OTT-யில் படம் வெளியாகப் போகிறது என்றால் பல தயாரிப்பாளர்கள் சந்தோஷப்படுவார்கள். மறைமுகமாக ‘ஆமாம்’ என்று சொல்லிவிட்டு நிம்மதியாக இருக்கிறார்கள்.
ஆனால் இங்கே ஒரு தயாரிப்பாளரோ, “ஓடிடியில் என் படம் வராது.. நிச்சயமாக தியேட்டர்களுக்குத்தான் வரும்..” என்று பதற்றத்துடன் விழுந்தடித்துக் கொண்டு ஓடோடி வந்து சொல்கிறார்.
அந்தப் படம் ‘லிப்ட்’. அந்தத் தயாரிப்பாளர் லிப்ரா புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் ரவீந்தர் சந்திரசேகர்.
இந்த ‘லிப்ட்’ படத்தில் ‘பிக் பாஸ்’ புகழ் கவின் ஹீரோவாகவும், அம்ரிதா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – எஸ்.யுவா, பின்னணி இசை, பாடல்கள் – மைக்கேல் பிரிட்டோ, சண்டை இயக்கம் – ஸ்டன்னர் சாம். எழுத்து, இயக்கம் – வினித் வரபிரசாத்.
தற்போது இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து படம் திரைக்கு வரத் தயாராக உள்ளது. இந்தக் கொரோனா 2-ம் அலை தாக்குதலின் ஊரடங்கால் தியேட்டர்கள் திறக்கப்படாததால் வெளியாகாமல்இருந்தது.

தற்போது இப்படம் ஓடிடியில் வெளியாவதாக தகவல் வெளியானது. இதை முற்றாக மறுக்கிறார் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர்.
அவர் இது பற்றிக் கூறுகையில், ‛‛100 சதவீதம் இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்கும்போது கண்டிப்பாக இந்த லிப்ட் திரைப்படம் வெளியாகும். இது தியேட்டருக்கான படம். ஓடிடியில் வெளியாகிறது என்ற தகவலை யாரும் நம்ப வேண்டாம்…” என தெரிவித்துள்ளார்.