full screen background image

“பொன்னியின் செல்வனுக்கு இந்தப் படம் போட்டியில்லை” – ‘யாத்திசை’ பட இயக்குநர் பேச்சு

“பொன்னியின் செல்வனுக்கு இந்தப் படம் போட்டியில்லை” – ‘யாத்திசை’ பட இயக்குநர் பேச்சு

வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.ஜெ.கணேஷ் தயாரிப்பில், அறிமுக இயக்குநரான தரணி ராசேந்திரனின் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள வரலாற்று திரைப்படம் ‘யாத்திசை’.

ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ரணதீர பாண்டியன் என்ற மன்னனுக்கெதிராக போராடிய ஒரு சிறு தொல்குடியை பற்றிய கதைதான் இந்த ‘யாத்திசை’ திரைப்படம்.

இந்தப் படத்தின் டிரெயிலர் வெளியான 6 நாட்களிலேயே 6 மில்லியன் பார்வைகளை கடந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது இப்படம்.

வரும் ஏப்ரல் 21 அன்று இந்த ‘யாத்திசை’ திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை சக்திவேலனின் சக்தி ஃபிலிம் பேக்டரியும், வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை ஐங்கரன் இன்டர்நேஷனலும் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று பிரசாத் லேப் தியேட்டரில் இனிதே நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இசையமைப்பாளர் சக்ரவர்த்தி பேசும்போது, “முதலில் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அவர்களுக்கு நன்றி. இது பீரியட் படம் என்பதால் இசையமைப்பது பெரும் சவாலாக இருந்தது. அந்த சவாலைத் தாண்டித்தான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளேன்..” என்றார்.

நடிகை சுபத்ரா பேசும்போது, “டிரெயிலருக்கு கிடைத்த ஆதரவுக்கு நன்றி. படத்திற்கும் அதே ஆதரவு தாருங்கள். படம் மிக நன்றாக வந்துள்ளது. படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள்..” என்றார்.

நடிகர் விஜய் சேயோன் பேசும்போது “இந்த யாத்திசையை கொண்டு சேர்க்க வேண்டியது உங்கள் கடமை. இது நம்முடைய பெருமைமிகு படைப்பு. எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. இப்படத்தில் ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்துள்ளார்கள். இப்படம் வெற்றி பெற ஆதரவு தாருங்கள்…” என்றார். 

தயாரிப்பாளர் கே.ஜே.கணேஷ் பேசும்போது, “எங்கள் குழுவை நம்பி மட்டுமே இந்தப் படத்தை எடுத்துள்ளோம். படத்தின் டிரெயிலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள்…” என்றார்.

 

இயக்குநர் தரணி ராசேந்திரன் பேசும்போது, “தயாரிப்பாளரிடம் கதையை சொன்னபோது உன்னிடம் உள்ள தவிப்பு பிடித்துள்ளது. உன் டீம் பற்றி சொல் என்றார். இந்தப் படத்தின் உயிர் என்னுடைய டீம்தான். எடிட்டர் மகேந்திரன், இசையமைப்பாளர் சக்ரவர்த்தி இருவரும் இல்லையென்றால் நான் இல்லை. எங்களை நம்பி ஒவ்வொருவராக உள்ளே வந்தார்கள். ஒரு ஷெட்யூல் முடித்து காட்ட சொன்னார்கள். அதன் பிறகே இந்தப் படம் உருவாவது உறுதியானது.

1300 வருடங்களுக்கு முந்தைய கதை என்பதால், அந்த காலகட்டம் அந்த மொழி வழக்கு அதையெல்லாம் உயிரோடு கொண்டு வருவது அத்தனை சவாலாக இருந்தது. அக்காலத்திய மொழியை எடுத்தால் இப்போது யாருக்கும் புரியாது என எல்லோரும் பயமுறுத்தினாலும் இதில் ஒரு கலை இருக்கிறது. சினிமா என்பது கலை, மக்கள் கொண்டாடுவார்கள் என்று தயாரிப்பாளர்தான் உறுதியாக நின்றார். அவருக்கு நன்றி.

இப்படத்திற்கு முழு உயிர் தந்தது என் குழுதான். 25 உதவியாளர்கள் இப்படத்தில் என்னுடன் வேலை செய்துள்ளார்கள். இந்தப் படத்தின் உயிர் எல்லோரையும் இழுத்து உடன் இணைந்து பயணிக்கிறது. இந்தப் படம் பொன்னியின் செல்வனுக்கு போட்டியல்ல. ஆனால் எங்களது யாத்திசை திரைப்படம் தமிழ்த் திரையுலகத்தில் மிகப் பெரிய தாக்கத்தை உண்டு பண்ணும். இந்திய சினிமாவில் மிகப் பெரிய படமாக இருக்கும் எனும் நம்பிக்கை எங்களுக்கு உள்ளது..” என்றார்.

விநியோகஸ்தரான சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் பேசும்போது, “இந்த திரைப்படம் சக்தி ஃபிலிம் பேக்டரிக்கான பெருமை. எங்கள் நிறுவனத்தில் நிறைய பெருமையான படைப்புகளை வெளியிட்டுள்ளோம். அந்த வகையில் இந்தப்படம் மிக முக்கியமானதாக இருக்கும்.

இந்தப் படத்தின் டிரெய்லர் பார்த்துவிட்டே 30 பேருக்கு மேல் என்னை அழைத்துப் பேசினார்கள். எல்லோரையும் இந்தப் படம் சென்றடைந்துள்ளது என்பதே பெருமை. டிரெய்லரைவிட இந்தப் படத்தில் இன்னும் பிரமாண்டம் இருக்கும். ஹாலிவுட் போர் படங்களில்கூட இல்லாத ஒரு அட்டகாசமான திரைக்கதை இந்தப் படத்தில் இருக்குறது. கண்டிப்பாக இது மிக முக்கியமான படமாக இருக்கும்…” என்றார்.

இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 21 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Our Score