full screen background image

டிக் டிக் டிக் – சினிமா விமர்சனம்

டிக் டிக் டிக் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை நேமிசந்த் ஜபக் சார்பில் வி.ஹித்தேஷ் ஜபக் தயாரித்திருத்திருக்கிறார்.

இந்தப் படத்தில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஜெயப்பிரகாஷ், வின்சென்ட் அசோகன், ரமேஷ் திலக், ரித்திகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

ஒளிப்பதிவு – வெங்கடேஷ். எஸ், படத் தொகுப்பு – ப்ரவீண் ராகவ், கலை இயக்கம் – எஸ்.எஸ்.மூர்த்தி, இசை – டி.இமான், பாடல்கள் – மதன் கார்க்கி, கிராபிக்ஸ் – அஜாக்ஸ் முத்துராஜ், வி.எப்.எக்ஸ். ஹெட் – அருண் ராஜ், சண்டை இயக்குநர் – மிராக்கில் மைக்கேல் ராஜ். இசையமைப்பாளர் டி.இமானுக்கு இந்த படம் 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் முதல் ஸ்பேஸ் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சக்தி சௌந்தர்ராஜன். இவர் ஏற்கெனவே ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘மிருதன்’ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணில் இருந்து எரி கல் ஒன்று வட சென்னையின் மையப் பகுதியில் விழுகிறது. சுமார் 80 மீட்டர் சுற்றளவு கொண்ட அந்த கல் ஏற்படுத்திய பாதிப்பில் சில உயிர்கள் பலியாகின்றன. மத்திய, மாநில அரசுகள் அந்த எரி கல் பற்றி சோதனை நடத்துகின்றன.

சோதனையின் முடிவில் இதைவிட பல மடங்கு பெரிதான எரி கல் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் அது இன்னும் 13 நாட்களில் பூமியைத் தாக்கும் என்றும்.. அப்படி தாக்கினால் தமிழகமே அழிந்துவிடும் என்றும் தெரிய வருகிறது.

ராணுவத்தில் விண்வெளி ஆராய்ச்சிப் பிரிவில் இருக்கும் மேஜர் ஜெயப்பிரகாஷிடம் இதனை தடுக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது.

அவர் தனது ராணுவ ஆராய்ச்சி மைய அதிகாரிகளுடன் இது குறித்து விவாதிக்கிறார். எரி கல்லை பூமிக்கு மிக அருகில் வைத்து வெடிக்க வைத்தால் அதனாலும் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பது தெரிகிறது. இதனால் விண்வெளியிலேயே அந்த எரி கல்லை இரண்டாகப் பிளந்து வெடிக்கச் செய்தால்தான் இந்த அழிவிலிருந்து தப்பிக்க முடியும் என்று தெரிந்து கொள்கிறார்கள்.

விண்வெளியிலேயே எரி கல்லை தாக்கி வெடித்து சிதற வைக்கும் ஆற்றல் உள்ள அணு ஆயுதம் தற்போது இந்தியாவிடம் இல்லை. உலகத்தில் எந்த நாட்டிடமும் இல்லை என்பது இப்போதுதான் இவர்களுக்குத் தெரிய வருகிறது.

ஆனால் விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கும் வேறொரு நாட்டின் விண்வெளி ஆராய்ச்சிக் கூடத்தில் அப்படியொரு உலகை அழிக்கக் கூடிய அணு ஆயுத ஏவுகணை பத்திரமாக வைக்கப்பட்டிருப்பதை ஜெயப்பிரகாஷ் அறிகிறார். எனவே, அந்த அணு ஆயுத ஏவுகணையை கைப்பற்ற முடிவெடுக்கிறார் ஜெயப்பிரகாஷ் தலைமையிலான ராணுவ அணியினர்.

இதற்கு பொருத்தமான ஆளைத் தேடும்போது இவர்கள் கண்ணில் சிக்குபவர்தான் ஜெயம் ரவி. மேஜிக்சியனான ஜெயம் ரவி ஒரு வழக்கில் அப்பாவி ஒருவருக்கு உதவி செய்யப் போய் போலீஸில் மாட்டி தற்போது சிறையில் இருக்கிறார். இவருக்கு மனைவி இல்லை. 5 வயது மகன் மட்டுமே இருக்கிறான். மகன் மீது கொள்ளைப் பாசம் வைத்திருக்கிறார் ஜெயம் ரவி.

