‘சண்டியர்’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்த ஜெகன், இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ‘மிஸ் சவுத் இந்தியா’ பட்டம் வென்ற ஈடன் நடித்துள்ளார்.
கதாநாயகியின் தந்தையாக இயக்குநர் ஏ.வெங்கடேஷ், நாயகனின் நண்பனாக பால சரவணன் மற்றும் சமீபத்தில் மறைந்த நடிகர் ‘பூ’ ராமு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, வில்லனாக ராமச்சந்திரன் (ராம்ஸ்) நடித்துள்ளார்.
புதியவரான நரேஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். விஜய் மில்டனின் உதவியாளராக பணியாற்றிய வாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத் தொகுப்பை நாகூரான் கவனிக்க, ஆக்சன் காட்சிகளை மணி வடிவமைத்துள்ளார். பத்திரிகை தொடர்பினை கே.எஸ்.கே.செல்வா செய்துள்ளார். இயக்குநர் ஹெச்.வினோத்தின் சீடரான இயக்குநர் சீனிவாசன் இந்த ‘துரிதம்’ படத்தை இயக்கியுள்ளார்.
மதுரை பக்கமிருக்கும் தெற்குப்பட்டியை பூர்வீகமாகக் கொண்ட நாயகனான ஜெகன், ஊரில் நடந்த ஜாதி பிரச்சினையினால் பாதிக்கப்பட்டு சென்னைக்கு ஓடி வந்து கால் டாக்சி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது காரில் தினமும் அலுவலகம் செல்லும் நாயகி ஈடனை ஒருதலையாய் காதலித்து வருகிறார். ஈடனின் அப்பாவான ஏ.வெங்கடேஷ் மிகவும் கண்டிப்பானவர். கட்டுப்பெட்டித்தனமானவர். பெண்கள் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற கொள்கையில் இருப்பவர்.
தீபாவளி வருகிறது. ஊருக்குப் போகலாமா.. வேண்டாமா என்ற ஊசலாட்டத்தில் இருக்கும் நாயகன் ஈடனிடம் காதலை சொல்லிவிட நினைக்கிறார். ஆனால் ஈடனுக்கோ இவர் மீது காதல் இல்லை என்பது தெரிகிறது. இதற்கு மேல் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று நினைத்து ஊருக்கு தனது டூவீலரிலேயே கிளம்புகிறார் நாயகன்.
அதே சமயம் நாயகியும் மதுரைக்குக் கிளம்புகிறார். டிரெயினை தவறவிட்டதால் பேருந்தில் போக நினைக்கிறார். ஆனால் டிக்கெட் கிடைக்கவில்லை. இதனால் நாயகனுடனேயே டூவீலரில் பயணிக்க முடிவு செய்து செல்கிறார் நாயகி. நாயகனுக்கும் ஒரு புது ஆர்வமாக தோன்ற அதை ஏற்றுக் கொள்கிறார்.
ஆனால் செல்லும் வழியில் குறுக்கிடும் ராம்ஸ் நாயகியை மட்டும் தனியே கடத்திச் செல்கிறார். அவரைத் தேடி நாயகன் ஓடுகிறார். இன்னொரு பக்கம் நாயகியின் அப்பாவும் நாயகியைத் தேடி நாயகியின் நண்பிகளை துளைத்தெடுக்கிறார். இறுதியில் என்னவாகிறது என்பதுதான் இந்த துரிதம் படத்தின் திரைக்கதை.
நாயகன் ஜெகன் ஏற்கெனவே ‘சண்டியர்’ என்ற படத்தில் நாயகனாக நடித்தவர். அதில் ஆக்சன் காட்சிகளில் அதிரடியாக நடித்திருந்த ஜெகன், இந்தப் படத்தில் மிக சாதாரணமான தோற்றத்தில் எளிய மனிதராக நடித்துள்ளார். ஆனால் வயதாகிவிட்டது என்பது அவரது முகத்தில் தெளிவாகத் தெரிகிறது.
மிக டீசண்ட்டாக நாயகியிடமும், அனைவரிடமும் பேசும் பழக்கமுள்ள ஜெகன், நாயகிக்கு தன் மீது ஈர்ப்பில்லை என்பதை உணர்ந்தவுடன் மிக யதார்த்தமாக அதை எடுத்துக் கொள்கிறார். இந்தக் காட்சி அழகாகப் படமாக்கப்பட்டுள்ளது.
இடைவேளைக்கு பின்பு நாயகியைத் தேடியலையும்போதும், இறுதியில் எந்தவொரு ஏமாற்றமும் இல்லாமல் நாயகியைப் பிரிந்துபோகும்போதும் நமக்குள் ஒரு பரிதாப உணர்வை வரவழைத்திருக்கிறார் நாயகன் ஜெகன். பாராட்டுக்கள்.
