“சினிமாவில் என்னை கோமாளியாகத்தான் பார்க்கிறார்கள்..” – இயக்குநர் கஸ்தூரிராஜா பேச்சு..!

“சினிமாவில் என்னை கோமாளியாகத்தான் பார்க்கிறார்கள்..” – இயக்குநர் கஸ்தூரிராஜா பேச்சு..!

JVDM கிரியேஷன்ஸ் சார்பில் பாலசுதன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘துணிகரம்’.

கதாநாயகனாக நடித்துள்ள வினோத் லோஹிதாசன் உட்பட முற்றிலும் புதுமுகங்களை கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் இயக்குநர் பாலசுதனும் கதைக்கு திருப்பமான முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.  க்ரைம் த்ரில்லர் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது.

இந்தப் படம் சிறிய பட்ஜெட் படம் என்றாலும் இசைக்கு ஷான் கோகுல் மற்றும் பின்னணி இசைக்கு தனுஜ் மேனன் என இரண்டு இசையமைப்பளர்கள் பணியாற்றியுள்ளனர்.

இந்தப்  படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேபில் நடைபெற்றது.

Thunikaram Audio Launch Stills 048

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் கஸ்தூரிராஜா, பேரரசு, ஆர்.கே.வித்யாதரன், நடிகர்கள் போஸ் வெங்கட், விஜய் டிவி சீரியல் புகழ் அமித் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் (கில்ட்) ஜாக்குவார் தங்கம் ஆகிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் நடிகர் போஸ் வெங்கட் பேசும்போது, “மும்பையிலே ரோஹித் ஷெட்டின்னு ஒரு டைரக்டர் இருக்கிறார். அவர்தான் ஜிம் பாடியெல்லாம் வச்சுக்கிட்டு படம் டைரக்ட் பண்ணுவாரு. அவருக்கப்புறம் தமிழ் சினிமாவுல அப்படி ஒரு ஜிம் பாடி டைரக்டரா இந்த படத்தோட இயக்குனர் பாலசுதன் தெரியுறாரு.

Thunikaram Audio Launch Stills 042

இந்த குழுவினருக்கு ஒரே ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். வெற்றிக்காக நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டி வந்தால், அதுவரை பொறுமையாக இருங்கள். நானும் அப்படி காத்திருந்து, இன்று கவண்’ படம் மூலம் அப்படி ஒரு வெற்றி அங்கீகாரத்தை பெற்று, அதன்பின் இப்பொது இந்த மேடையேறி பேசும்போது கிடைக்கும் சந்தோசமே புதிதாக இருக்கிறது…” என கூறினார்.

விழாவில் பேசிய இயக்குநர் கஸ்தூரிராஜா, ஒரு நபர் இயக்குநராக மாறி புகழ் பெறுவதற்காக என்னனென்னவெல்லாம் இழக்கிறான் என நெகிழ்ச்சியாக பேசினார்.

kasthuri raja

“துணிகரம் என டைட்டில் வைத்ததிலேயே  படக் குழுவினரின் துணிச்சல் தெரிகிறது. இந்த சினிமாவிற்கு வந்ததில் இருந்து இரண்டுமுறை நான் கோமாளியாக கண்ணுக்கு தெரிஞ்சிருக்கிறேன். இப்போகூட அப்படித்தான் தெரிஞ்சுக்கிட்டிருக்கேன்.

முதல் தடவையா என்னோட படத்தை டைரக்ட் பண்ண தயாரிப்பாளர் தேடி அலைஞ்சபோது.. இரண்டாவது ‘துள்ளுவதோ இளமை’ படத்தை இயக்கியபோது.

அப்போ தனுஷுக்கு ஹீரோ லுக் இல்லை.. அதனால் படம் எடுக்க பணம் கொடுத்த பைனான்சியர், ‘அப்பனும் மகனும் கேமராவ வச்சு விளையாடிட்டு இருக்காங்க’ன்னு விமர்சனம் பண்ணார். இப்படி பல அவமானங்களையும் விமர்சனங்களையும் சந்தித்துதான் இங்கே வந்துள்ளோம். எனக்கு ராஜ்கிரண்னு ஒரு கடவுள் கிடைச்சார்.. அதனால்தான் இந்த உயரத்துக்கு வர முடிஞ்சது…” என்றார்.

மேலும் அவர் பேசும்போது, “இன்னைக்கு கொஞ்சம் சினிமா ஆரோக்கியமா இருக்கு.. ஒரு ஆடியோ ரிலீஸுக்கு டிஸ்ட்ரிபியூட்டர் வர்றதே ஆரோக்கியமான விஷயம்தான். சின்னப் படம் வந்தாலும் மூணு நாள்தான்.. சூப்பர் ஸ்டார் படமும் மூணு நாள்தான். இன்னைக்கு உலகம் பூரா பேசப்படுற பாகுபலிகூட பத்து நாட்கள்தான். அதுனால இன்னைக்கு நிறைய படங்கள் வெளிவர வாய்ப்பு இருக்கு” என்றும் இன்றைய சினிமா சூழலை விவரித்தார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது, “உதவி இயக்குநராக இருந்து இயக்குநராவதற்காக, இந்த புகழை அடைவதற்காக இளமையையெல்லாம் தொலைக்க வேண்டி இருந்தது. தீபாவளி, பொங்கல், திருவிழா, நல்லது கெட்டது என எந்த விசேஷத்திற்கும் ஊருக்கு போனது இல்ல.

director perarasu

ஊருக்குப்போய் ரெண்டு நாள் தங்கினா, ‘என்னப்பா இன்னும் டைரக்டர் ஆகலை?’ன்னு கேட்க ஆரம்பிச்சுடுவாங்க. அவங்க பையன் 20 வருஷமா சும்மா சுத்திக்கிட்டு இருப்பான்.. ஆனா அது அவங்களுக்கு பெரிசா தெரியாது. சினிமாவுக்கு போனா உடனே சாதிக்கணும் அப்படிங்கிறது அவங்க நினைப்பு. ஆனா சினிமாவுல வெற்றிக்காக நிறைய இழக்கணும்.. ரொம்ப நாள் காத்திருக்கணும்.

