கிட்டத்தட்ட 3 ஆண்டு கால வனவாசத்திற்குப் பிறகு வைகைப் புயல் நடித்திருக்கும் படம் என்பதால் முதல் நாளே பார்க்க வேண்டும் என்று ஆவலை தமிழகம் முழுவதிலும் இருக்கும் சினிமா ரசிகர்களிடத்தில் இப்படம் ஏற்படுத்தியிருக்கிறது. இன்றைக்கு மட்டுமே 95 சதவிகித சென்டர்களில் ஹவுஸ்புல் என்று பாக்ஸ் ஆபீஸ் அறிக்கை தயாரிக்கும் பிரபலங்கள் சொல்கிறார்கள்.
தன்னைத்தானே நிந்தித்துக் கொண்டு, படம் பார்க்கும் சராசரி ரசிகனின் சார்பில் திரையில் பேசும் சக அண்ணனாக, தம்பியாக வடிவேலு காட்சியளிப்பதுதான் அவரது மிகப் பெரிய பலம். இந்தப் படத்திலும் அதையே செய்திருக்கிறார். ஆனால் நகைச்சுவைதான் கொஞ்சம் குறைவாக இருக்கிறது.
அரசனுக்குரிய கடமைகளைத் துறந்த தனது மனைவிகள், குழந்தைகள் நலனையே முக்கியம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் ஒரு அரசனின் அமைச்சரவையில் திட்டம் போட்டு அமைச்சராக சேரும் ஒரு புரட்சியாளன், தனது மதியூக அறிவினால் அந்த அரசனை எப்படி திருத்தி நல்வழிப்படுத்துகிறான் என்பதுதான் படத்தின் கதை.
விகடபுரம் அரசரின் அமைச்சரவையில் நவரத்தின மந்திரிகளாக வீற்றிருக்கும் 9 அமைச்சர்களும் பக்கத்து ஊர் குறுநில மன்னரான ராதாரவியின் பேச்சைக் கேட்டு சீன நாட்டு வர்த்தகர்களை தங்களது நாட்டில் வணிகம் செய்ய அனுமதிக்க நினைக்கிறார்கள். இதனை எதிர்க்கும் வெளியுறவுத் துறை அமைச்சர் கொல்லப்படுகிறார். அவர் இடத்திற்குத்தான் தெனாலிராமன் தேர்வாகிறார்.
இவர் அரசவைக்கு வந்த பின்பு இவர் யார் என்பதைத் தெரிந்து கொண்ட மந்திரிகள் குழு, சதித் திட்டம் போட்டு தெனாலிராமனை நாடு கடத்துகிறார்கள். ஆனால் ஏற்கெனவே தெனாலிராமன் மேல் மையல் கொண்டு காதல் பித்தம் தலைக்கேறி புலம்பிக் கொண்டிருக்கும் அரசரின் மகள், தன் தந்தையின் மனதை மாற்றி தெனாலிராமனை மீண்டும் நாட்டிற்கே அழைத்து வரச் செய்கிறாள்.
அதற்குள்ளாக சீன வணிகர்கள் நாட்டுக்குள் வந்துவிட.. நாடு பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிறது. முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்று நினைத்த தெனாலிராமன் அரசனை திட்டம்போட்டு சாதா மனிதனாக்கி நாட்டுக்குள் அனுப்பி வைக்க.. அங்கே உண்மைகள் தெரிந்து அரசன் என்ன செய்கிறான் என்பதுதான் மிச்சம், மீதிக் கதை..!
அரசனாகவும், மதியூக தெனாலிராமனாகவும் வடிவேலுவே இரட்டை வேடங்களில் ஜொலித்திருக்கிறார். இரண்டுக்கும் அதிகப்பட்ச வித்தியாசம் அந்த மீசைதான். அரசனிடம் இருக்கும் படபடப்பு, அவசரம், திமிர்.. இவையெல்லாம் தெனாலிராமனிடம் இல்லை. ஆனால் குசும்பு நிறையவே இருக்கிறது.
சீரியஸாக பேசுகிறாரா அல்லது காமெடியாக பேசுகிறாரா என்பதையே உணர முடியாத அளவுக்கு சில காட்சிகளில் தெனாலிராமனின் நடிப்பு இருப்பதால்தான் நகைச்சுவை காட்சிகளில் நமக்கு சிரிக்க வராமலேயே போய்விட்டது.
கோவில் உண்டியலை திருட வரும் திருடர்களை தந்திரமாக கிணறு தோண்ட வைத்து மாட்டுவது.. பின்பு அவர்களை கழுதையை வைத்து உதைக்க வைப்பது..
அரண்மனை தலைமை வாயிற்காப்பாளன் லஞ்சம் கேட்டான் என்பதற்காக அவனைச் சிக்க வைத்து சவுக்கடி கொடுக்க வைப்பது..
ஒரு அமைச்சர் தெலுங்கர் என்று கண்டுபிடிப்பது..
யானைக்குள் பானையை திணிக்க வேண்டும் என்று சொல்வது..
மன்சூரலிகானிடம் போய்ச் சிக்கிக் கொள்ளும் அரசனிடம் தப்பிப்பது..
