இந்தப் படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் வம்சி, பிரமோத் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
படத்தில் அனுஷ்கா ஷெட்டி, நவீன் பொலிஷெட்டி, ஜெயசுதா, நாசர், துளசி, முரளி சர்மா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – பி.மகேஷ்பாபு, ஒளிப்பதிவு – நீரவ்ஷா, இசை – ரதன், படத் தொகுப்பு – கோடகிரி வெங்கடேஸ்வரராவ், பத்திரிக்கை தொடர்பு – யுவராஜ்.
இந்தப் படம் தெலுங்கில் தயாரிக்கப்பட்டு தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பாளரான கே.ஈ.ஞானவேல்ராஜா வெளியிட்டுள்ளார்.
2020-ம் ஆண்டில் ‘சைலன்ஸ்’ என்ற படத்தில் நடித்த பின்பு அனுஷ்கா நடிப்பில் அடுத்து வெளியாகியிருக்கும் படம் இது. தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன் என்ற முடிவில் உறுதியாய் இருந்த அனுஷ்காவுக்கு இந்தப் படம் நிச்சயமாக வெற்றிப் படம்தான்.
லண்டனில் ஒரு ஹோட்டலில் மாஸ்டர் செப்பாக வேலை செய்து வருகிறார் அனுஷ்கா. அவருடைய அம்மா அவரை திருமணம் செய்து கொள்ளும்படி பல முறை வற்புறுத்தியும் தனக்கு கல்யாணமே வேண்டாம் என்று சொல்லி பிடிவாதமாக மறுத்து வருகிறார்.
இந்த நிலையில் அவருடைய அம்மா கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டதால் அனுஷ்காவுடன் இந்தியா திரும்புகிறார். இங்கேயும் அனுஷ்கா ஒரு ஹோட்டலில் மாஸ்டர் செப்பாக வேலைக்கு சேர்ந்திருக்கிறார். கேன்சர் நோய் முற்றியதால் அவருடைய அம்மா இறந்துவிட, தனி மரமாகிறார் அனுஷ்கா.
இப்போது உடன் இருக்கும் தோழிகளும் அவரை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்துகிறார்கள். அனுஷ்கா அதை மறுத்து தான் திருமணம் செய்து கொள்ளாமலேயே செயற்கை கருத்தரிப்பு முறையில் பிள்ளை பெற்றுக் கொள்வதாக கூறுகிறார். நினைத்தது போலவே அதற்கான முயற்சிகளிலும் ஈடுபடுகிறார்.
மருத்துவர்களின் அறிவுரையின்படி தானே தனக்கான விந்து தானம் அளிக்கும் நபரைத் தேடிப் பிடிக்கும் வேலையைத் தொடங்குகிறார் அனுஷ்கா. நல்ல குணமுள்ள, அழகுள்ள ஆண்களைத் தேடுகிறார் அனுஷ்கா.
அந்தத் தேடுதல் வேட்டையில் சிக்குகிறார் நவீன் பொலிஷெட்டி. கம்ப்யூட்டர் என்ஜீனியரிங் படித்துவிட்டு ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்யும் நவீன், ஸ்டாண்ட்அப் காமெடி செய்யவே விரும்புகிறார். இந்த வேலையையும் கூடவே செய்து வருகிறார்.
இவருடைய ஸ்டாண்ட் அப் காமெடியை பார்த்துவிட்டுத்தான் அனுஷ்கா இவரை அப்ரோச் செய்கிறார். தனது ஹோட்டலில் நவீனுக்கு நிகழ்ச்சியை நடத்துவதாகச் சொல்லி அவரை நேர்காணலெல்லாம் செய்து ஏமாற்றுகிறார்.
இந்த நேர்காணல் நாட்களில் அனுஷ்காவின் அழகு, குணம், பேச்சு, நடத்தை எல்லாவற்றையும் ரசித்துப் பார்க்கும் நவீன் அனுஷ்காவை காதலிக்கத் துவங்குகிறார். நவீன் தன் காதல் விஷயத்தை அனுஷ்காவிடம் சொல்ல, அவரோ தனக்கு தற்போது காதலெல்லாம் இல்லை. கல்யாணத்தில் எல்லாம் இஷ்டமில்லை. விந்து தானம் அளிக்க தகுதியான ஒருவர் வேண்டும். அதற்காகத்தான் உன்னிடம் பழகினேன் என்று குட்டையை உடைக்கிறார். அதிர்ச்சியாகும் நவீன் அதற்கு மறுப்புத் தெரிவித்து அனுஷ்காவை அதிர்ச்சியாக்குகிறார்.
இதற்குப் பின் என்ன நடந்தது.. அனுஷ்காவுக்கு அந்த தானம் கிடைத்ததா.. நவீனின் காதல் என்னானது என்பதுதான் இந்த ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படத்தின் திரைக்கதை.
ஏற்கெனவே ஹிந்தியில் ‘விக்கி டோனர்’ என்ற படத்திலும், தமிழில் வெளிவந்த இதன் தமிழ்ப் பதிப்பான ‘தாராள பிரபு’ படத்திலும் விந்து தானம் பற்றி நமது சினிமா ரசிகர்கள் நிறையவே தெரிந்து வைத்துள்ளார்கள். ஆனால் அதில் நாயகன் விருப்பப்பட்டு கொடுக்கிறான். ஆனால் இதில் நாயகி கேட்கிறாள். இதுதான் வித்தியாசம்.
