தமிழ்ச் சினிமாவில் ஹீரோயின்களின் பெயர்க் குழப்பத்தைவிடவும் படங்களின் பெயர் குழப்பம்தான் அதிகமாக இருக்கிறது.
ஒரு நடிகைக்கு மூன்று நான்கு பெயர்கள் இருந்து, படத்திற்கு படம் மாற்றிக் கொள்வதெல்லாம் ‘கயல்’ படத்தின் ஹீரோயின் ஆனந்திவரைக்கும் நடந்துதான் வருகிறது.
இப்போது படங்களின் டைட்டில்களிலும் இதே கதைதான். ஒரு திரைப்படத்திற்கு முதல் இலவச விளம்பரமே அதன் டைட்டில்தான். கதைக்குக்கூட இத்தனை பிரயத்தனம் செய்ய மாட்டார்கள் இயக்குநர்கள். டைட்டில் வைப்பதற்கு அத்தனை அல்லல்படுவார்கள். சில பேர் முழு படத்தையும் எடுத்து முடித்த பின்புதான் டைட்டிலை அறிவித்திருக்கிறார்கள்.
இப்படி முக்கியத்துவம் வாய்ந்த இந்த டைட்டிலை வைத்துக் கொண்டு சில சினிமாக்காரர்கள் செய்யும் அலம்பலும் தாங்க முடியவில்லைதான். ஒரே பெயரில் இரண்டு படங்களை உருவாக்கிவிட்டு, கடைசி நிமிடத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்து பிரச்சினையாக்குவதெல்லாம் இப்போது அதிகமாகி வருகிறது.
ஏற்கெனவே சென்ற வருடம் ‘இருக்கு ஆனா இல்ல’ என்ற படமும் ‘இல்ல ஆனா இருக்கு..’ என்ற படமும் ஒரே நேரத்தில் தயாராகி ரிலீஸுக்கு வந்து நின்றன. பெயர்க் குழப்பமா இருக்கே என்றெல்லாம் பேச்சு எழுந்து, பின்பு நடந்த பஞ்சாயத்துக்களுக்குப் பிறகு ஒரு படத்தின் பெயர் ‘யாமிருக்க பயமே’ என்று மாறியது. படமும் ஹிட்டானது.
இப்போது இந்தப் படம். நகைச்சுவை கிங் கவுண்டமணி தற்போது நடித்து வரும் படம் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’. சென்னையில் இருந்து மதுரைவரை செல்லும் கேரவன் பஸ்ஸில் நடைபெறும் சம்பவங்கள்தான் படத்தின் கதை. இது 2 மாதங்களுக்கு முன்பேயே முறைப்படி அறிவிக்கப்பட்டு இப்போது ஷூட்டிங் ஆரம்பமாகிவிட்டது.
இதே நேரத்தில் நேற்றைக்கு ஒரு படத்திற்கு பூஜை போட்டுள்ளார்கள். இந்தப் படத்திற்கு ‘எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ என்பது டைட்டில். இதில் புதுமுகங்கள் ஹீரோ, ஹீரோயினாக நடிக்க, பாரதிமோகன் என்ற இயக்குநர் இயக்கமும் செய்கிறார்.
டைட்டில் ‘எனக்கு’ என்பது ‘எங்களுக்கு’ என்று மாறியிருக்கிறது. அவ்வளவுதான் வித்தியாசம். நாளைய சினிமா வரலாற்றில் படம் பற்றி குழப்பங்கள் கூடுமே..? இதைப் பற்றி கொஞ்சம் யோசிக்க வேண்டாமா..?
இப்படி இவர்களுக்குள்ளேயே ஒற்றுமையில்லாமல் மோதிக் கொண்டால் திரைப்படத் துறை எப்படி வளரும்..? முதலில் படத்தின் டைட்டிலை ஒரேயொரு இடத்தில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டும்.
இப்போது தயாரிப்பாளர் சங்கம், கில்டு, பிலிம் சேம்பர் என்ற மூன்று இடங்களில் டைட்டிலை பதிவு செய்து வருகிறார்கள். போதாக்குறைக்கு இப்போது இயக்குநர்கள் சங்கமும் தாங்கள்தான் பெயரைப் பதிவு செய்வோம் என்றும் சொல்லி வருகிறார்கள். சீக்கிரமாக இந்தப் பிரச்சனைக்கு முடிவு கட்டுவது திரையுலகத்திற்கு நல்லது..!