“மாமனிதன்’ படத்தை வெளியிடத் தடையில்லை…” – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

“மாமனிதன்’ படத்தை வெளியிடத் தடையில்லை…” – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

நடிகர் விஜய் சேதுபதி நடித்த மாமனிதன்’ படத்தை வெளியிடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்கம் செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

பிரபல இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா தனது YSR Productions நிறுவனத்தின் சார்பாக தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மாமனிதன்’.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம், ஷாஜி, ஜீவல் மேரி, அனிகா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – எம்.சுகுமார், இசை – இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, படத் தொகுப்பு – கர் பிரசாத், எழுத்து, இயக்கம் – சீனு ராமசாமி.

இந்தப் படம் 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கி 2019-ம் வருடம் மார்ச் மாதமே முடிந்து திரைக்கு வரத் தயாராக இருந்தது.

ஆனால் பல பிரச்சினைகள் காரணமாக இதுநாள்வரையிலும் இத்திரைப்படம் வெளியாகவில்லை.

இதற்கிடையில் இத்திரைப்படம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்தப் படத்தைத் திரையிட இடைக்காலத் தடையும் விதிக்கப்பட்டிருந்தது.

அபிராமி மெகா மால்’ நிறுவனத்தின் சார்பில் இந்தப் படத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு படத்தை வெளியிட இடைக்காலத் தடை பெற்றிருந்தார்கள்.

அபிராமி மெகா மால்’ நிறுவனம் தாக்கல் செய்திருந்த மனுவில், “மாமனிதன் திரைப்படத்தின் சென்னை விநியோக உரிமையை ‘வான்சன்’  என்ற நிறுவனத்திடம் இருந்து வாங்கியிருக்கிறோம்.  தற்போது, தங்களுக்குத் தராமல் வேறொரு நிறுவனம் மூலமாக அந்தப் படத்தை வெளியிட முயற்சிகள் நடக்கிறது.

நாங்கள் ஏற்கெனவே அந்தப் படத்தை சென்னையில் வெளியிட வான்சன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதால் சென்னை விநியோக உரிமையை எங்களுக்குத்தான் தர வேண்டும். இல்லையேல் படத்திற்குத் தடை விதிக்க வேண்டும்...” என்று கோரியிருந்தார்.

இந்த மனுவினால்தான் ‘மாமனிதன்’ படத்தை வெளியிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது.

ஆனால், படத்தின் தயாரிப்பாளரான யுவன்சங்கர்ராஜா, “மாமனிதன் படத்தின் விநியோக உரிமை தொடர்பாக அபிராமி மெகா மால் நிறுவனத்துடன் தான் எந்தவித ஒப்பந்தமும் செய்யவில்லை என்றும், வின்சன் நிறுவனத்திற்கும், அபிராமி மெகா மால் நிறுவனத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்திற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

வான்சன்’ நிறுவனத்திற்கும் ஒய்.எஸ்.ஆர். நிறுவனத்துக்கும் இடையிலான ஒப்பந்தம் அவர்கள் பணம் தராததால் முறந்துவிட்டது. எனவே இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தடையாணையை நீக்க வேண்டும்.” என்றும் சொல்லி பதில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “அபிராமி மெகா மால் நிறுவனம் யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பு நிறுவனத்திடம் நேரடியாக எந்தவித ஒப்பந்தமும் செய்து கொள்ளாததால், அவர்கள் விருப்பப்படி படத்தை வெளியிட்டுக் கொள்ளலாம். படத்தை வெளியிட விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை நீக்கப்படுகிறது..” என்று சொல்லி தீர்ப்பளித்தார்.

இதனால் மாமனிதன்’ திரைப்படம் வெளியாக இருந்த தடை நீங்கியுள்ளது. விரைவில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்..!