நடிகை அஞ்சலி அடுத்து ‘ஓ’ என்று படத்தில் நடிக்கவுள்ளார். இது திகில், சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படமாம். படத்தில் பேயும் உண்டு என்கிறார்கள்.
இந்தப் படத்தைத் தயாரிப்பாளர் அஜய் பணிக்கர் தயாரிக்கிறார். அறிமுக இயக்குநர் பிரவீண் இயக்குகிறார். படத்திற்கு இசை அரோல் கரோலி.
இந்தப் படம் துவங்கியவிதம் பற்றிப் பேசிய தயாரிப்பாளர் அஜய் பணிக்கர், “எங்கள் நிறுவனத்தின் சார்பில் உருவாகும் இரண்டாவது படம் இது. இது மிகச் சிறந்த படமாக இருக்க வேண்டும் என்று நினைத்தோம்.
50-க்கும் மேற்பட்ட கதைகளை கேட்க வேண்டியிருந்தது. இறுதியாக, ‘ஓ’ படத்தின் கதையில் படத்துக்கு நாங்கள் எதிர்பார்த்த அனைத்தும் இருப்பதாக உணர்ந்தோம். மேலும், இது வெறுமனே நகைச்சுவை படமாக இல்லாமல் மிகச் சரியான ஒரு திகில்-த்ரில்லர் படமாக இருக்க போகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக, படம் பார்க்கும் ரசிகர்களின் வாழ்க்கையை இந்த படம் பிரதிபலிக்கும். அவர்கள் படத்தை பார்க்கும்போது படத்தின் திரைக்கதைக்கு நெருக்கமாக தங்களை தொடர்புபடுத்திக் கொள்ள வாய்ப்புண்டு. அப்படியொரு கதை இது..!
இயக்குநர் ப்ரவீன் இதன் ஸ்கிரிப்ட்டை விவரிக்கும்போது, கதையை கேட்ட மாதிரி இல்லாமல், ஒரு படத்தை பார்த்த அனுபவமாக இருந்தது. நிறைய மெய் சிலிர்க்க வைக்கும் விஷயங்கள் படத்தில் இருந்தன.
அஞ்சலியின் முழுமையான அர்ப்பணிப்பு, அழகிய தோற்றம் மற்றும் பக்கத்து வீட்டு பெண் போன்ற கதாபாத்திரத்திற்கு கச்சிததமாக பொருந்தும் திறன் இந்த கதாபாத்திரத்திற்கும் ஸ்கிரிப்ட்டிற்கும் பொருத்தமாக அமைந்தது.
‘ஓ’ படத்தில் மூன்று பாடல்கள் உள்ளன, மூன்றுமே திரைக்கதையோடு இணைந்த பாடல்கள். பின்னணி இசை வலுவான தாக்கத்தை கோருவதால் இந்த படத்துக்கு அரோல் கோரேலியின் இசை இருந்தால்தான் சிறப்பாக இருக்கும் என்று நினைத்தோம், அதனால் அவரை ஒப்பந்தம் செய்தோம்.
இந்த ‘ஓ’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகவுள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் லோகோவிற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ‘O’ என்ற தலைப்புக்கு பின்னால் நிறைய ஆச்சரியங்கள் மறைந்துள்ளன. விரைவில் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு மற்றும் first look வரும்..” என்றார்.