full screen background image

துடிக்கும் கரங்கள் – சினிமா விமர்சனம்

துடிக்கும் கரங்கள் – சினிமா விமர்சனம்

‘ஓடியன் டாக்கீஸ்’ நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் கே.அண்ணாத்துரை தயாரிக்கும் படம் ‘துடிக்கும் கரங்கள்’.

இந்தப் படத்தில் நடிகர் விமல் நாயகனாக நடிக்கிறார். மும்பையை சேர்ந்த மிஷா நரங்க் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் சுரேஷ் மேனன், சதீஷ், சங்கிலி முருகன், செளந்தர், பில்லி முரளி, ஆனந்த் நாக், சுபிக்சா, ஆர்யா, ரூபினா, ரூபிஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

தயாரிப்பு – ஓடியன் டாக்கீஸ், தயாரிப்பாளர் – கே.அண்ணாத்துரை, இயக்கம் – வேலுதாஸ், இசை – ராகவ் பிரசாத், ஒளிப்பதிவு – ராம்மி, படத் தொகுப்பு – லாரன்ஸ் கிஷோர், கலை இயக்கம் – கண்ணன், சண்டைப் பயிற்சி இயக்கம் – சிறுத்தை கணேஷ், பத்திரிகை தொடர்பு – K.S.K.செல்வா

இந்தப் படத்தை இயக்குநர் வேலுதாஸ் இயக்கியுள்ளார். இவர் எஸ்.எஸ்.ஸ்டான்லி, நந்தா பெரியசாமி, ‘வெற்றிவேல்’ இயக்குநர் வசந்தமணி ஆகிய இயக்குனர்களிடம் பணிபுரிந்தவர். கனவு என்கிற குறும்படத்தை இயக்கியதற்காக கனடா சர்வதேச திரைப்பட விருது பெற்றவர்.

பிரபல இசையமைப்பாளர் மணி சர்மாவின் நிழலாகவே, அவருடன் 23 வருடங்கள் உதவியாளராக பணியாற்றிவரும், அவரது சகோதரர் மகன் ராகவ் பிரசாத் இந்தப் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் ராம்மி ‘யாமிருக்க பயமே’ படத்தில் பணியாற்றியவர். அதுமட்டுமல்ல… இந்தியில் பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மாவின் மூன்று படங்களுக்கு இவர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்திற்கு பணியாற்றிய லாரன்ஸ் கிஷோர் இந்தப் படத்தின் படத் தொகுப்பை கவனிக்கிறார். ‘சக்ரா ‘ படத்திற்கு பணியாற்றிய கண்ணன் இந்தப் படத்தின் கலை வடிவமைப்பை கையாண்டுள்ளார்.  படத்தில் இடம் பெறும் நான்கு சண்டை காட்சிகளையும் சிறுத்தை’ கணேஷ் வடிவமைத்துள்ளார்.

படத்தின் நாயகனான விமல், தனது நண்பரான சதீஷூடன் இணைந்து யூ டியூப் சேனல் ஒன்றை நடத்துகிறார். இந்த சேனல் மூலமாக மக்கள் பிரச்சினைகளை அம்பலப்படுத்துகிறார். அரசின் கண் பார்வைக்குக் கொண்டு போகிறார்.

ராமநாதபுரத்தில் இருந்து வேலைக்காக சென்னைக்கு வந்த சமீர் என்ற இளைஞனைத் தேடி அவனது தந்தையான சங்கிலி முருகன் வருகிறார். இவர் வந்த நேரத்தில் சமீரை போனில் பிடிக்க முடியவில்லை. அந்த போன் சுவிட்ச் ஆஃபாக இருக்கிறது.

சங்கிலி முருகனை சந்திக்கும் விமலுக்கு அவரது சோகக் கதை தெரிய வருகிறது. உடனேயே அந்தக் கதையை தனது யுடியூப் தளத்தில் வெளியிட்டு மக்களிடம் உதவி கேட்கிறார்.

இந்த நேரத்தில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் ஐ.ஜி.யாக இருக்கும் சுரேஷ் மேனனின் மகள் தற்கொலை செய்து கொள்கிறார். இந்தத் தற்கொலைக்குப் பின்னால் இருப்பவர்களைக் கண்டுபிடிக்க செளந்தர்ராஜா என்ற இன்ஸ்பெக்டர் விசாரிக்கத் துவங்குகிறார்.

