக்கு தீர்வு கிடைக்குமா என்று கேட்கிறார் விவேக் பிரசன்னா. அவர்கள் ஒரு மாத்திரையை கொடுத்து “இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்டிப்பாக குழந்தை பிறக்கும்” என்று சொல்கிறார்கள்.

அதேபோல் அந்த மாத்திரையை சாப்பிட்ட பின்பு சாந்திக்கு குழந்தை உண்டாகிவிட்டது. தம்பதிகள் இருவரும் விலை மதிப்பில்லாத சந்தோஷத்தில் இருக்கும்போது திடீரென்று சாந்தினிக்கு வரும் மர்ம போன் காலில் “உன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு உன் கணவன் விவேக் பிரசன்னா அப்பா இல்லை. வேறு ஒருவன்தான்” என்று சொல்லி அதற்காக ஒரு ஆதாரமாக ஒரு வீடியோவும் வர… நிலை குலைந்து போகிறார் சாந்தினி. விவேக் பிரசன்னாவும் பெரும் அதிர்ச்சியாகிறார்.

அந்த அனாமதேய குரல் மறுபடியும் சாந்தினியை போனில் அழைத்து 50 லட்சம் ரூபாய் கொடுத்தால் இந்த வீடியோவையும் டெலிட் செய்வதாகச் சொல்கிறது.

சாதாரண ஆட்டோ ஓட்டுநரான தனது தந்தை மாரிமுத்து ஒரு கால் டாக்ஸி வாங்கி கொடுக்க வேண்டும் என்று அவருடைய மகள் பூர்ணிமா ரவி நினைக்கிறார். ஆனால் அவரோ ஒரு சாதாரண பெட்ரோல் பங்கில் சப்ளையராக வேலை செய்து கொண்டிருக்கிறார்.

இந்த நேரத்தில் அவரை விரட்டி விரட்டி காதலிக்கிறார் பிரதோஷ். இந்தக் காதல் கடைசியாக எல்லை மீறி படுக்கையறை வரையிலும்போக பூர்ணிமா கர்ப்பமாகிறார்.

பூர்ணிமாவின் கர்ப்பத்தைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியாகும் அவரது பெற்றோர்கள் குழந்தையை கலைத்துவிடலாம் என்று வற்புறுத்துகிறார்கள். பூர்ணிமா இதற்கு மறுக்கிறார்.

மதன் கோபாலும், ஸ்மைல் செல்வாவும் லோக்கல் திருடர்கள். டூ வீலர்களை அவ்வப்போது திருடி கொண்டு வந்து கொடுத்துவிட்டு அந்த காசில் கொஞ்சமாக சரக்கு அடித்துவிட்டு பட்டறையை சாத்துபவர்கள்.

இவர்களிடமிருந்து திருட்டு வண்டியை வாங்கும் ஒர்க் ஷாப் ஓனர் அவர்களை பெரிதாக சம்பவம் செய்யும்படி தூண்டிவிட்டு கார்களை திருட சொல்கிறார். அந்த அறிவுரையின்படி இவர்கள் கார்களையும் திருட தொடங்குகிறார்கள்.

அப்படி ஒரு முறை திருடும்போது போலீஸிடம் சிக்கிக் கொள்கிறார்கள் காத்திருட்டு தானே தப்பித்து விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் இவர்கள் ஒட்டி வந்த திருட்டு காரின் டிக்கியில் ஒரு பிணம் கிடைக்கிறது.  உடனேயே ஸ்மைல் செல்வாவும், மதன் கோபாலும் போலீஸிடம் இருந்து தப்பியோடுகிறார்கள்.

இதற்கு பின்பு என்ன நடந்தது?.. விவேக் பிரசன்னாவும், சாந்தினியும் பணத்தை கொடுத்து தப்பித்தார்களா?.. பூர்ணிமா தன்னுடைய கருவை கலைத்தாரா?.. இவர்கள் மூன்று பேரும் எந்த புள்ளியில் சந்திக்கிறார்கள்?.. இந்த மூவரும் எப்போது ஒன்றிணைகிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் கதை சுருக்கம்.

விவேக் பிரசன்னாவுக்கு அட்டகாசமான ஒரு வாய்ப்பு. ஏற்கனவே இரண்டு படங்களில் தனி கதாநாயகனாக நடித்தவர் இந்த படத்திலும் தனிக் கதாநாயகனாக நடித்து தன்னுடைய இருப்பை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். மிக சிறப்பாகவே நடித்திருக்கிறார்.

அஸ்வின் நாக்கிடம் தன்னுடைய இயலாமையை சொல்லுகின்ற இடத்தில் அவருடைய கம்மிய குரலும், உடல் மொழியும்.. நடிப்பும்.. ஐயோ பாவம் என்று நம்மையே சொல்ல வைத்துவிட்டது.

