full screen background image

“எங்களைத் தனியா விடுங்க.. ப்ளீஸ்..” – ஷில்பா ஷெட்டியின் வேண்டுகோள்..!

“எங்களைத் தனியா விடுங்க.. ப்ளீஸ்..” – ஷில்பா ஷெட்டியின் வேண்டுகோள்..!

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா பெண்களை ஏமாற்றி ஆபாசப் படங்கள் எடுத்ததாகவும், ஹாட்ஷாட்ஸ் என்ற செயலியில் அதனைப் பதிவேற்றம் செய்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவருடன் சேர்த்து மேலும் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகை ஷில்பா ஷெட்டி இதுவரையிலும் எதுவும் பேசாமல் இருந்தவர் இன்று தனது டிவீட்டர் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், ”ஆம். கடந்த சில நாட்கள் நாங்கள் பார்த்த அனைத்து திசைகளும் சவால் மிகுந்ததாக இருந்தது. ஏராளமான வதந்திகளும், குற்றச்சாட்டுகளும் வலம் வந்தன. ஊடகங்களாலும், நலம் விரும்பிகளாலும் ஆதாரமற்ற தாக்குதல்கள் என் மீது தொடுக்கப்பட்டன. ஏராளமான கேலிகளும், கேள்விகளும் பதிவிடப்பட்டன. என் மீது மட்டுமின்றி, என் குடும்பத்தினர் மீதும்..!

ஆனால், அவை எது குறித்தும் இன்னும் நான் கருத்து தெரிவிக்கவில்லை. இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் தொடர்ந்து இது குறித்து எதுவும் நான் கூறப் போவதில்லை. எனவே, என் மீது தவறான பழி சுமத்துவதை நிறுத்துங்கள்.

மீண்டும் சொல்கிறேன். ஒரு நடிகையாக என்னுடைய பதில் ‘இதற்கு புகார் சொல்லக் கூடாது; விளக்கம் சொல்லக் கூடாது’ என்பதுதான். நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான். விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. மும்பை போலீஸ் மற்றும் இந்திய நீதித் துறையின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஒரு குடும்பமாக, எங்களால் இயன்ற அனைத்து சட்டப் பூர்வமான வழிகளையும் நாங்கள் முயன்று கொண்டிருக்கிறோம்.

ஆனால், ஒரு தாயாக நான் உங்களிடம் பணிவுடன் கேட்டுக்கொள்வது ஒன்றுதான், ‘எங்களுடைய குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பு கொடுங்கள். ஒரு விஷயத்தின் உண்மைத் தன்மையை ஆராயாமல் அது குறித்து கருத்து கூறாதீர்கள்.

நான் சட்டத்தை மதிக்கும் ஒரு குடிமகள். கடந்த 29 ஆண்டுகளாக கடினமாக உழைக்கும் ஒரு பெண். மக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நான் அவர்களுடைய் நம்பிக்கையை வீணடிக்க மாட்டேன். மிக முக்கியமாக இந்தத் தருணத்தில் என்னுடைய மற்றும் என் குடும்பத்தின் தனிப்பட்ட உரிமைகளுக்கு மதிப்பு கொடுக்கமாறு பணிவுடன் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். ஊடக சர்ச்சைக்கு நாங்கள் தகுதியானவர்கள் இல்லை. சட்டம் அதன் கடமையைச் செய்ய விடுங்கள்…” – இவ்வாறு அந்த நீண்ட பதிவில் குறிப்பிட்டுள்ளார் நடிகை ஷில்பா ஷெட்டி.

இதற்கிடையில் இந்த வழக்கில் தங்களைக் கைது செய்தது சட்ட விரோதமானது. உடனடியாக தங்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரி ராஜ் குந்த்ரா மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது விசாரணை முடிவடைந்து தீர்ப்பினை தள்ளி வைத்துள்ளது உயர்நீதிமன்றம்.

Our Score