“மூன்றாம் பிறை’ படத்திற்குப் பிறகு ‘சிவக்குமாரின் சபதம்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சிதான் தன்னை மிகவும் பாதித்ததாகச் சொல்கிறார் மூத்தத் தயாரிப்பாளரான டி.ஜி.தியாகராஜன்.
தன்னுடைய சத்யஜோதி பிலிம்ஸ் Inde Rebels நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள ‘சிவக்குமாரின் சபதம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில்தான் டி.ஜி.தியாகராஜன் இவ்வாறு பேசியுள்ளார்.
அவர் மேலும் பேசும்போது, “ஆதியின் படங்களை பார்த்திருக்கிறேன். ‘நட்பே துணை’ படத்தை பார்த்தேன் மிகவும் பிடித்திருந்தது. அந்த படத்தில் துணை கதாப்பாத்திரங்களுக்குக்கூட நிறைய வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தின் கதையை எனது மகன்தான் முழுதாக கேட்டார். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.
படம் முழுதாக முடிந்த பிறகுதான் நான் பார்த்தேன். இரண்டாம் பகுதி என்னை மிகவும் பாதித்தது. ஆதியை மனமார பாராட்டினேன். ‘மூன்றாம் பிறை’ படத்திற்கு பிறகு இந்தப் படம்தான் என்னை அதிகம் பாதித்தது.
இந்தப் படத்தில் தாத்தாவாக வரும் குமணன் அட்டகாசம் செய்துள்ளார். வில்லனாக நடித்திருக்கும் விஜய் கார்த்திக் மிக அழகாக செய்துள்ளார். கதிரின் நகைச்சுவையும் நன்றாக வந்துள்ளது. அர்ஜூன் ராஜா கொடுத்த பட்ஜெட்டில் ஒளிப்பதிவை அற்புதமாக செய்துள்ளார்.
எப்போதும் ஆதி படத்தில் நடிக்கும் நாயகிகள் பெரிய அளவில் வெற்றி பெறுவார்கள். அது போல் இந்த மாதுரி ஜெயின் பெரிய அளவில் வெற்றி பெறுவார்.
கோவிடால் திரையரங்குகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. நல்ல படங்களை தியேட்டரில் பார்த்தால்தான், நாம் அதை ரசிக்க முடியும். அதனால்தான் காத்திருந்து இப்படத்தை தியேட்டரில் வெளியிடுகிறோம்…” என்றார்.