‘ஆதார்’ என்ற பெயரில் உருவாகியிருக்கும் புதிய படத்தை வெளியிட விடாமல் ‘ஆதார்’ அட்டை வழங்கும் அமைப்பான ‘தனித்துவ அடையாள ஆணையம்’ தடுப்பதாக அந்தப் படத்தின் இயக்குநரான சுமன் கோஷ் புகார் கூறியுள்ளார்.
தேசிய விருதினைப் பெற்ற வங்க மொழிப் படமான ‘Podakkhep’ படத்தினை இயக்கிய இயக்குநரான சுமன் கோஷ் இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘ஆதார்’.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்கள் கட்டாயம் வாங்கியே ஆக வேண்டும் என்ற கட்டாயப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் ‘ஆதார்’ அட்டையை மையமாக வைத்துதான் இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் படம் தயாராகி ரிலீஸுக்கு வரும் நிலையில் திடீரென ‘ஆதார்’ அடையாள அட்டையை வழங்கி வரும் ‘தனித்துவ அடையாள ஆணையம்’ இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
இந்தப் படத்திற்கு சென்சார் சான்றிதழும் கிடைத்துவிட்டது. ஆனாலும் இந்த ஆணையம் இந்தப் படத்தில் தாங்கள் வழங்கும் ‘ஆதார்’ அட்டை பற்றி தவறான தகவல்களைப் பரப்புகிறது. இதனால் படத்தில் 26 இடங்களில் காட்சிகளை நீக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளதாம்.
இது குறித்து இயக்குநர் சுமன் கோஷ் பேசுகையில், “நான் இயக்கிய ‘ஆதார்’ படத்திற்கு கடந்த 2019-ம் ஆண்டு ஒன்றிய திரைப்பட சான்றிதழ் வாரியம் அனுமதி அளித்தது. அதே ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய தேதி திட்டமிட்டிருந்தோம்.
ஆனால், ரிலீஸ் தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக, இப்படத்திற்கு ‘உதய் ஆணையம்’ ஆட்சேபம் தெரிவிப்பதாக படத்தின் துணை தயாரிப்பு நிறுவனமான ஜியோ ஸ்டியோஸ் தகவல் தெரிவித்தது. இதனால், படத்தை குறிப்பிட்ட தேதியில் எங்களால் ரிலீஸ் செய்ய முடியவில்லை.
சென்சார் போர்டு ஒப்புதல் தந்த பிறகும், இந்த படத்தில் 28 இடங்களில் காட்சிகளை நீக்க வேண்டுமென உதய் ஆணையம் கூறியுள்ளது. ஆனால், அது வாய் வழி உத்தரவாக மட்டுமே கூறியுள்ளது. எந்தெந்த காட்சிகளை நீக்க வேண்டும் என விளக்கம் கேட்டு நானும் பல முறை இ-மெயில், கடிதம், போன் மூலமாக கேட்டும், அதிகாரப்பூர்வமாக எந்த பதிலும் தரவில்லை.
இதனால், கடந்த 6 மாத காலமாக படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. இந்த படம் ஆதார் கார்டுக்கு ஆதரவான படம். அப்படியிருந்தும் இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் தடுப்பது ஆச்சரியம் அளிக்கிறது.
படத்தில் ஏதாவது ஆட்சேபனை இருந்தால் பேசித் தீர்க்கலாம். அதைவிட்டுவிட்டு இது போன்று படத்தை வெளியிட விடாமல் தடுப்பது விநோதமாக இருக்கிறது..” என்று குற்றம்சாட்டியுள்ளார்.