இப்போது காணாமல் போன சமீருக்கும், தற்கொலை செய்து கொண்ட பெண்ணுக்கும் இடையில் ஏதோவொரு தொடர்பு இருப்பதை விமல் கண்டறிகிறார். இது குறித்து அவர் ஐ.ஜி.க்கும், போலீஸூக்கும் தெரியப்படுத்துகிறார்.

உடனேயே விமலையும், அவரது நண்பர் சதீஷையும் கொலை செய்ய ஒரு கூட்டம் ஓடி வருகிறது. தாக்குதலில் தப்பித்த விமல் இதன் பின்னணியை ஆராய நேரடியாகக் களத்தில் குதிக்கிறார்.

இறுதியில் என்னவாகிறது.. விமலை தாக்கியவர்கள் யார்.. ஐ.ஜி. பெண்ணின் தற்கொலைக்கு யார் காரணம்.. சமீர் என்னவானான்.. என்பதற்கெல்லாம் விடைதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

விமல் வழக்கமான நாயகனாக இல்லாமல் கொஞ்சம் ஸ்பீடை கூட்டி நடித்திருக்கிறார். காதல் காட்சிகளில் வழக்கமாக இல்லாமல் கொஞ்சம் ஆக்ட்டிவ்வாக ரொமான்ஸை காட்டியிருக்கிறார். பல்வேறு காட்சிகளிலும் புதிய விமலை காண முடிந்திருக்கிறது. பாராட்டுக்கள்.

நாயகி மிஷா நரங்கிற்கு சில காட்சிகள்தான் கொடுக்கப்பட்டுள்ளதால் அதையும் சிறப்பாகவே செய்திருக்கிறார். சதீஷ் சில இடங்களில் கதையை நகர்த்தவும், புன்னகைக்க வைக்கவும் உதவியிருக்கிறார்.

சுரேஷ் மேனன் அழுத்தமான வில்லன் கேரக்டருக்கான நடிப்பை காண்பித்திருக்கிறார். இவரைவிடவும் முதல் வில்லனான பில்லி முரளியும், அவரது கையாட்களும், டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்தவரும் நன்றாகவே நடித்துள்ளனர்.

சமீராக நடித்திருக்கும் ஆனந்த் நாக்கும், ஐ.ஜி. பெண்ணான சுபிக்சாவும் தங்களது கேரக்டருக்கான நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள். “சமீர் எங்கே” என்று சுபிக்சா தன் அப்பாவிடம் அழுத்தமாகக் கேட்கும் காட்சியில் முழு கவனத்தையும் அவர் பக்கம் ஈர்த்திருக்கிறார்.

ராம்மியின் ஒளிப்பதிவு தரமானது. சில இடங்களில் ட்ரோன் ஷாட்டுக்களை அழகாக எடுத்துக் காட்டியிருக்கிறார். பாடல் காட்சிகளையும் ரம்மியமாக படமாக்கியிருக்கிறார்.

ராகவ் பிரசாத்தின் இசையில் பாடல்களும் சுகமானதுதான். மும்பையை சேர்ந்த ‘இந்தியன் சகீரா’ என அழைக்கப்படும் சினேகா குப்தா இந்தப் படத்தில் வா பாவா’ என்ற குத்துப் பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். படத்தின் ஹை லைட்டான அம்சங்களில் ஒன்றாகவும் லேசாக கண்ணயர்ந்தவர்களைத் தட்டி எழுப்பியும் உள்ளது இந்தப் பாடல்.

சண்டை பயிற்சியில்தான் கொஞ்சம் சொதப்பியிருக்கிறார்கள். மெதுவாக அடித்து, மெதுவாக விழுந்து, மெதுவாக உடற் பயிற்சி செய்வதைப் போலவே அமைத்திருக்கிறார்கள்.

முதலில் இருந்து கடைசிவரையிலும் படத்தை போரடிக்காமல் கொண்டு சென்றிருப்பதால் படத்தை ரசித்துப் பார்க்க முடிகிறது.

இயக்குநர் வேலுதாஸ் தனது கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று அனைத்திலுமே பாஸ் மார்க் வாங்கி பாஸாகியிருக்கிறார். விமலை மிகச் சிறப்பாக நடிக்க வைத்தமைக்காகவே அவருக்கு நமது ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

RATING : 3.5 / 5

Our Score