full screen background image

அங்காரகன் – சினிமா விமர்சனம்

அங்காரகன் – சினிமா விமர்சனம்

ஜூலியன் & ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

இந்த படத்தின் கதாநாயகனாக ஸ்ரீபதி நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளதுடன், கிரியேட்டிவ் இயக்குநராகவும் இந்தப் படத்தில் பணியாற்றியுள்ளார் ஸ்ரீபதி.

டெரரான ஒரு போலீஸ் அதிகாரி வேடத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். மலையாள நடிகை நியா இந்தப் படத்தில் கதாநாயகியாக தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமாகியுள்ளார்.

மேலும் ‘அங்காடி தெரு’ மகேஷ், ரெய்னா காரத், ரோஷன், அப்புக்குட்டி, தியா, நேகா ரோஸ், குரு சந்திரன், கேசிபி பிரபாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘பீஸ்ட்’ படத்தில் இடம் பெற்ற ஹிட் பாடலான ‘ஜாலிலோ ஜிம்கானா’ உள்ளிட்ட 125-க்கும் மேற்பட்ட சூப்பர் ஹிட் பாடல்களை எழுதிய கு.கார்த்திக், இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

‘சூது கவ்வும்’, ‘இன்று நேற்று நாளை’, ‘மரகத நாணயம்’ உள்ளிட்ட படங்களில் வசனங்களில் பங்களிப்பு செய்த கருந்தேள் ராஜேஷ், இந்த படத்தின் வசனங்களை எழுதியுள்ளார்.

ஒளிப்பதிவு & இயக்கம் – மோகன் டச்சு, திரைக்கதை, இயக்கம் (கிரியேடிவ்) – ஸ்ரீபதி, ஒளிப்பதிவாளர் (2வது) – ஆர்.கலைவாணன், வசனம் – கருந்தேள் ராஜேஷ், படத் தொகுப்பு – மதுரை வளர் பாண்டியன், இசை – கு.கார்த்திக், சண்டை பயிற்சி இயக்கம் – ஜாக்கி ஜான்சன், நடனப் பயிற்சி இயக்கம் – வாசு நவநீதன், கலை இயக்கம் – கே.மதன், நிர்வாக தயாரிப்பு – S.கிறிஸ்டி, தயாரிப்பு வடிவமைப்பு – L.விவேக் (Primerose Entertainment), பத்திரிகை தொடர்பு – A.ஜான்.

இந்தப் படத்தை இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநரான மோகன் டச்சு, பிரபல பாலிவுட் இயக்குநரான ராம்கோபால் வர்மாவிடம் ‘சர்க்கார்-3’, ‘கில்லிங் வீரப்பன்’ ம’ற்றும் ‘சின்ட்ரெல்லா’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராக, ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்.

இந்தப் படத்திற்கு ‘அங்காரகன்’ என்று ஏன் பெயர் வைத்தார்கள் என்றால், படத்தின் துவக்கத்தில் காட்டப்படும் முன் கதைச் சுருக்கத்தில் வரும் குறிஞ்சி மலைப் பகுதியில் பிரிட்டிஷ் படைகளை எதிர்த்துத் தீரத்துடன் போரிட்டு மாண்ட விடுதலை வீரனின் பெயர் அங்காரகன்’ என்பதாலாம்.

உண்மையில் ‘அங்காரகன்’ என்பவர் நவக்கிரகங்களில் ஒன்றான செவ்வாய் கிரகத்தின் அதிபதி. ‘அங்காரகன்’ என்றால் ‘சிவப்பு நிறத்தவன்’ என்று பொருள். இவர் ஒரு போர்க் கடவுள் மட்டுமல்ல; பிரம்மச்சாரியும்கூட.!

கொடைக்கானலில் குறிஞ்சி மலை ஒரு இயற்கை எழில் வாய்ந்த தங்குமிடம். அங்கே குறிஞ்சி’ என்ற பெயரிலேயே ஒரு காட்டேஜ் இயங்கி வருகிறது. ஆனால், வெகு தூரத்தில் மலை மீது இருப்பதால், வெகு சிலர்தான் அங்கே வந்து தங்கிவிட்டுச் செல்கிறார்கள்.

