தூங்காவனம் – சினிமா விமர்சனம்

தூங்காவனம்  – சினிமா விமர்சனம்

“இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை.. இது பிரெஞ்சு, பெல்ஜியம், லக்சம்பர்க் ஆகிய நாடுகளின் கூட்டு தயாரிப்பில் 2011-ம் ஆண்டு வெளியான sleepless night என்கிற பிரெஞ்சு மொழி படத்தின் ரீமேக் இல்லை…” என்று கடைசியாக நடந்த ‘தூங்காவனம்’ படத்தின் பிரஸ்மீட்டில் சத்தமாக கூறிய இயக்குநர் ராஜேஷை, இப்போது எப்படி திட்டுவது என்றே தெரியவில்லை.

படத்தின் டைட்டிலேயே ‘இந்தப் படம் ‘sleepless night’ படத்தினை அடிப்படையாகக் கொண்டது’ என்றே சொல்கிறார்கள். பின்பு எதற்கு இப்படியொரு பொய்யுரை..? வளர்ந்து வரும் வேளையில் இதெல்லாம் தேவையா இயக்குநர் ஸார்.,.?

இரண்டாவது சங்கடம்.. படத்தின் ஒரிஜினல் படமான ‘sleepless night’  படத்தின் ஒரிஜினல் திரைக்கதை ஆசிரியர்களான Frederic Jardin, Nicolas Saada – இவர்களின் பெயர்களைத்தான் இந்தப் படத்தின் ‘திரைக்கதை’ இடத்திலும் போட்டிருக்க வேண்டும். ஏனெனில் அந்த ‘sleepless night’ படத்தின் திரைக்கதை அப்படியே இந்தப் படத்திலும் இருப்பதுதான்.

ஆனால் ‘தூங்காவனம்’ படத்தின் ‘திரைக்கதை’ என்னும் இடத்தில் நடிகர் கமல்ஹாசன் தன் பெயரை போட்டுக் கொண்டது முற்றிலும் நியாயமற்றது. ‘கூடுதல் திரைக்கதை’ என்று வேண்டுமானால் போட்டிருக்கலாம் கிளைமாக்ஸில் வரும் ஒரு புதிய காட்சிக்காக மட்டும்..!

கமல் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் போலீஸ் அதிகாரி. என்னதான் தடுத்தாலும் போதைப் பொருட்களின் வரவு அதிகரித்துக் கொண்டே இருப்பதால் அடிவேரை தேடுவதைவிடவும், தலையைத் தேடுவது உத்தமம் என்றெண்ணி அதற்காக ஒரு ஆபரேஷனை துவக்குகிறார்.  இந்த ஆபரேஷனில் குடும்பக் கஷ்டத்திற்காக பணத்திற்கு அலையும் சக அதிகாரியான யூகிசேதுவை எதுவும் சொல்லாமல் கூட்டணி சேர்த்துக் கொள்கிறார்.

கிலோ கணக்கில் இருக்கும் போதை பொருள் ஒன்று கை மாறப் போவதை துப்பறியும் அவரும், யூகிசேதுவும் அதைக் கைப்பற்ற முயல்கிறார்கள். இந்த சண்டையில் யூகிசேது தன் துப்பாக்கியை பயன்படுத்த நேரிடுகிறது. கடத்தல்காரர்களில் ஒருவன் குண்ட்டிபட்டு சாகிறான். இன்னொருவன் தப்பியோடுகிறான். அதுவொரு விடியற்காலை பொழுது என்பதால் சாலையில் கூட்டமே இல்லை என்பதாலும் போதை பொருளுடன் தப்பியோடுகிறார்கள் கமலும், யூகிசேதுவும்.

ஆனால் தப்பி வந்த கடத்தல்காரனால் போதைப் பொருளை கைப்பற்றி சென்றது கமல்ஹாசன்தான் என்பது அதே ஊரில் நைட் கிளப் நடத்தும் அந்த போதை தொழிலின் ஏஜெண்ட் பிரகாஷ்ராஜுக்கு தெரிய வர.. சட்டென்று கமல்ஹாசனின் மகனை கடத்திச் செல்கிறார்.

கடத்திச் சென்ற போதை பொருள் கைக்கு வந்தால் பையனும் பத்திரமாக திரும்பி வருவான் என்கிறார் பிரகாஷ் ராஜ். தன்னைவிட்டு பிரிந்து டாக்டரான மனைவியால் மகனுடன் தனியே வாழும் கமலுக்கு மகன் மீது கொள்ளைப் பிரியம்.

போதை பொருளைவிட மகனே பிரதானம் என்று நினைத்து அதனை திரும்ப ஒப்படைக்க அந்த நைட் கிளப்பிற்கு போதை பொருள் இருக்கும் பேக்குடன் செல்கிறார் கமல்.

