full screen background image

தெனாலிராமன் பட வழக்கு-தமிழ் தெரிந்த நீதிபதிகளிடம் வழக்கு மாற்றம்..!

தெனாலிராமன் பட வழக்கு-தமிழ் தெரிந்த நீதிபதிகளிடம் வழக்கு மாற்றம்..!

நீண்ட இடைவெளிக்கு பின்னர் வடிவேலு நடித்த ‘தெனாலிராமன்’ திரைப்படம் வரும் 18-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த கடைசி நேரத்தில் திடீரென தெலுங்கு மக்கள் பேரவையின் சார்பில் இந்தப் படத்தை தடை செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தாக்கல் செய்த மனுவில், “ஏ.ஜி.எஸ். நிறுவனம் நடிகர் வடிவேலு நடிப்பில் ‘தெனாலிராமன்’ என்ற படத்தை தயாரித்துள்ளது. அந்தப் படம் விஜயநகர பேரரசர் கிருஷ்ணதேவராயரை இழிவுபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக அறிந்தோம்.

இது தொடர்பாக, அந்தப் படத்தை திரையிட்டுக் காட்டுமாறு ஏ.ஜி.எஸ். நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பினோம்.. அதற்கு அவர்கள் ‘கிருஷ்ணதேவராயரை தவறாகச் சித்திரிக்கவில்லை’ என பதில் அளித்தனர்.

படத்தின் நாயகனான வடிவேலு, ‘கிருஷ்ணதேவராயராக தான் நடிக்கவில்லை எனவும், வேங்கை மன்னன் என்ற கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்துள்ளதாக’வும் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆனால், தணிக்கைச் சான்றிதழில் கிருஷ்ணதேவராயர் மற்றும் தெனாலிராமன் ஆகிய கதாபாத்திரங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தெரிவித்த தகவல்கள் முரண்பாடாக உள்ளன.

வரலாற்றுக் கதை என்றால், வரலாற்று ஆவணங்கள் மற்றும் புத்தகத்தின் அடிப்படையில் படத்தை எடுக்கலாம். ஆனால், ஏ.ஜி.எஸ். நிறுவனம் கிருஷ்ணதேவராயரின் வாழ்க்கை வரலாற்று உண்மையை மறைத்து வணிக நோக்கத்துக்காக இந்தப் படத்தை எடுத்துள்ளனர்.

அவர்களது சொந்தக் கருத்தில், உண்மை வரலாற்றை திரித்து, தவறான நிகழ்வை உருவாக்கி படத்தை தயாரித்துள்ளனர். மேலும் பட நிறுவனமும், இயக்குநரும் தெலுங்கு அமைப்புகளுக்கு படத்தை திரையிட்டுக் காண்பிப்பதாக உறுதிமொழி தந்திருந்தனர்.

ஆனால், இப்போது அதனைச் செய்யாமல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். எனவே, தெனாலிராமன் படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனத்துக்குத் தடை விதிக்க வேண்டும். தியேட்டர்களில் வெளியிடும் முன்பே தெலுங்கு அமைப்புகளுக்கு அந்தப் படத்தை திரையிட்டுக் காண்பிக்க உத்தரவிட வேண்டும்..” என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சதீஷ்குமார் அக்னிஹோத்ரி, மற்றும் சுந்தரேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இருவரும் ‘தெனாலிராமன்’ படத்தை பார்த்துவிட்டு அதன் பின்னர் முடிவெடுக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் தங்களுக்கு தமிழ் மொழி தெரியாது என்பதால் இந்த வழக்கை வேறு பெஞ்ச்சுக்கு மாற்றுவதாக நீதிபதிகள் கூறினர். தற்போது இந்த வழக்கு தமிழ் மொழி தெரிந்த வேறு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச்சுக்கு மாற்றப்பட்டுள்ளது.

தமிழ் தெரிந்த நீதிபதிகள் இருவரும் ‘தெனாலிராமன்’ படத்தை பார்த்த பின்னர்தான் இந்த வழக்கின் அடுத்த கட்ட உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிகிறது. நாளை நீதிபதிகள் படம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக படத் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது.

2 வருஷம் கழிச்சு மெகா ஹிட் படத்தைக் கொடுத்து ஜெயிச்ச சிரிப்போட கோடம்பாக்கத்துல நுழைஞ்சு அலப்பறையைக் கொடுக்கலாம்னு நினைச்சிருந்த வடிவேலுவுக்கு சோதனை மேல் சோதனையாத்தான் வருது..!

Our Score