மகனை காட்டியே ஜெயம் ரவியை மடக்குகிறது ராணுவம். ஜெயம் ரவியும் தனது மகனுக்காக இதனை ஒத்துக் கொள்கிறார். இவர்களுக்கு ராணுவ மையத்தில் விண்வெளியில் இருப்பதற்கான அனைத்து பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. அந்தப் பயிற்சியை முடித்துவிட்டு ஜெயம் ரவியும், அவரது நண்பர்களான ரமேஷ் திலக், அர்ஜூனன் ஆகியோரும் விண்வெளிக்கு அனுப்பப்படுகிறார்கள்.

அந்த நேரத்தில் ஜெயம் ரவிக்கு வரும் தனிப்பட்ட அழைப்பில் பேசும் மர்மக் குரல் ஜெயம் ரவியின் மகன் தற்போது அவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், விண்வெளியில் அந்த அணு ஆயுத ஏவுகணையைக் கைப்பற்றி தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், இல்லையேல் அவரது மகனை கொலை செய்யப் போவதாகவும் சொல்கிறது.

இதனை கேட்டு அதிர்ச்சியடையும் ஜெயம் ரவி.. மகனுக்காக அந்தக் குரல் சொல்லியபடியெல்லாம் விண்வெளியில் நடந்து கொள்கிறார். இதனால் அங்கே பலவித குழப்பங்களும், பிரச்சினைகளும் எழுகின்றன..

கடைசியில் என்ன ஆகிறது என்பதுதான் திரைக்கதை.

நாயகன் ஜெயம் ரவி எப்போதும் போலவே அவருக்கு வரும் நடிப்பைக் காட்டியிருக்கிறார். நடித்திருக்கிறார். சிறப்பாக எதுவும் இல்லை. மகனுக்காக கண் கலங்கும் காட்சியில்கூட செயற்கைத்தனமே மேலோங்கி நிற்கிறது. நடிப்புக்கு பெரிய அளவுக்கு ஸ்கோப் இல்லாததால் ஜெயம் ரவியால் ஒரு அளவுக்கு மேல் நடிப்பைக் காட்டும் அவசியமும் இல்லை.

இவருடைய மகனாக சொந்த மகன் ஆரவ் நடித்திருக்கிறார். துடிப்பான, சிறாராக வலம் வருகிறார் ஆரவ். சிறப்பான எதிர்காலம் இருக்கிறது. வாழ்த்துகள்.

மிக இளம் வயது ராணுவ அதிகாரியாக நிவேதா பெத்துராஜ் பொருத்தமே இல்லாமல் நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். அவருடைய முகத்துக்கும், தோற்றத்துக்கும் ராணுவ அதிகாரி கேரக்டர் ஷூட்டே ஆகவில்லை. ஆனால் ஏன் இவரைத் தேர்வு செய்தார்கள் என்று தெரியவில்லை. சிற்சில காட்சிகளில் இவர் மட்டுமே கொஞ்சம் நடித்திருக்கிறார். அதனாலேயே பாராட்டலாம்.

ஜெயப்பிரகாஷ் திடீர் வில்லனாகவும், நல்ல குணச்சித்திர நடிகையாக ரித்திகா சீனிவாஸும் நடித்திருக்கிறார்கள். குறிப்பிட்டுச் சொல்லும்படி எதுவும் இல்லை. வில்லனாக மாறிய பிறகும் ஜெயப்பிரகாஷின் மாடுலேஷனும், பாடி லாங்குவேஜூம் ஒன்று போலவே இருப்பது போரடிக்கிறது.

சீனா விண்வெளி நிலையத்தின் தலைமை கமாண்டராக நடித்திருக்கும் ஆரோன் ஆசிஸ், இன்னொரு ராணுவ அதிகாரி வின்சென்ட் அசோகன், ஜெயம் ரவியின் நண்பர்களான ரமேஷ் திலக், அர்ஜுனன் என்று மற்றவர்களும் நன்கு நடிக்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.

படத்தில் பெரிதும் பாராட்டுக்குரியவர் கலை இயக்குநர் எஸ்.எஸ்.மூர்த்தி. கொடுத்த பட்ஜெட்டிற்குள் ஹாலிவுட் பட ஸ்டைலில் விண்வெளி ஆராய்ச்சி மையம், விண்வெளி ஓடம், எரி கல், அணு ஆயுதம் என்று பலவற்றையும் கொஞ்சமும் குறையில்லாமல் வடிவமைத்திருக்கிறார்.

டி.இமானின் இசையில் பாடல்கள் வழக்கமான அதே ராகத்தில்தான் இருக்கின்றன. அதனால் ஒரு முறை கேட்கலாம். பின்னணி இசைகூட சிறப்பாக வந்திருக்கிறது. எரி கல்லை அடிக்கடி காட்டும்போது ஒலிக்கும் பின்னணி இசையும், விண்வெளி ஆராய்ச்சி மையம் சம்பந்தப்பட்ட காட்சிகளில் ஒலிக்கும் இசையும் டி.இமானின் இசை அறிவை காட்டுகிறது.

