தமிழகத்தின் பாரம்பரியமான குடுமப் விழாக்களின் ஒன்று மஞ்சள் நீராட்டு விழா. பெண்கள் வயதுக்கு வந்துவிட்டதாக கருதும் அந்தத் தருணத்தை ஒரு விழாவாக நடத்துவது தமிழர்களின் தொன்று தொட்ட மரபு. இன்றைக்கு அசுர வேகத்தில் நகரும் நாகரிக உலகத்திலும் கிராமப் பகுதிகளில் இந்த விழாவை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இது சரிதான் என்றும், தவறு என்றும் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்று வரும் வேளையிலும், நன்கு படித்தவர்கள்கூட தங்களது குடும்பத்தில் இந்த விழாக்களை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இப்போது இந்த விழாவை மையமாக வைத்து ஒரு குறும்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். ‘மஞ்சள் நீராட்டு விழா’ என்ற இந்த குறும்படத்தை கமல்சேது என்பவர் தயாரித்து, எழுதி, இயக்கியிருக்கிறார்.
இந்தக் குறும்படத்தில் தீபா சங்கர், நேஹா, பாரதி கண்ணன், ரங்கம்மா முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
கே.ஆர்.இம்ரான் அஹமத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கார்த்திக் ராஜா இசையமைத்திருக்கிறார். தபஸ் நாயக் ஒலிப்பதிவு செய்திருக்கிறார். ஜி.வீரமணி கலை இயக்கம் செய்திருக்கிறார். பி.லெனின் படத்தொகுப்பினை மேற்கொண்டுள்ளார்.
இந்தக் குறும்படம் பற்றி பேசிய இயக்குநர் கமல்நாத், “இந்த மஞ்சள் நீராட்டு விழா பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு அபிப்ராயம் உண்டு. இந்த உலகில் ஒரு குழந்தையாக பிறந்து, குறும்புத்தனம் செய்யும் சிறுமியாக வளர்ந்து, ஒரு பெண்ணாக பரிமாணம் அடையும் அற்புத தருணத்தை.. நமது கலாச்சாரம் பெண்ணை சீர்படுத்தி, பக்குவப்படுத்தி, அழகுபடுத்தி, அவர்களுக்குக் கொடுக்கும் முதல் மரியாதைதான் இந்த மஞ்சள் நீராட்டு விழா குறும்படம்.
இந்த குறும்படம் பல்வேறு உலக திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றதே எங்களுடைய படைப்பு மிகச் சிறப்பானது என்பதை உலகத்திற்குக் காட்டும் சான்று.
ஹைதராபாத்தில் நடைபெற்ற 19-வது சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் சிறந்த குறும்படமாகத் தேர்வு செய்யப்பட்டது.
அமெரிக்காவின் தெற்கு டெக்சாஸில் நடைபெற்ற தெற்கு டெக்சாஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதினை இந்தப் படம் பெற்றது.
நியூயார்க்கில் நடைபெற்ற ஹார்லெம் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குறும்படத்திற்கான விருதினைப் பெற்றது.
மும்பையில் நடைபெற்ற இந்தியன் சினி சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குறும்படத்திற்கான விருதினைப் பெற்றது.” என்றார்.
முகத்தில் குழந்தைத்தனம் மாறாத பள்ளிச் சிறுமியான நேஹா பூப்பெய்தி விடுகிறாள். கலாச்சார வழக்கப்படி அவளை வீட்டின் பின்புறத்தில் படப்பு கட்டி அவளை உட்கார வைத்து விடுகிறார்கள். ஊரைக் கூட்டி சடங்கு செய்யும்வரை படப்புக்கு வெளியே வர அவளுக்கு அனுமதி இல்லை.
நேஹாவின் அம்மா, சிறு வயதிலேயே தனது பெற்றோரை இழந்தவர். அவர் பெரிய மனுஷி ஆனபோது சடங்கு செய்ய அவருக்கு அப்போது யாருமே இல்லை. அதனால் பல அவமானங்களையும் துரதிர்ஷ்டசாலி என்ற தூற்றலையும் சுமந்தவர் அவர்.
தனக்கு வந்த அவப் பெயரில் கோடியில் ஒரு பங்குகூட தன் மகளுக்கு வரக் கூடாது என்பது அவரின் தீர்மானம். எனவே தன் மகளுக்கு முறைப்படி ஊரைக் கூட்டி சீரும் சிறப்புமாய் சடங்கு செய்ய ஆசைப்படுகிறார்.
ஆனால் நேஹாவுக்கே இதெல்லாம் சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஒரு கட்டத்தில் மனம் வெறுத்து வீட்டை விட்டு ஓடிப் போய் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள முயல்கிறார்.
இதன் பின்பு என்ன நடந்தது என்பதே இந்த மஞ்சள் நீராட்டு விழா குறும் படம்.
அப்பாவி அம்மா கதாபாத்திரத்தில் தன் நடிப்பால் பிரமிக்க வைக்கிறார் தீபா சங்கர். நேஹாவுக்கு நடிப்பில் அடுத்த இடம். பாட்டியாக வரும் ரங்கமாவும் கலக்கி இருக்கிறார்.
வாசலில் போடப்படும் கோலம் என்பது தமிழ்ப் பெண்களின் கலாசாரக் கலை அடையாளமாக விளங்குவதைச் சொல்லி நம்மூர்ப் பெண்களின் வாழ்க்கைப் பாதையின் பயண நிகழ்வுகளை விதவிதமான கோலங்கள் மூலம் காட்டும் இடத்தில் சிலிர்க்க வைக்கிறார். தன் அம்மா குறித்த மகளின் முடிவும், பாட்டியை அதில் கவுரவப்படுத்தும் விதமும் அருமை.
படம் பார்த்த பின்பு தோன்றுவது இதுதான் – “இந்தப் படம் விருதுகளைக் குவிப்பதில் ஆச்சர்யம் இல்லை..!”