அழுத்தமான ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் அனுஷ்கா. நகைச்சுவை தெறிக்கும் அளவுக்கு வசனம் பேசியும், நடிப்பைக் காட்டியும், சிச்சுவேஷன் காமெடியை திரையில் கொணர்ந்து சிரிக்க வைத்திருக்கிறார். மேலும் அவருடைய மிடில் ஏஜ் ஆண்ட்டிகளுக்கே உரித்தான உடல் வாகுவும், மறுதலிப்பில்கூட ஒரு புன்னகையை சிந்தி நம்மைத் தடுமாற வைக்கும் அந்த நடிப்பும் ரசிகர்களை நிச்சயமாக சொக்க வைக்கிறது.
நவீன் பார்த்தவுடன் பிடித்துப் போகும் பையனாகவே தெரிகிறார். ஸ்டாண்ட் அப் காமெடியன் என்ற கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு கச்சிதமாகப் பொருந்திப் போகிறார். இவர் பேசும் பல வசனங்களும், நடித்திருக்கும் நடிப்பும் படத்தில் பல இடங்களில் வாய்விட்டு சிரிக்க வைத்திருக்கிறது.
தன்னுடைய அம்மா, அப்பாவின் ரொமான்ஸை ஸ்டாண்ட் அப் காமெடியில் சொல்லிவிட்டு அதைக் கேட்டுவிட்ட அப்பாவின் ரியாக்ஷனை தாங்க முடியாமல் தவிக்கும் காட்சியிலும், டெஸ்ட்டுக்கு அனுஷ்கா வரச் சொன்னதை தவறாகப் புரிந்து கொண்டு வந்து புரியாமல் பேசும் காட்சியிலும் தியேட்டரில் தொடர்ந்து கை தட்டல்கள் பறந்து கொண்டேயிருக்கின்றன. இந்த அளவுக்கு காமெடியை வெளிக்கொணர்ந்திருக்கும் இயக்குநருக்கும் நமது பாராட்டுக்கள்.
இவருக்குமான வயது வித்தியாசம் கூட, குறைய இருப்பதைக்கூட, திரைக்கதையில் அழகாக தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். ஜெயசுதா, துளசி, முரளி சர்மா, நாசர், நவீனின் உற்ற நண்பன் என்று மற்றவர்களும் தங்களுக்கான நடிப்பைக் குறையி்லலாமல் காட்டியிருக்கிறார்கள். அதிலும் முரளி சர்மாவின் அலட்டல் இல்லாத அக்கறையான பேச்சும், கேள்வியும், கண்டிப்பும் ரசிக்க வைக்கிறது.
ஏ கிளாஸ் படம் என்பதை நீரவ்ஷாவின் ஒளிப்பதிவும் சுட்டிக் காட்டுகிறது. பணக்காரத்தனம் ஒளிப்பதிவில்கூட தெரிவது அழகுதான். லேடி லக், என்னமோ நடக்குது, நோ நோ, ஆறாதோ, ஏதோ திசை என்று பாடல்கள் வேறு, வேறாக படத்தில் இடம் பெற்றுள்ளன. மால் தியேட்டரில் அனுஷ்காவிடம் காதலை சொல்ல வருமிடத்தில் ஒலிக்கும் ஆட வைக்கும் அட்டகாசமான இசைக்குக் கச்சிதமாக ஒரு பாடலையும் போட்டிருக்கலாம்.
இதுவரையிலும் பார்க்காத ஒரு கதைக் களத்தில் வந்திருக்கும் இந்த ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ திரைப்படம் அனைத்து மொழி இளைஞர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனென்றால், இந்தக் கால இளைஞர்களை கவரும் விஷயங்கள் இந்தப் படத்தில் நிறையவே உள்ளது.
காதல் குறும்புகள், காதல் பாடல்கள் என்ற எதுவுமே இல்லாமல் அனுஷ்காவின் அழகையும், நவீனின் காமெடி குறும்புகளுடனும், தவிர்க்கவியலாத வயதுக்கு வந்தோருக்கான ஜோக்குகளுடனும் படத்தை மிக அழகாக, ஜாலியாக, ரகளையாக கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர்.
பிரபஞ்சத்தை நகர்த்தும், மேம்படுத்தும் காரணிகளில் முதலாவது மனிதர்களின் வளர்ச்சி. இதற்கு முதல் காரணியாக இருப்பது குடும்பங்களும், மனிதன் உருவாக்கும் வாரிசுகளின் எண்ணிக்கைதான். எந்தக் காலத்திலும் சக மனிதர்களுக்கு உற்ற துணையையும், நம்பிக்கையும், அன்பையும், ஆதரவையும் தரும் என்பதற்காகவே உருவாக்கப்பட்டதுதான் குடும்பம் என்ற கான்செட்ப்.
திருமணம், குடும்பம் மீது நம்பிக்கையில்லை என்று சொல்பவர்களின் உண்மையான காரணம் அது பற்றி அவர்களுக்குள் இருக்கும் பயம். அந்தப் பயத்தைப் போக்கிவிட்டால் இன்றைக்கு உலகம் முழுவதும் குடும்பங்கள் சிதைந்து போய்க் கொண்டிருக்காது. அந்தக் கருத்தை கடைசியில் முன் வைத்திருக்கும் இந்தப் படத்தை இதற்காகவே நாம் பெரிதும் பாராட்டலாம்..!
இந்த ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படம் அனைத்து இளைஞர்களும், இளைஞிகளும் பார்த்தே தீர வேண்டிய திரைப்படம், மிஸ் பண்ணிராதீங்க..!
RATING : 4 / 5