எஸ்.வெங்கடேஷின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. விண்வெளி ஆராய்ச்சி மையக் காட்சிகள், விண்வெளி ஓடம் சம்பந்தமான அனைத்துவித காட்சிகளிலும் அழகு, அழகு அப்படியொரு அழகாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

1953-ல் எம்.ஜி.ஆர். நடித்த கலையரசி படத்திற்கு பிறகு விண்வெளியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த டிக் டிக் டிக் படத்தின் தற்போதைய வெற்றிக்குக் காரணமே படத்தின் சுவையான, சுவாரஸ்யமான திரைக்கதைதான்.

படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் படம் ஓட்டமாய் ஓடுகிறது. கொஞ்சமும் கவனக்குறைவை ஏற்படுத்தும்விதம் இல்லாமல் விறுவிறுப்பாகவும், அழுத்தமான இயக்கத்திலும் படம் உருவாகியிருப்பதால் எந்தவித சலிப்பையும் படம் கொடுக்கவில்லை. இதுவே படத்திற்குக் கிடைத்த நல்ல பெயர்தான்.

ஆனாலும் படத்தில் வண்டி, வண்டியாக லாஜிக் எல்லை மீறல்கள்.. முதலில் இது போன்ற நாட்டை பேரழிவாக்கும் பிரச்சினையில் ராணுவத்தின் விண்வெளி ஆராய்ச்சிப் பிரிவு தலையிடவே தலையிடாது. அவர்களிடம் இது குறித்து போதுமான அறிவார்ந்த பணியாளர்கள் இல்லை என்பதுதான் உண்மை.

இது நிச்சயமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தினர்தான் தலையைக் கொடுத்து காப்பாற்ற கடமைப்பட்டவர்கள். ஏன் இந்த விஷயத்தில் ராணுவத்தை இழுத்துவிட்டார்கள் என்று தெரியவில்லை.

இப்போது விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கும் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அமெரிக்கா, ரஷ்யா என்ற இரண்டு நாடுகளின் கூட்டு முயற்சியில் இயங்கி வருகிறது.

இது போன்ற விண்வெளி மையத்தை சீனா அமைத்திருப்பதுபோல காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குநர். இது ரசிகர்களை நம்ப வைப்பதற்காகவும், சினிமாட்டிக்காகவும் இருக்கிறது என்றாலும் ஓவர் குசும்புதானே..!?

இதேபோல் விண்வெளி ஓடத்தில் சிக்கல் ஏற்பட்டு விண்வெளி ஓடம் நிலாவில் இறங்கிவிட.. அந்த நிலவில் இந்த வீரர்கள் களமிறங்க எத்தனிக்கும் நேரத்தில்.. முதல் ஆளாக இறங்கக் காத்திருக்கும் வின்சென்ட் அசோகனை தள்ளிவிட்டுவிட்டு, நொடிப் பொழுதில் ஜெயம் ரவியை கீழே தள்ளிவிடும் காட்சியமைப்பு இந்தக் கதைக்குத் தேவையற்றது..! அங்கே போனாலும் தமிழர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வார்கள் என்பதுதான் இந்தக் காட்சி மூலம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது..!

விண்வெளி ஆராய்ச்சி மையத்தைக் கட்டிக் காப்பாற்றி வரும் சீன கமாண்டர், இந்தியாவை அழிப்பதுதான் தங்களது ஒரே லட்சியம் என்பதை போல பேசுவதைக் கேட்கும்போது, இந்திய இயக்குநர்கள் இப்போது இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத செயல்களுக்கு பாகிஸ்தானைவிட்டுவிட்டு சீனாவைப் பிடித்துவிட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அதேபோல் அந்த அணு ஆயுத ஏவுகணையை பூமியில் தயாரித்து புவியில் கொண்டு போய் பாதுகாப்பாய் வைத்திருக்கிறார்கள் என்பது அதீத கற்பனை. ஆனால் எதிர்காலத்தில் நிச்சயம் நடக்க வாய்ப்புண்டு. விண்வெளி போரும் விரைவில் நடைபெறும் என்றே தோன்றுகிறது. அப்போது படத்தின் இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன் சொல்லியிருக்கும் இந்த விஷயம் உண்மையாகி தமிழ்த் திரையுலகம் பெருமைப்படும் என்பதும் உறுதி..!

இந்த ‘டிக் டிக் டிக்’ போரடிக்காமல் செல்கிறது. பொழுது போக்க விரும்புவர்கள் அவசியம் பார்க்கலாம்..!

Our Score