அந்தக் காட்டேஜில் தற்போது அங்காடி தெரு’ மகேஷ் மேனேஜராகப் பணியாற்றி வருகிறார். காட்டேஜின் செக்யூரிட்டி அப்புக்குட்டி. காட்டேஜின் இன்சார்ஜ், கூட்டிப் பெருக்க ஒரு பெண், காட்டேஜின் உரிமையாளரான அம்மாவும், அவரது மகளும் என்று.. இவர்கள்தான் நிரந்தரமாக இங்கே இருப்பவர்கள்.

்ரீபதி – நியா ஜோடி தேன்நிலவுக்காக இந்தக் காட்டேஜூக்கு வருகிறார்கள். மேலும் ரோஷன் உதயகுமார் தன் தோழி பூஜிதா மற்றும் அவளது தோழியான ரெய்னா காரத்துடன் அங்கு வருகிறார். இவர்கள் தவிர ஒரு பெண் எழுத்தாளரும், ஒரு நடுத்தர வயது மிலிட்டிரிக்காரரும், அவரது மனைவியும் என்று சிலர் மட்டுமே வந்து தங்கியுள்ளனர்.

மறுநாள் காலையில் ரோஷனை காதலிக்கும் ரெய்னா காரத் காணாமல் போயிருக்கிறார். அடுத்து பெண் எழுத்தாளரும் காணாமல் போயிருக்கிறார்.

இதைப் பற்றி விசாரிக்க வருகிறார் லோக்கல் இன்ஸ்பெக்டரான அதிவீரபாண்டியன் என்ற சத்யராஜ். அவரும், அவரது போலீஸ் குழுவினரும் இந்த வழக்கை எப்படி துப்பறிந்தார்கள்..? காணாமல் போன பெண்கள் கிடைத்தார்களா..? இல்லையா..? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

சத்யராஜின் நடிப்புக்கு இந்தப் படம் முழுமையாகத் தீனி போடவில்லை. கொஞ்சம் ஓவர் ஆக்ட்டிங்காகவும் நடிக்க வைத்துள்ளனர். “என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேன்றீங்களே..” என்று சமயம் பார்த்து வசனம் பேசி கலகலப்பாக்குகிறார்.

மேலும் தன் மொட்டைத் தலையைத் தானே கிண்டல் செய்து பேசும்போது, சப்-இன்ஸ்பெக்டரிடம் எகத்தாளமாகப் பேசி சமாளிக்கும்போதும் பழைய சத்யராஜை கொஞ்சம் பார்க்க முடிகிறது. கிளைமாக்ஸில் சத்யராஜ் கொடுக்கும் டிவிஸ்ட் அதிரி புதிரி திரைக்கதை.

சப்-இன்ஸ்பெக்டராக நடித்தவர் அவ்வப்போது, சத்யராஜ் டென்ஷன் ஆகும்போதெல்லாம் “ஒரு அஞ்சு நிமிஷம் கொடுங்க சார்… நான் விசாரிக்கிறேன்..” என்று கேட்டு அவர்களைத் தனியே அழைத்துச் சென்று விசாரிப்பது சிச்சுவேஷன் காமெடியில் சிரிக்க வைக்கிறது.

படத்தின் நாயகன் என்னும் அளவுக்கு ஸ்ரீபதிதான் நடித்திருக்கிறார். எப்போதும் மது போதையில் இருக்கும் இவர் அங்கே பலவித சேட்டைகள் செய்து தன் மீது சந்தேகம் வரும் அளவுக்கு நடந்து கொள்கிறார். ஒரு குடிகாரன் எப்படி நடந்து கொள்வானோ.. இருப்பானோ அதில் 25 சதவிகித்தை செய்திருக்கிறார். அவரால் முடிந்தது அவ்வளவுதானாம்..!

மலையாள நடிகையான நியா கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஒரு பாடல் காட்சியில் நீச்சல் குளத்தில் குளித்து கவர்ச்சியை ஊட்டியிருக்கிறார். இருந்தாலும் நியாவின் முகமே கொள்ளை அழகு. இந்த முகத்தைவிட்டுவிட்டு உடலைப் பார்க்க யாருக்கு ஆசை வரும்..?

ரோஷன் உதயகுமார் இளம் நாயகனாக நியாவைச் சுற்றிச் சுற்றி வரும் கதாப்பாத்திரத்தை செவ்வனே செய்துள்ளார். பெண்களை ஈர்க்கும்வகையில் பேசிப் பழகும் இவரது உடல் மொழி, இளமை, நடிப்பு மூன்றுமே சிறப்புதான்.