அதேபோல அவருடைய மனைவியாக நடித்த சாந்தினியும் தன்னுடைய கருத்தரிக்க முடியாத தன்னுடைய நிலையை எண்ணி அவர் வருந்துகின்ற இடத்தில் நிஜமாகவே ஒரு பரிதாபத்தை உருவாக்கிவிட்டார்.

அடல்ட்ரி ஏஜ் கேரக்டரில் பெண்கள் எப்படியிருப்பார்களோ அதை அப்படியே திரையில் காட்டி இருக்கிறார் பூர்ணிமா. ஆனால் இவரைவிடவும் மிக சிறப்பாக நடித்திருக்கிறார் அவருடைய அம்மாவாக நடித்த ரமா.

தன் மகளின் நிலையை எண்ணி அவர் கதறும்போதும், கணவரிடம் அதுவரை சொல்லாமல் மறைத்து வைத்திருந்த விஷயத்தை தன்னுடைய அழுகையோடு சொல்கின்ற அந்த இடத்தில் மொத்த மதிப்பெண்ணையும் ரமா தட்டிச் செல்கிறார்.

இந்தக் காட்சியில் மாரிமுத்து, பூர்ணிமா ரவி மற்றும் ரமா மூவரின் நடிப்பும்  இயக்குநரின் இயக்குதல் திறமைக்கு மிகப் பெரிய உதாரணம்.

மதன் கோபாலும், ஸ்மைல் செல்வாவும் கொஞ்சம் காமெடிக்காக சேர்க்கப்பட்டிருந்தாலும் அவர்களும் கேரக்டர்ஸ் நடிகர்களைப் போலவே கடைசிவரையிலும் நடித்திருக்கிறார்கள். வில்லனாக நடித்தவர் வில்லத்தனத்தை சிறப்பாகவே காட்டி இருக்கிறார். பூர்ணிமாவின் காதலனாக நடித்திருக்கும் பிரதோஷூம் ரொம்ப ரொம்ப நல்லவராக வந்து கடைசியாக அவருடைய உண்மை முகம் தெரிந்தவுடன் அவர் மீது நமக்கு கோபம் வருகின்ற அளவுக்கு நடித்திருக்கிறார்.

படத்தின் பிற்பகுதியில் பாதி காட்சிகள் இரவு நேர காட்சிகளாக அமைந்திருந்தாலும் அஜித் சீனிவாசனின் ஒளிப்பதிவு மிகச் சிறப்பு. வில்லன் இருப்பிடம் மற்றும் அது தொடர்பான காட்சிகளில் ஒளிப்பதிவினை அழகாக கொடுத்திருக்கிறார். இசையமைப்பாளர் ராஜ் பிரதாப்பின் இசையில் ஒரு டூயட் பாடல் மட்டும் கேட்கும்விதமாக இருந்தது. பின்னணி இசை ஒரு சஸ்பென்ஸ் படத்திற்கு தேவையான  இசையாக அமைந்துள்ளது.

மூன்று விதமான கேரக்டர்ஸையும், மூன்றுவிதமான திரைக்கதைகளில் கொஞ்சம் சஸ்பென்ஸ், திரில்லரையும் கலந்து கடைசிவரையில் கொடுத்திருக்கிறார் இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன்.

மருத்துவத் துறை சம்பந்தமான முறைகேடுகள் தமிழ் சினிமாவுக்கு புதிது அல்ல. ஆனால் இந்த மாதிரியான முறைகேடுகள் நிச்சயமாக புதிதுதான். இது மாதிரியான முறைகேடுகள் நிறைய நடக்கின்றன என்பதை எடுத்துக்காட்டி ஒரு விழிப்புணர்வை ஊட்டும் படமாக இதைக் கொடுத்திருந்தாலும் இதன் திரைக்கதை மட்டும் ரொம்பவே டூ மச் என்று நம்மை சொல்ல வைத்திருக்கிறது.

வெறும் மாத்திரையை மட்டுமே கொடுத்து ஏமாற்றுகிறார்கள் என்றால் ஓகே. ஆனால் அதன் பின்பு வீட்டுக்கே ஆள் அனுப்பி வீடியோ எடுத்து அதன் மூலம் மிரட்டுகிறார்கள் என்பதெல்லாம் கொஞ்சம் அதிகப்படியான திரைக்கதை என்றுதான் சொல்ல வேண்டும்.

மற்றபடி இந்தப் படம் நிச்சயமாக ஒரு முறை பார்க்கலாம் என்ற வகையில்தான் அமைந்துள்ளது.

RATING : 3 / 5

Our Score