“ஏதாவது பேசுனீங்க.. அவ்வளவுதான்..” – இயக்குநரின் பகிரங்க மிரட்டல்..!

“ஏதாவது பேசுனீங்க.. அவ்வளவுதான்..” – இயக்குநரின் பகிரங்க மிரட்டல்..!

தமிழ்த் திரைப்படத் துறை தற்போது அரசியல் களமாகிவிட்டது. ஆள், ஆளுக்கு அவரவர் அரசியல் கொள்கைகளைப் பரப்புரை செய்வதற்காக தங்களது திரைப்பட பணியைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இதில் லேட்டஸ்ட் இயக்குநர் ஜி.மோகன். இவர் இயக்கி வெளியான ‘திரெளபதி’ திரைப்படம் பொய்யான காதலைச் சொல்லி சிலர் பணம் பறிக்கிறார்கள் என்ற கருவின் அடிப்படையில் உருவானது. ஆனால் அது கடைசியில் ஒரு குறிப்பிட்ட ஜாதியின் ஆண்கள் செய்யும் மொத்தக் காதல்களுமே இப்படித்தான் என்பதுபோல் இதே இயக்குநராலேயே திரிக்கப்பட்டது.

தற்போது அதே இயக்குநர் ஜி.மோகன் பொது மேடையிலேயே.. அனைத்து மக்களுக்கும் பொதுவான திரைப்படத் துறையின் மேடையிலேயே தனது கருத்துக்கு எதிர்க் கருத்து கூறுபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த இயக்குநர் கொண்டிருக்கும் கொள்கையை எதிர்த்து யாராவது எதிர் விமர்சனம் செய்தால் அவர்களுக்கு தனது திரைப்படத்தில் ஒரு கேரக்டர் கொடுத்து அவர்கள் மூலமாக பதில் சொல்வாராம். இதனால் அவர்கள் காயப்பட்டுப் போவார்களாம். பார்த்துப் பேசுங்கள் என்று பகிரங்கமாக பொது மேடையிலேயே மிரட்டியிருக்கிறார்.

இத்தனைக்கும் இந்த இயக்குநர் இதுவரையிலும் இரண்டு திரைப்படங்களை மட்டுமே இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் ஜி.மோகன் மேடையில் பேசும்போது, “தலைவர் ஒருவர் மேடையில் பேசிய பேச்சைத்தான் இப்படத்தில் வசனங்களாக இடம் பெற வைத்திருக்கிறேன். இந்த சலசலப்பு படத்தின் வெளியீட்டிற்கு வெற்றிக்கும் பெரிய அளவில் உதவி செய்யும் என நம்புகிறேன்.

அதேபோல் மற்றவர்களுக்கும் ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறேன். நீங்கள் ஃபேஸ்புக், யூட்யூப் போன்ற சமூக வலைதள பக்கத்தில் என்னுடைய மதத்தை பற்றியோ.. என்னுடைய சமூகத்தைப் பற்றியோ.. ஏதேனும் காயப்படுத்தும் வகையில் பேசினால், அதனை அப்படியே என்னுடைய படைப்பில் இடம் பெறும் கதாபாத்திரம் பேசும் வகையில் வைத்து விடுவேன். அதனால் மற்றவர்களை காயப்படுத்தும் முன் தீர யோசனை செய்து வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்…” என்றார்.

இப்படியே போனால் திரைத்துறையில்கூட கருத்து சுதந்திரம் இருக்காது… கிடைக்காது போலும்..!

Our Score