சென்ற வருடக் கடைசியில் வெளியான மலையாள படம் திரிஷ்யத்தின் சாதனைகள் இன்னமும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.
குறைந்த செலவில் எடுக்கப்பட்டு மிக அதிக வசூலைக் குவித்த படம் இதுதான்..
4 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் தயாரான இந்த திரைப்படம் இதுவரை 51 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது.
மோகன்லாலின் படங்களிலேயே அதிக வசூலும் இந்தப் படம்தான்..
மலையாளப் படவுலகத்திலேயே ஒரு திரைப்படம் அதிக வசூலை அள்ளுவது இந்தப் படத்தில்தான்..
இப்படி பல்வேறு சாதனைகளைச் செய்த இந்த திருஷ்யம் திரைப்படம் இப்போது இன்னுமொரு சாதனையைப் படைத்திருக்கிறது.
யு.ஏ.இ. என்றழைக்கப்படும் ஐக்கிய அரபு நாடுகளில் 100 நாட்கள் ஓடியே ஒரே திரைப்படம் என்ற பெருமையை இந்தப் படம் பெற்றிருக்கிறது.
இதற்கு முன்பு டைட்டானிக் திரைப்படம்தான் ஐக்கிய அரசு நாடுகளில் 100 நாட்களில் ஓடிய படமாம். அந்தச் சாதனைப் பட்டியலில் இந்தப் படமும் இணைந்துவிட்டது.
கடந்த ஜனவரி 2-ம் தேதி புகழ் பெற்ற தியேட்டரான எல்ரோடாவில் ரிலீஸான இந்த திருஷ்யம் இன்னமும் அதிக அளவு பார்வையாளர்களுடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறதாம்.
ஐக்கிய அரபு நாடுகளில் கேரளத்து மக்கள் மிக அதிக அளவில் வசித்து வருகிறார்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அவர்களில் அதிகம் பேர் பார்த்திருக்கும் மலையாளப் படம் இதுவாகத்தான் இருக்கும். இதுவே இன்னுமொரு சாதனைதான்..!
மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோஸப் அருமையாக இயக்கியிருந்த இப்படத்தில் இருந்த உணர்ச்சிப்பூர்வமான கதையும், இயல்பான நடிப்பும், மோகன்லால்-மீனா போன்ற இப்போதைய காலக்கட்டத்தில் இருக்கும் பெற்றோர்களை பதட்டமடைய வைத்து யோசிக்க வைத்திருக்கிறது. இதுதான் இந்தப் படம் பெற்றிருக்கும் உண்மையான வெற்றி..!
இதன் தமிழ் ரீமேக்கில் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு, கன்னட ரீமேக்குகள் தற்போது தயாராகிக் கொண்டிருக்கி்னறன. தெலுங்கில் வெங்கடேஷ், நவ்யா நாயர் நடிக்கிறார்கள். கன்னடத்தில் ரவிச்சந்திரனும், மீனாவும் நடிக்கிறார்கள்..
சிறப்பாக தயாரிக்கப்பட்ட படங்கள் நிச்சயம் சிறப்பாகவே பேசப்படும் என்பதில் சந்தேகமில்லை.