திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரித்து வரும் திரைப்படம் ‘டைட்டானிக் – காதலும் கவுந்து போகும்’.
இந்தப் படத்தில் கலையரசன், ‘கயல்’ ஆனந்தி, ஆஷ்னா சாவேரி, காளி வெங்கட், ‘ஜாங்கிரி’ மதுமிதா, ராகவ் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சேத்தன் மற்றும் தேவதர்ஷிணி, சுதா ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இயக்குநர் பாலாஜி மோகனும், நடிகை காயத்ரியும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர்.
பல்லு ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘தெகிடி’, ‘சேதுபதி’ புகழ் நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைத்துள்ளார். கலை இயக்குநராக ராம் பிரசாத்தும், படத் தொகுப்பாளராக ராதாகிருஷ்ணன் தனபாலும் அறிமுகமாகியுள்ளனர்.
இயக்குநர்கள் பாலா, சுதா கொங்காரா, பாலாஜி மோகன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அறிமுக இயக்குநர் எம்.ஜானகிராமன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
படம் பற்றி இயக்குநர் ஜானகிராமன் பேசுகையில், “இது முழுக்க, முழுக்க நகைச்சுவை கலந்த காதல் திரைப்படம். படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் படத்தில் இடம் பெறும் பல சம்பவங்கள் தங்களது வாழ்க்கையைப் பற்றியும் யோசிக்க வைக்கும். அதுவும் படத்தின் கிளைமாக்ஸில் வரும் சில டிவிஸ்ட்டு காட்சிகள் இதுவரையிலும் எந்தவொரு நகைச்சுவை திரைப்படங்களிலும் நீங்கள் பார்த்திருக்காத புதிய அனுபவத்தைக் கொடுக்கும்…” என்றார்.