ரெய்னா காரத் இரட்டை வேடங்களில் குறையில்லாமல் நடித்துள்ளார். நியாவுக்குப் போட்டியாக உள்ளது இவரது அழகு.

காட்டேஜ் உரிமையாளராக நடித்திருக்கும் நாயகியும் சிறப்பாக நடித்துள்ளார். அப்புக்குட்டி சில காட்சிகளில் கூட்டத்தோடு கூட்டமாக நின்றாலும், சத்யராஜின் விசாரணையின்போது சிரிக்க வைத்துவிட்டார்.

படத்தின் இயக்குநரான மோகன் டச்சுவே இப்படத்தின் ஒளிப்பதிவு பணியையும் செய்துள்ளார். கொடைக்கானல் மலைப் பகுதிதான் கதைக் களம் என்பதால் ஆர்ப்பாட்டமில்லாமல் இயற்கை அழகை மிக அழகாகப் படம் பிடித்திருக்கிறார்.

கு.கார்த்திக்கின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்தான். பின்னணி இசையையும் சுமாராகவே போட்டு சமாளித்திருக்கிறார்.

வசனகர்த்தா கருந்தேள் ராஜேஷின் வசனங்கள் படத்தின் திரைக்கதையை நகர்த்தியிருந்தாலும் நாடகத்தனமான வசனங்களை வைத்து, அதற்கு உயிர் கொடுக்க முனைந்துள்ளார் இயக்குநர்.

இந்தக் கதையின் ஆணி வேராக இருக்கும் அங்காரகன் என்ற பெயருக்கான காரணத்தைச் சொல்லும்விதமாக படத்தின் துவக்கத்தில் முன் கதை சுருக்கமாக, இந்த குறிஞ்சி மலைப் பகுதியின் கதையைச் சொல்லியிருக்கிறார்கள்.

1800-களில் இருந்த அப்போதைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் குறிஞ்சி மலைவாழ் பகுதி மக்கள் அனைவரையும் வஞ்சகமாக கொன்று குவிக்கின்றனர். பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்த அங்காரகன் மற்றும் அவரது மனைவி, அவரது கூட்டாளிகள் அனைவருமே கொல்லப்படுகிறார்கள். இப்போது இந்த இடத்தில்தான் இந்த குறிஞ்சி காட்டேஜ் அமைக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

பிரிட்டிஷ் படைகளால் கொல்லப்பட்டவர்களில் ஒரு சிலர்தான் ஆவியாக அங்கே தெரிவதாக சொல்லி, ஒரு ஆவி கதையையும் வலுக்கட்டாயமாகத் திரைக்கதையில் திணித்திருக்கிறார்கள்.

காணாமல் போன பெண்களைப் பற்றி நடக்கும் போலீஸ் விசாரணையில் ஒவ்வொருவரும், ஒவ்வொருவிதமான கதைகளைச் சொல்லி நம் பொறுமையை ரொம்பவே சோதித்திருக்கிறார்கள். அடுத்து எந்தப் பக்கம் கதையைத் திருப்புவது என்பதே தெரியாமல் இயக்குநர் கொஞ்சம் தடுமாறியிருக்கிறார் என்பது திரைக்கதையிலேயே தெரிகிறது.

ஒன்று போலீஸ் துப்பறிந்து கண்டு பிடிக்கும் தேடுதல் வேட்டை படமாக உருவாக்கியிருக்கலாம். அல்லது முன் ஜென்மத்தில் வாழ்ந்து மறைந்து, இப்போது பேயாக இருப்பவர்கள் அட்டகாசங்களாகவும் ஆக்கியிருக்கலாம். அல்லது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நடந்த அந்தப் போரையே கதையின் களமாக ஆக்கி திரைக்கதையை மாற்றி அமைத்திருக்கலாம்.

ஆனால் இது எதையும் முழுமையாக அமைக்காமல் அதில் கொஞ்சம், இதில் கொஞ்சம் என்று எடுத்துக் கலக்கி, குழப்பியதில் நாமும் குழம்பித்தான் போனோம்.

கிளைமாக்ஸில் இருக்கும் ஒரு டிவிஸ்ட்டை மட்டுமே நம்பி, இயக்குநர் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் என்பது கடைசியில்தான் நமக்கே புரிகிறது. அந்தக் கடைசி காட்சிக்காக இரண்டு மணி நேரம் நாங்க தாங்கணுமாங்கண்ணா..?!

RATING : 2 / 5

Our Score