தெனாலிராமனை சாகடிக்க மன்னன் போடும் கனவு திட்டத்தை அதே பாணியில் முறியடிப்பது..
கிளைமாக்ஸில் டிவிஸ்ட் செய்து தப்பிப்பது..
என்று பல இடங்களிலும் தெனாலிராமன் கதையை எளிதாகப் புகுத்தியிருக்கிறார்கள். இதில் நகைச்சுவையை கொண்டு வராததுதான் குறையே தவிர.. படமாக்கப்பட்டிருப்பது மிகச் சிறப்பாகத்தான் இருக்கிறது..
தெனாலிராமனாக அமைதியான நடிப்புடன் வரும் வடிவேலு, அரசனாக தனது அனைத்துவித கோபத்தையும், பதற்றத்தையும் முகத்தில் காட்டியபடியே அசுர வேகத்தில் டயலாக்கை ஒப்புவிக்கும் காட்சியெல்லாம் எப்படி இவரால் முடிகிறது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ஆனால் இப்போதும் சிரிப்பு வரவில்லை.
36 மனைவிகள், 52 குழந்தைகள் என்று சொல்லி இவர்களுக்குச் சொல்லும் ஒரு கதை.. மற்றபடி மேலே சொல்லப்பட்ட பல கதைகளிலும் கொஞ்சத்தை குறைத்துக் கொண்டிருந்தால் இன்னமும் நன்றாகவே இருந்திருக்கும்..
மீனாட்சி தீட்சித் என்ற புதுமுகம் ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார். எப்போதும் தனது மத்தியப் பிரதேசத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியபடியே இருக்கும் இவருக்கு லிப்ஸ் டங்க்ஸ் ஆவது ஒண்ணுதான் பிரச்சினை. மொழி தெரியாதவர்களை நடிக்க வைத்தால் வரும் சிரமம் இதுதான். குரல் கொடுத்திருக்கும் தீபா வெங்கட்டிற்கு எனது வாழ்த்துகளும், பாராட்டுக்களும்..!
தமிழ்ச் சினிமாவின் அனைத்து குணச்சித்திர கேரக்டர்கள், நகைச்சுவை கேரக்டர்களையும் இழுத்துப் பிடித்து இதில் நடிக்க வைத்திருக்கிறார்கள். ஜி.எம்.குமார், ராதாரவி, பாலாசிங், மனோபாலா, ஷண்முகராஜா, கிருஷ்ணமூர்த்தி, நமோ நாராயணன், ஜோ மல்லூரி, சக்திவேல், செல்லத்துரை, சந்தானபாரதி, ராஜேஷ், போஸ் வெங்கட், மன்சூரலிகான், தேவதர்ஷிணி என்று குவிந்திருக்கும் நட்சத்திர பட்டாளங்களை ஒரே ஸ்கிரீனில் பார்க்க வைத்திருப்பதும் இந்தப் படத்தின் சாதனைதான்..!
இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் போலவே இதுவும் சிறந்த நகைச்சுவையாக இருக்குமென்று நினைத்துதான் அனைவரும் ஓடியிருக்கிறார்கள். ஆனால் அது போல இல்லையென்றாலும் இந்திரலோகத்தில் நா அழகப்பனைவிட கொஞ்சம் நன்றாகவே இருப்பதால்.. லேசான நிம்மதிப் பெருமூச்சு ரசிகர்களிடத்தில் இருந்து கிளம்பியுள்ளது.
பழம்பெரும் கதை, வசனகர்த்தா ஆரூர்தாஸின் மிக எளிமையான தமிழ் வசனங்கள் படத்திற்கு மிகப் பெரிய பலம். ஒரு அமைச்சர் தெலுங்கர் என்பதை கண்டுபிடிக்க வடிவேலு போடும் டிராமா காட்சி நிச்சயமாக விஜயகாந்தை குறி வைத்தே எடுக்கப்பட்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இதேபோல் வடிவேலுவின் இப்போதைய அரசியல் நிலைப்பாடுகளை அவ்வப்போது சில வசனங்கள் மூலமே தெளிவுப்படுத்தியுள்ளார். இதை நோட் செய்து வைத்து அடுத்து ஆட்சிக்கு வரும்போது நம்மை கவனிப்பார்களே என்ற பயமே இல்லாமல் அனைத்து கட்சியினரையும், ஊழல்வாதிகளையும் அடித்து ஆடியிருக்கும் வடிவேலுவின் தைரியம் பாராட்டுக்குரியது.
அந்நிய நாட்டு முதலீடு என்பதே எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என்பதை ரத்தினச்சுருக்கமாக உரைப்பது போல காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். சீன தேசத்து உணவுகளை காசு கொடுத்து வாங்கிச் சாப்பிட்டும் கூட்டம், கஞ்சி குடிக்க வருவதில்லை என்பதையும், இருந்த கடையை காலி செய்யச் சொல்லி.. அந்த இடத்தில் சீன கடைகள் வந்து வியாபாரம் செய்யும் தந்திரத்தையும் காட்டியிருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
இப்போதைய இந்தியாவில் கார் கம்பெனிகள், குளிர்பான நிறுவனங்கள், உடைகள், அணிகலன்கள் என்று எல்லாவற்றிலும் வெளியில் இருந்து வருபவையே மக்கள் முன் அதிகம் வைக்கப்படுவதும், உள்ளூரில் தயாராவது கண் பார்வையிலேயே படாமல் இருப்பதும் இந்த அந்நிய ஆதிக்கத்தின் காரணமாகத்தான்.. சரியான சமயத்தில், சரியான விஷயத்தை கையில் எடுத்துச் சொல்லியிருக்கிறார் வடிவேலு. அந்த வகையில் அவருக்கு ஒரு சல்யூட்..
