full screen background image

மலைவாழ் மக்களின் கண்ணீர்க் கதையைச் சொல்ல வரும் ‘தேன்’ திரைப்படம்

மலைவாழ் மக்களின் கண்ணீர்க் கதையைச் சொல்ல வரும் ‘தேன்’ திரைப்படம்

AP Productions நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் அம்பலவாணன், பிரேமா இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் தேன்’.

டோரா’, ‘காளை’ ஆகிய படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தருண் குமார் இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். கலர்ஸ் சேனலில் ஒளிபரப்பான ஆர்யாவின் ‘உங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற அபர்நிதி இந்தப் படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார்.

மேலும் அனுஸ்ரீ, பாவா லட்சுமணன், கயல் தேவராஜ், அருள்தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – கணேஷ் விநாயகன், ஒளிப்பதிவு – சுகுமார், இசை – சனத் பரத்வாஜ், படத் தொகுப்பு – லாரன்ஸ் கிஷோர், சண்டை இயக்கம் – ஆக்சன் நூர், வசனம் – ராசி தங்கத்துரை, பாடல்கள் – ஞானக்கரவேல், ஸ்டாலின், கலை இயக்கம் – மாயபாண்டி, மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.

இந்தத் தேன் படம் பற்றி இயக்குநர் கணேஷ் விநாயகன் பேசும்போது, “இத்திரைப்படம் மலை வாழ் மக்களின் வாழ்வியலை யதார்த்தமாகப் பேசுகிறது. ஒரு காட்சியில்கூட யதார்த்தம் மீறிய செயலை நீங்கள் பார்க்கவே முடியாது.

இந்தியாவில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

போடி மலைப் பகுதியில் குரங்கனி அருகே இருக்கும் குறிஞ்சி என்னும் மலைவாழ் கிராமம்தான் இந்தப் படத்தின் கதைக் களம். நாயகன் மலையில் தேன் எடுக்கும் தொழிலைச் செய்து வருகிறான். தான் ஆசைப்பட்ட பெண்ணையே மணக்கிறான். ஒரு பெண் குழந்தை பிறந்த பின்பு அவனது வாழ்க்கையில் திடீரென்று ஒரு இடி தாக்குகிறது. அந்தத் தாக்குதலை சாமான்யனான அவன் எப்படி சமாளிக்கிறான் என்பதுதான் இந்தத் தேன் படத்தின் கதை.

மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறை, அவர்களின் குண நலன்கள், பழக்க வழக்கம்.. தற்போதைய அரசுகளின் சட்டத் திட்டங்களால் எப்படி இந்த ஏழை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைத்தான் இத்திரைப்படம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

படம் முழுவதும் குரங்கனி மலைப் பகுதியிலும், தேனி பகுதியிலும் படமாக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படம் பல்வேறு வெளிநாட்டு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளைப் பெற்றுள்ளது. அடுத்தாண்டின் துவக்கத்தில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது…” என்றார்.

இந்தப் படத்தை பல வெற்றிப் படங்களை வெளியிட்டிருக்கும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் விநியோகஸ்தரான ஆர்.ரவீந்திரன் வெளியிடுகிறார்.

Our Score