full screen background image

“திரையரங்குகள் வரி ஏய்ப்பு செய்கின்றன” என்கிறார் தயாரிப்பாளர் சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன்

“திரையரங்குகள் வரி ஏய்ப்பு செய்கின்றன” என்கிறார் தயாரிப்பாளர் சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை(30.07.2021) சென்னையில் நடைபெற்றது. அதில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குறிப்பாக திரையரங்குகள் தொடர்பாக ஐந்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

1. திரையரங்குகளில் நுழைவுச் சீட்டு விற்பனை முழுக்க, முழுக்க கணினி மயமாக்கப்பட்டு வெளிப்படைத் தன்மையாக இருக்கவேண்டும்.

2. இணையத்தில் நுழைவுச் சீட்டு பதிவு செய்யும்போது கிடைக்கிற சேவைத் தொகையில் தயாரிப்பாளர்களுக்கும் பங்கு வேண்டும்.

3. திரைப்படங்களுக்கு நடுவில் போடப்படும் விளம்பரங்களில் கிடைக்கும் வருவாயில் தயாரிப்பாளர்களுக்கும் பங்கு வேண்டும்.

4. க்யூப், யுஎஃப்ஓ போன்ற நிறுவனங்களுக்கு விஎஃப்எஃப் எனப்படும் ஒளிபரப்புக் கருவிக்கான தவணைக் கட்டணத்தை இனிமேல் நாங்கள் கட்ட மாட்டோம்.

5. திரையரங்கு உரிமையாளர்கள் சிண்டிகேட் எனப்படும் மறைமுகக் கூட்டணி வைக்கக் கூடாது.

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் போட்டுள்ளார்கள்.

இது குறித்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கெளரவ செயலாளரான ராதாகிருஷ்ணனை சந்தித்துப் பேசினோம்.

அப்போது அவர், “இந்தத் தீர்மானங்களெல்லாம் முன்பே கொண்டு வரப்பட்டவைதான். விஷால் தலைமையிலான சங்கம் வேலை நிறுத்தம் அறிவித்தபோது இவை பேசப்பட்டன. தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் அரசாங்கம் ஆகிய முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் தயாரிப்பாளர்கள் முன் வைக்கப்பட்டு திரையரங்கு உரிமையாளர்களும் ஏற்றுக் கொண்டவைதான் இவை.” என்றார்.

அதன் பின் என்ன நடந்தது..?

“அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கடம்பூர் ராஜு,கே.சி.வீரமணி ஆகிய அமைச்சர்கள் முன்னிலையில் இந்த விசயங்கள் பேசப்பட்டன. ஆனால், அவை நடைமுறைக்கு வரவேயில்லை. அமைச்சர்களும் கண்டுகொள்ளவில்லை.

இப்போதைய முதலமைச்சர் எல்லாவற்றிலும் வெளிப்படைத்தன்மையோடு நடக்கிறார். அதேபோல இந்தத் துறையிலும் எல்லா இடங்களிலும் குறிப்பாக திரையரங்குகளில் வெளிப்படைத் தன்மை இருக்க அரசாங்கம் ஆவன செய்ய வேண்டுமெனக் கோருகிறோம்.”

ஒரு துறையில் ஏற்படும் சிக்கலை அரசாங்கம் தீர்த்து வைக்க வேண்டும் என எதிர்பார்ப்பது சரியா?

“திரையரங்குகளில் விற்கப்படும் நுழைவுச் சீட்டுகளின் அடிப்படையில் அரசாங்கத்துக்கு வரி வருவாய் கிடைக்கிறது. ஆனால், இவர்கள் முறையான கணக்கு கொடுக்காததால் ஆண்டுக்கு குறைந்தபட்சம் நானூறு கோடியிலிருந்து அதிகபட்சம் ஆயிரம் கோடிவரையிலும் அரசாங்கத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

இந்த வருவாய் சரியான முறையில் அரசாங்கத்துக்குப் போய்ச் சேர்ந்தால், சின்ன பட்ஜெட் படங்களுக்கு மனியம் உள்ளிட்ட பல சலுகைகளை உரிமையுடன் கேட்டுப் பெற முடியும். எனவே எங்கள் கோரிக்கையை திரையரங்குக்காரர்கள் ஏற்கவில்லையென்றால் அரசாங்கத்திடம் முறையிடவுள்ளோம்.”

தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகள் கணினி மயமாக்கப்பட்டுள்ளது என திருப்பூர் சுப்பிரமணியம் கூறி வருகிறாரே..?

“அவர் நீண்ட காலமாக அப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றார். ஆனால், கள நிலவரம் அப்படி இல்லை. தனியார் நிறுவனங்கள் மூலம் திரையரங்குகள் கணினி மயமாக்கப்பட்டு முன் பதிவு மூலம் சேவைக் கட்டணம் என்கிற பெயரில் ஒரு நுழைவுச் சீட்டுக்கு 30 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.”

படம் தயாரிக்காதவர்கள் சங்க நிர்வாகப் பொறுப்புகளில் இருப்பதால் தவறான தகவல்களைக் கூறுகின்றனர் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளாரே…?

“தவறான கருத்து. படம் தயாரித்தவர்கள்தான் சங்க நிர்வாகப் பதவிகளுக்கு போட்டியிடவும், தேர்தலில் வாக்களிக்கவும் முடியும். எங்கள் சங்கத் தலைவர், செயலாளர் உட்பட பெரும்பாலோனோர் இப்போதும் படம் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். நான் தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பை கேரளாவில் நடத்த இடம் பார்த்து வைத்திருக்கிறோம். படப்பிடிப்பு அனுமதி கிடைத்தவுடன் தொடங்குவோம்.

பெரும்பான்மையான உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற்று பதவிக்கு வந்தவர்களை அவமானப்படுத்தும் நோக்கில் திருப்பூர் சுப்பிரமணியம் தொடர்ந்து அவதூறு கருத்துகளைக் கூறி வருகின்றார். திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்பதால் பாரம்பரியம் மிக்க சங்கத்தை முடக்கிவிட்டு அதிமுக அமைச்சர்கள் ஆதரவுடன் தனி சங்கம் தொடங்கி தலைவரானவர் திருப்பூர் சுப்பிரமணியம். இதுவரை அந்தச் சங்கத்திற்கு முறைப்படி தேர்தல் நடைபெற்றதில்லை. நியமன தலைவர் முறைப்படி நடைபெற்ற தேர்தல் மூலம் வெற்றி பெற்ற எங்களைப் பற்றிப் பேசுவதற்குத் தார்மீக உரிமை இல்லாதவர்.

தயாரிப்பாளர்கள் சங்கம் மூன்றாகப் பிரிந்திருப்பதால் மற்ற சங்கங்களுடன் திரையரங்கு உரிமையாளர்கள் ஒப்பந்தம் போட்டால் என்ன செய்வீர்கள்..?

நாங்கள் எல்லாத் தயாரிப்பாளர்களுக்காகவும்தான் பேசுகிறோம். சங்கத்தின் முடிவுக்குக் கட்டுப்படாமல் செயல்படுகிறவர்கள் மீது முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.”

நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் உட்பட எல்லோரையும் ஒருங்கிணைப்போம் என்று தேர்தல் நேரத்தில் சொன்னீர்களே…?

“நாங்கள் ஒன்றாகிவிடக் கூடாது என்பதற்காக சில தீய சக்திகள் வேலை பார்க்கின்றன. அவற்றைத் தாண்டி நல்லது நடக்கும்.”

நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியனவற்றுக்கு தணிக்கைச் சான்றுக்கான பரிந்துரைக் கடிதம் கொடுக்கும் அங்கீகாரத்தை அரசாங்கமே வழங்கியுள்ளதே. இனிமேல் உங்களுடன் இணைய வேண்டிய தேவை என்ன…?

“ஏழு பேர் சேர்ந்து ஒரு சங்கம் அமைத்தால் அதற்கு இந்த அங்கீகாரம் கிடைத்துவிடும், இது ஒரு படத்தைத் தயாரித்த பின் தணிக்கைக்குப் போகும் நேரத்தில் செய்ய வேண்டிய விசயம் இது. ஆனால் ஒரு படத்தை உருவாக்குவதற்குப் பல விசயங்கள் தேவை.”

தொழிலாளர்கள் சங்கமும் அந்த அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதாகச் சொல்லப்படுகிறதே…?

“திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்துடன் சம்பளம் மற்றும் உரிமைகள் தொடர்பான ஒப்பந்தங்களை எங்கள் சங்கம்தான் செய்து வருகிறது. வருங்காலத்திலும் அதுவே தொடரும்…” என்றார்.

Our Score