‘திருப்பாச்சி’ ரிலீஸான அன்னைக்குதான் ஊர்ல பொங்கல் கொண்டாடுனேன். ‘சிவகாசி’ வெளியான அந்த தீபாவளிதான் நான் ஊர்ல கொண்டாடுனேன்…” என்று படக் குழுவினருக்கு தனது வாழ்க்கை அனுபவத்தை பாடமாக எடுத்தார் பேரரசு..

மேலும் இன்றைக்கு இயக்குநர்களாக முதல் படம் எடுக்கும் இயக்குநர்கள் எப்படி இருக்க வேண்டும் என ஒரு குட்டிக் கதை மூலமும் விளக்கினார் பேரரசு.

“ஒரு ராஜா.. அவருக்கு மூன்று மகன்கள்.. தனக்குப் பின் யார் நாட்டை ஆள வேண்டும் என முடிவு செய்ய தனது மூன்று மகன்களையும் அழைத்து ஒரு போட்டி வைத்தார்.

‘காட்டிற்கு சென்று ஒரு சாக்கு நிறைய இரண்டு வாரங்களுக்கு தேவையான உணவை கொண்டு வந்து மூவரும் ஆளுக்கொரு ஒரு ஏழைக்கு கொடுக்கணும். ஆனால் அந்த மூட்டையை என்னிடம் பிரித்துக் காட்ட தேவையில்லை’ என உத்தரவிட்டார்.

மகன்கள் மூவரும் காட்டிற்கு சென்றனர்.. முதலாமவன் மரத்தில் ஏறி நல்ல பழங்களாக பறித்து மூட்டை கட்டினான்.

இரண்டாமவன் சோம்பல்பட்டுக் கொண்டு கீழே விழுந்த அழுகிய பழங்களே போதும் என மூட்டை கட்டினான்.

மூன்றாமவனோ ஏழைக்குத்தானே கொடுக்கப் போகிறோம் என அலட்சியத்துடன் கீழே கிடந்த குப்பைகளை அள்ளி மூட்டை கட்டினான்.

மூவரும் ராஜாவிடம் வந்து நிற்க, ராஜாவோ, ‘நீங்கள் இதை கொடுக்க வேண்டிய அந்த ஏழைகள் வேறு யாருமில்லை.. நீங்கள்தான் அந்த ஏழைகள். இரண்டு வாரங்களுக்கு நீங்கள் கொண்டு வந்ததை நீங்களே சாப்பிடுங்கள்..’ என கூறி ஆளுக்கொரு அறையில் தள்ளி பூட்டிவிட்டார்.

நல்ல பழங்களை கொண்டு வந்தவன் நன்றாக சாப்பிட்டு சுகமாக இருந்தான். மற்ற இரண்டு பேரின் நிலையை சொல்லி தெரிய வேண்டியதில்லை.

இப்படித்தான் முதல் பட வாய்ப்பு கிடைக்கும் இயக்குநர்கள், ஏனோதானோவென்று அந்த நேரத்திற்கு வேலை பார்த்தால் அது அவர்களுக்குத்தான் ஆபத்தாக முடியும். நல்ல கதையாக தேர்வு செய்து படங்களை இயக்கினால் உங்களுக்கும் வாழ்வு. தயாரிப்பாளருக்கும் லாபம்” என அடுத்ததாக படம் இயக்கவரும் இயக்குநர்களுக்கு பொட்டில் அடித்தாற்போல் அறிவுரையும் கூறினார் பேரரசு.

வழக்கம்போல திருட்டு விசிடிக்கு எதிராக குரல் கொடுக்கும் ஜாக்குவார் தங்கம் இந்த மேடையிலும் தனது கருத்தை பதிவு செய்தார்.

jaguvaar thangam

மேலும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான விஷால் வரும் மே-30 முதல் ஆரம்பிக்க இருக்கும் போராட்டம் குறித்து பேசிய அவர், “அது எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகும் என தெரியவில்லை. பார்க்கலாம்..” என தனது அங்கலாய்ப்பை வெளிப்படுத்தினார்.

படத்தின் இயக்குநரும்,  தயாரிப்பாளருமான பாலசுதன் பேசும்போது, “இது தனது பன்னிரெண்டு வருட கனவு” என்றார். படத்தின் ஹீரோவாக நடித்துள்ள வினோத் லோஹிதாசன், இந்தப் படத்தின் ஆடிசனுக்காக சென்றபோது சட்டையின் கை மடிப்பை எல்லாம் மடித்துவிட்டு கெத்தாக சென்றாராம். ஆனால் இயக்குநரின் பாடி பில்டிங் தோற்றத்தை பார்த்ததுமே, ஆட்டோமேட்டிக்காக சட்டையை இறக்கிவிட்டாராம்.

ஆனால் டைரக்டர்தான் ஹீரோவாக நடிப்பாரோ என சந்தேகப்பட்டவருக்கு, ஹீரோ சான்ஸ் கொடுத்து இன்ப அதிர்ச்சி அடைய வைத்துவிட்டாராம் இயக்குநர் பாலசுதன்.

சமீபத்தில் வெளியான ‘இலை’ படத்தை வெளியிட்ட ஆக்சன்-ரியாக்சன் நிறுவனம்தான் இந்தப்   படத்தையும் வெளியிடுகிறது.

Our Score