இமானின் இசையில் ‘ஆணழகன்’, ‘ரம்ப்பப்பா’, ‘நெஞ்சே நெஞ்சே’ மூன்று பாடல்களுமே கேட்க வைக்கின்றன. குழந்தைகளை மையமாகவே வைத்தே படம் முழுவதும் காட்சிகளை செதுக்கியிருப்பதால் டூயட்டை தவிர மற்றவற்றில் சிறுசுகளின் ஆட்டம்தான் அதிகம்..!
ராம்நாத்ஷெட்டியின் ஒளிப்பதிவு படத்தின் இன்னுமொரு சிறப்பு. முதல் காட்சியில் இருந்து இறுதிவரையிலும் அற்புதமாக படம் பிடித்திருக்கிறார். இத்தனை பெரிய பட்ஜெட் செட்டுகளை அழகுற எடுத்துக் காண்பித்தால்தான் செய்த செலவுக்காச்சும் புண்ணியம் கிடைக்கும். அதனை ராம்நாத் ஷெட்டி கச்சிதமாகச் செய்திருக்கிறார். அதிலும் ஒரு காட்சியில் புறா ஒன்றை பறக்கவிட்டுவிட்டு பின்னால் வடிவேலு நடந்து வரும் காட்சி ஒன்று வருகிறது.. அற்புதம் என்றே சொல்ல வேண்டும். மிக அழகான ஷாட் அது.. வெல்டன் ஸார்..
பக்கம் பக்கமாக வசனம் பேசுவதில் நகைச்சுவை வராது என்பது வடிவேலுவுக்கு தெரிந்ததுதான். இந்திரலோகத்தில் படத்தின் தோல்விக்கும் அதுதான் காரணம். ஆனால் அதையே இந்தப் படத்திலும் தொடர்ந்தது ஏன் என்றுதான் தெரியவில்லை. தெனாலிராமனின் அனைத்து நாடகங்களிலும் வசனங்கள்தான் பேசிக் கொண்டேயிருக்கிறார்களே தவிர.. சிரிப்புதான் வரவில்லை.. சிற்சில இடங்களில் மட்டுமே வடிவேலுவின் பாடி லாங்குவேஜ் சிரிப்பை வரவழைக்கிறது என்பதை மட்டுமே ஒப்புக் கொள்ள வேண்டும். அரசரின் தந்தை கனவில் வந்து தெனாலிராமனை சாகச் சொன்னார் என்ற கதை இதற்கு மிக சிறந்த உதாரணம். நிறைய கத்திரி போட்டிருக்கலாம் இந்தக் காட்சியில்.
அரசனாக நடிக்கும் வடிவேலு பல முறை வாயைத் திறக்காமலேயே விடுக்கும் ஒரு ஒலி.. அட அடடா.. அட அடடா.. என்று அடிக்கொரு தரம் சொல்லும் ஸ்டைலும் ரசனைக்குரியது.. அமைச்சர்கள் பலரும் அவ்வப்போது கூடி கூடி பேசும் காட்சிகளும், ராதாரவி சமரசம் செய்யும் காட்சிகளும் மட்டும்தான் கொஞ்சம் சிரிப்பை வரவழைத்தன.
தனது இரண்டாவது படத்தை இயக்கியிருக்கும் 25 வயதான யுவராஜ் தயாளன் என்ற இந்த இயக்குநரை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும். இத்தனை பெரியவர்களை வைத்து.. இத்தனை பெரிய நடிகரை வைத்து.. இத்தனை பெரிய பட்ஜெட்டில் சாதித்துக் காட்ட வேண்டுமென்பது சாதாரண விஷயமல்ல.. யுவராஜ் நிச்சயமாக அவரளவுக்கு மிகக் கடுமையாக உழைத்துதான் இதனை படைத்திருக்கிறார். அவருக்கு நமது வாழ்த்துகள்..!
இந்தக் கோடை விடுமுறையில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு போக இந்த ஒரு படம்தான் இப்போதைக்கு வந்திருக்கிறது. அடுத்த வாரம் அமேஸிங் ஸ்பைடர்மேன் வந்துவிடும். ஆனாலும் இதையும் அவசியம் பார்த்துவிடுங்கள்.
அட்லீஸ்ட் அரசரின் 36 மனைவிகள்.. 52 பிள்ளைகள் கதையாவது.. உங்களது பிள்ளைகள் உங்களிடம் பேசுவதற்கும், கேள்வி கேட்பதற்குமான ஒரு காரணமாக அமையலாம்..!