தமிழகத்தின் பிரபலமான சமூகப் போராளியான ‘டிராஃபிக் ராமசாமி’யின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டிருக்கும் படம் ‘டிராஃபிக் ராமசாமி’.
இந்தப் படத்தில் டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிக்க அவரது மனைவியாக ரோகிணி நடிக்கிறார். மற்றும் பிரகாஷ்ராஜ் , ஆர்.கே.சுரேஷ், அம்பிகா, உபாசனா, கஸ்தூரி, மனோபாலா, மதன் பாப், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, மோகன்ராம் என்று பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் விஜய் ஆண்டனி கெளரவ வேடத்தில் வருகிறார். புதுமுக இயக்குநரான விக்கி படத்தை இயக்கியிருக்கிறார்.
படத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப் பிரபலமான நடிகர் ஒருவர் தோன்றி நடிக்கவுள்ளார். அது யார் என்பதை சஸ்பென்ஸாக வைத்துள்ளனர்.
தற்போது இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு உரிமையை டிரெண்ட் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. ‘தர்மதுரை’, ’மீசைய முறுக்கு’, ’சோலோ’ படங்களுக்குப் பின் டிரெண்ட் மியூசிக் நிறுவனம் இப்படத்தின் ஆடியோ உரிமையை வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது பற்றி டிரெண்ட் மியூஸிக் நிறுவனம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தியில், “சமூகத்திற்காக தனி மனிதனாக அறுபது ஆண்டுகளுக்கு மேலாக போராடி வரும் சமூகப் போராளியான டிராபிக் ராமசாமியின் வாழ்வை மையமாக வைத்து இப்படம் உருவாகுவதால் இப்படத்தின் இசையை வெளியிடுவதை எங்கள் நிறுவனத்திற்கு கிடைத்த கொளரவமாக கருதுகிறோம்.
‘ஹர ஹர மகாதேவகி’ படத்தின் இசையமைப்பாளரான பாலமுரளி பாலு இந்தப் படத்திற்கு இசையமைத்திருப்பதால் பாடல்கள் ட்ரெண்டிங்காக இருக்கும் என்று பெரிதும் எதிர்பார்ப்பதாக..” அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.