போதைப் பொருளை ஒப்படைத்தாரா..? மகனை மீட்டாரா என்பதுதான் இந்த இரண்டு மணி 7 நிமிடம் அடங்கிய ஒரு விறுவிறு, துறுதுறு திரைக்கதை அடங்கிய திரைப்படத்தின் கதை..!

ஒரு இரவு விடுதிக்குள்ளேயே படமாக்கப்பட்டிருப்பதால்  படம் ஒரு புதிய அனுபவத்தைத் தருகிறது.  அதோடு திரைக்கதையும் நூல் பிடித்தாற்போல் அடுத்தடுத்து நடக்கின்ற அதிரடி சம்பவங்களில் எந்தவித குழப்பமும் இல்லாமல் போவதால் நம் கவனத்தை அந்தப் பக்கம் இந்தப் பக்கமென்று திருப்பக்கூட மனசில்லை.

பேக்கை த்ரிஷா மாற்றி வைக்க.. அதனை கிஷோர் தூக்கிச் செல்ல.. காணாமல் போன பேக்கிற்காக மைதா மாவு பேக்கை கமல் ரெடி செய்வது.. கடைசி நேரத்தில் சம்பத் இதைக் கண்டுபிடிப்பது.. தொடர்ச்சியான திரிஷா கமல் கிஷோர் மோதல்கள்.. பையனை மீட்க போராடி தோல்வியடைந்துவிடாமல் கமல் மீண்டும் மீண்டும் முயல்வது.. இடையிடையே போனில் ‘பிள்ளை எங்கே?’ என்று கேட்கும் முன்னாள் மனைவியை சமாளிப்பது.. எல்லாவற்றுக்கும் மேலாக கமல் தன் வயிற்றில் காயம்பட்ட அந்த வலியையும் அடிக்கடி காண்பித்தபடியே நடித்திருப்பது.. என்று படத்தில் பலவித ஊறுகாய்களே மெயின் சாப்பாடு போலவே தீனி போட்டிருக்கின்றன.

யூகிசேதுவும் இதில் ஒரு சீக்ரெட் பிளானோடு இருக்கிறார் என்பது கமலுக்கும் தெரியவில்லை. ஆனால் அது தெரிய வரும் இடம் டச்சிங்கானது. அதற்கு யூகிசேது கொடுக்கும் ‘சாப்பிடணுமே’ என்கிற ஆக்சன் சூப்பர்..! அந்த ஒரு காட்சியில் அமர்க்களப்படுத்திவிட்டார் யூகி.

கமல் என்றாலே முத்தக் காட்சி இருந்தாக வேண்டும் என்பதென்ன கட்டாயமா..? த்ரிஷாவுடன்தான் முத்தம் என்று காத்திருக்க மதுஷாலினிக்கு அடித்தது யோகம்.. 4 முறை லிப்லாக்கில் ஈடுபடுகிறார்கள் இருவரும். இது வலிந்து திணிக்கப்பட்ட காட்சியாகத்தான் தெரிகிறது. முத்தம் கொடுக்காமலேயே தப்பிச் செல்ல வாய்ப்பிருக்கிறதே..?

வேகமான திரைக்கதைக்கு ஈடாக படத்தில் பெரும்பாடுபட்டு உழைத்திருக்கிறார் கேமிராமேன் ஜான் வர்கீஷ். சமையலறை சண்டை காட்சியிலும், திரிஷா கமல் மோதலிலும் தெறிக்கவிடுகிறார் கேமிராமேன்.

அதே நைட் பார்.. அதே டிஸ்கோத்தே ஹால்.. பிளே ஹால்.. டைனிங் ஹால்.. பார்.. சீட்டுக் கச்சேரி நடக்குமிடம் என்று அனைத்துக்கும் விதவிதமான செட்டிங்ஸ் அமைத்து அனைத்திற்கும் ஒரு லின்க்கையும் கொடுத்து செட் செய்திருக்கும் கலை இயக்குநருக்கு இதற்காகவே ஒரு ஷொட்டு..!

படத்தில் கேரக்டர் செலக்ஷனையும் பாராட்டித்தான் ஆக வேண்டும். திரிஷாவைத் தவிர..! போலீஸ் கேரக்டருக்கு திரிஷாவை பார்த்தால் கான்ஸ்டபிளாக்கூட சொல்ல முடியாது. பிரெஞ்சு படத்தின் அதே கேரக்டர் ஸ்கெட்ச்சை இந்த தமிழ்ப் படத்திலும் வைத்துவிட்டார்களோ என்ற கவலையும் பிறக்கிறது.