நாயகி ஈடன், 2015-ல் இருந்து 2019-ம் ஆண்டுவரையிலும் தமிழ் சினிமாவில் சின்ன சின்ன படங்கள், மீடியம் பட்ஜெட் படங்களில் நடித்தவர். நான்காண்டுகளுக்கு முன்பாக இவர் நடித்து கடைசியாக வெளிவரும் படம் இதுதான்.
அப்படியொன்றும் அழகியில்லை என்றாலும் கேமிராவுக்கேற்ற முகம். அப்பா, அம்மாவிடம் பேசும்போது ஏற்படும் சங்கடம், பயம், தவிப்பு இதையெல்லாம் சரியாகக் காண்பித்திருக்கிறார். பாடல் காட்சிகளிலும், டிராவல் காட்சிகளிலும் அழகாகக் காண்பிக்கப்பட்டிருக்கிறார். அப்படியே தொடர்ந்திருக்கலாம். ஆனால் திடீரென்று திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டது வருத்தமான விஷயம்.
நாயகனின் நண்பனாக பால சரவணன் தனது யதார்த்தமான நடிப்பினாலும், வசன உச்சரிப்பினாலும் கொஞ்சம் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறார். நாயகியின் தந்தையான ஏ.வெங்கடேஷ் ஆணாதிக்க மனோபாவத்தை தனது கண்களிலும், பேசும் வசனத்திலும் காண்பித்து மிரட்டுகிறார்.
திடீர் வில்லனான ராம்ஸின் வில்லத்தனம் ஏன், எதற்கு என்று தெரியவில்லை. அதிலும் ஒடுக்கப்பட்ட இனத்தில் இருந்து வந்தவர்.. தனது வாழ்க்கையை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர் இந்த செயலை ஏன் செய்கிறார் என்பதற்கு சரியான காரணம் இல்லை. அதோடு இவரது சாதி அடையாளம் இங்கே ஏன் என்பதும் கேட்க வேண்டிய கேள்விதான்.
இவரை உசுப்பிவிடும் பூ ராமின் பேச்சு, விஷம் தடவிய தேன். நாயகியின் தோழிகளாக நடித்திருக்கும் வைஷாலி, ஸ்ரீநிகிலா, ஐஸ்வர்யா மூவரின் நடிப்பும் சிறப்புதான்.
சாலை பயணம் தொடர்பான கதை என்பதாலும், தேசிய நெடுஞ்சாலையில் டோல் கேட் அருகிலெல்லாம் படமாக்கப்பட்டுள்ளது என்பதாலும் ஒளிப்பதிவாளர்களின் வேலையை பாராட்டாமல் இருக்க முடியாது.
ஒளிப்பதிவாளர்கள் வாசன் மற்றும் அன்பு டென்னிஸ் இருவரது கேமராக்களும் ரன் பாஸ்ட்டில் ஓடியிருக்கின்றன. இடைவேளைக்கு பின்பு படம் முழுக்க, முழுக்க நெடுஞ்சாலையில் பயணிக்கிறது என்பதால் கேமராவும் நடித்தவர்களுடனேயே வேகமாக பயணித்து, அவர்களது நடிப்பையும் மிக அழகாகப் பதிவு செய்துள்ளது.
இசையமைப்பாளர் நரேஷின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையும் நம் கவனத்தைக் கலைக்கவில்லைய. அதுவரையிலும் சந்தோஷம்தான். நாகூரான் மற்றும் சரவணன் என்ற இரட்டை படத் தொகுப்பாளர்களின் கை வண்ணத்தில் படம் மிகவும் சுவாரஸ்யப்பட்டிருக்கிறது.
ஒரு பயண கதையை பரபரப்பான திரைக்கதையோடும், விறுவிறுப்பான காட்சிகளோடும் சுவாரஸ்யமாக இயக்கியிருக்கிறார் இயக்குநர் சீனிவாசன். படத்தின் மையக் கருவாக நூலிழையில் தொங்கிக் கொண்டிருந்த சாதிய பிரச்சினையை பெரிதாக்காமல் விட்டுவிட்டு இருவரும் அவரவர் வழியில் பயணிப்பதாக படத்தை முடித்திருப்பது மிக, மிக எதார்த்தமான முடிவு. இதற்காகவே இயக்குநருக்கு மிகப் பெரிய பாராட்டு.
இந்தத் ‘துரிதம்’ பார்வையாளர்களுக்கு சிறப்பான ஒரு பாஸ்ட் பாஸஞ்சர் பயணத்தை அளிக்கும்.
ரேட்டிங் : 3.5 / 5