full screen background image

துணிச்சலாக ‘லியோ’வோடு மோதும் ‘திரையின் மறுபக்கம்’ திரைப்படம்!

துணிச்சலாக ‘லியோ’வோடு மோதும் ‘திரையின் மறுபக்கம்’ திரைப்படம்!

நிதின் சாம்சன் கிரியேஷன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் நிதின் சாம்சன் தயாரித்து, இயக்கியிருக்கும் படம் திரையின் மறுபக்கம்’.

இந்தப் படத்தில் முகம்மது ஹவுஸ், மணிகண்டன், ஹேமா ஜெனலியா, நிதின் சாம்சன், ரிஷா, ஜோதி, யாசர், சத்யா அண்ணாதுரை மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பு, ஒளிப்பதிவு எழுத்து, இயக்கம் – நிதின் சாம்சன், இசை – என்.சி.அணில், படத்தொகுப்பு – நிஷாந்த், பின்னணி இசை – ரித்விக் மாதவன், பத்திரிக்கை தொடர்பு – சிவக்குமார்.

இந்தப் படம் பற்றிப் பேசிய இயக்குநர் நிதின் சாம்சன், “இந்தத் திரையின் மறுபக்கம்’ எனும் திரைப்படம் உண்மையும், நகைச்சுவையும் இணைந்த கதை.

சத்யமூர்த்தி ஒரு விவசாயி. ஆனால் தீவிரமான சினிமா ரசிகர். ஒரு திரைப்படத்தைத் தயாரிக்க வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார்.

இவரிடம் வந்து வலை வீசுகிறார் சினிமா இயக்குநர் என்று சொல்லிக் கொள்ளும் செந்தில். சும்மாவே வாயால் வடை சுடும் திறமையுள்ள செந்தில், சத்யமூர்த்தியை மூளை சலவை செய்து, தனது நயமான பேச்சுக்களால் ஏமாற்றி சத்யமூர்த்தியை படத்தைத் தயாரிக்க வைக்கிறார்.

சத்யமூர்த்தியும் செந்திலின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாந்து தன்னுடைய நிலத்தை திரைப்பட பைனான்சியர் அன்பரசியிடம் அடமானம் வைக்கிறார். அந்த அடமானப் பணத்தில் செந்திலின் இயக்கத்தில் படத்தைத் தயாரிக்கிறார்.

இயக்குநர் செந்திலின் இயக்குதல் திறமையைப் பார்த்து அதிருப்தியாகும் சத்யமூர்த்தி ஒரு கட்டத்தில் அவரை இயக்குநர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு தானே மீதமுள்ள படத்தை ஹீரோ, இணை இயக்குநர்கள் உதவியுடன் இயக்குகிறார்.

ஒரு பக்கம் பைனான்சியர் அன்பரசியின் வட்டித் தொல்லையிலிருந்து தப்பிக்க முடியாமல் தவிக்கிறார் சத்யமூர்த்தி. இன்னொரு பக்கம் தனக்குத் தெரியாத இயக்கத்தில் கை வைத்து தவியாய் தவிக்கிறார். சத்யமூர்த்தி தனது படத்தை முடித்து வெளியிட்டாரா இல்லையா என்பதுதான் இந்தப் படத்தின் கதை.” என்றார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பை சென்னை, செங்கல்பட்டு, அமெரிக்கா(புளோரிடா) ஆகிய பகுதிகளில் நடத்தியுள்ளனர்.

வரும் அக்டோபர் 20-ம் தேதி, தமிழகமெங்கும் 60 தியேட்டர்களில் இந்தப் படம் வெளியாகிறது.

Our Score