கமல், கிஷோர், யூகிசேது, த்ரிஷா நால்வரின் போலீஸ் பதவிகள் என்னவென்று தெரியவில்லை. இதில் கிஷோரும், த்ரிஷாவும் என்னவொரு பதவியில் இருக்கிறார்கள் என்பதே தெரியாத நிலையில் அவர்களும் இதில் இடையில் புகுந்து கலகம் செய்வதும், கமல்ஹாசனுடன் கைகலப்பில் ஈடுபடுவதும், வேகமான திரைக்கதையில் போயே போய்விட்டது. இப்போது யோசித்தால்தான்..?

கமலின் மகனாக நடித்த பையனே சிறப்பாக நடித்திருக்கிறான். இவனுக்கும், ஜெகனுக்குமான காட்சிகளை வைத்தே ஒரு முழு படத்தை இயக்கலாம்.

படத்தின் வசனகர்த்தாவான சுகாவின் சில வசனங்கள் லாஜிக் மீறியும் சிரிக்க வைத்திருக்கின்றன. அந்தச் சூழலை உணர வைக்கின்றன. உதாரணமாக கமலின் மகனும், ஜெகனும் பேசுகின்ற பேச்சு.. ஜெகனை கோபப்பட வைக்க கமலின் மகன் தூண்டில்போட்டு பேசுவதெல்லாம் செம.. “ஒரு மைதா மாவுக்காக ஏன் இந்த 3 பேரும் இப்படி அடிச்சுக்குறாங்க…” என்ற சாம்ஸின் கேள்விக்கு அந்த ஒரு களேபரத்திலும் சிரிக்கத்தான் முடிந்தது..! கடைசி காட்சியில் ஆஷா சரத்திற்கு போன் செய்யும் மகன், “சீக்கிரம் வாம்மா.. இங்க அப்பாவை பார்த்துக்க நிறைய பேர் ரெடியா இருக்காங்க..” என்று அழுத்தமாகச் சொல்வதும் டச்சிங்கான காமெடி..!

சில காட்சிகளே என்றாலும் ஆஷா சரத்தின் முகம் இப்போதும் நிழலாடுகிறது. “போலீஸுக்கு போகட்டுமா..?” என்று கேட்டு சற்று இடைவெளிவிட்டு, “நிஜ போலீஸ்கிட்ட…” என்று சொல்லும்போது தன் நெஞ்சை பிடித்து வலிப்பது போல கமல் காட்டும் ஆக்சன் ஏ ஒன்.

பெர்பெக்ஷன் ஈக்குவல் டூ கமல்ஹாசன் என்பார்கள்.. ஒரு காட்சியில்கூட தேவையில்லாத ஆட்களோ.. விஷயங்களோ இருக்காது. இதிலும் ஒரு காட்சி.. கக்கூஸில் கக்கா போய்க் கொண்டிருக்கும் சம்பத்தின் ஆளை மேலையிருந்து உதைத்து கீழே தள்ளுகிறார் கமல்ஹாசன். கக்கா போன அவசரத்தில் இருந்தவன் அப்படியே கீழே விழுவான். டாப் ஆங்கிளில் அந்த சட்டிக்குள் இருக்கும் கக்காவைகூட கேமிராவில் பதிவாக்கி தனது பெர்பெக்ஷன் நேர்த்தியை காட்டியிருக்கிறார் கமல்ஹாசன். வாழ்க.. வளர்க..!

படத்தின் லாஜிக் மீறல்கள் எல்லையில்லாமல் இருக்கின்றன. மிகப் பெரிய ஓட்டையே.. அவ்வளவு பெரிய நைட் கிளப்பில் ஓனர் தன் அறைக்கு மட்டும்தான் சிசிடிவி செட் செய்து வைத்திருப்பாரா..? மற்ற இடங்களில் இருக்காதா என்ன..? இது ஒன்று போதும் இந்தப் படத்தைக் காலி செய்ய..! ஆனாலும் அதையெல்லாம் நினைக்க வைக்காத அளவுக்கு படத்தை உருவாக்கியிருப்பதால் இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா பாராட்டுக்குரியவராகிறார்.

ஒரு பாடல்கூட இல்லையென்பதும் படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட். பாடல் இல்லாத குறையை பின்னணி இசையில் நிரப்பியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

உமா ரியாஸ், சந்தானபாரதி, இயக்குநர் ராஜேஷ், சுகா, மது ஷாலினி என்று அனைவரின் முகத்திற்கும், நடிப்பிற்கும் ஒரு ஷொட்டு பாராட்டுக்கள்..!

இந்தப் படம் நிச்சயம் வசூலை குவிக்க வேண்டும். இல்லையென்றாலும் வரும் காலங்களில் கமலின் உயரிய படங்களில் இதுவும் ஒன்றாக இடம் பெற்றிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை..!

Our Score