‘முண்டாசுப்பட்டி’யின் வெற்றியை நினைத்து அது போலவே கிராமியம் சார்ந்த ஒரு கதையை படமாக்க நினைத்திருக்கிறார்கள். அதனூடேயே ஒரு சஸ்பென்ஸ், திரில்லர் கதையையும் சேர்த்து ஜூகல்பந்தி நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். வென்றார்களா இல்லையா என்பது ரசிகர்களின் கைகளில்தான் உள்ளது.
எழுத்துலக வாத்தியார் சுஜாதாவின் ‘வசந்த காலக் குற்றங்கள்’ நாவலை முறைப்படி பணம் கொடுத்து வாங்கி, அதிலிருந்து சில பகுதிகளை மட்டும் இதில் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த நேர்மை பாராட்டுக்குரியது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவில் இருக்கும் பூமலைக்குண்டு, எரிமலைக்குண்டு கிராமங்களுக்கிடையே பிரிட்டிஷார் காலத்தில் இருந்தே ஒரு மோதல். இரண்டு ஊர்களுக்கும் நடுவில் இருக்கும் ஒரு ஏரியை யார் பயன்படுத்துவது என்பதில் மோதல் துவங்கி, அது உயிர்ப்பலி வரையிலும் போயிருக்கிறது.
பிரிட்டிஷாரின் சூழ்ச்சி வலையில் சிக்கி ஒரு கிராமம் அதைப் பயன்படுத்தினாலும் இன்னொரு கிராமத்தினர் ஏதாவது செய்து அதில் மண்ணையள்ளிப் போடுவது வாடிக்கை. இப்போதுவரையிலும் அதுவே தொடர்கிறது.
மும்பையில் என்றோ ஒரு நாள் ஆரம்பித்த கணபதியை ஆற்றில் கரைக்கும் உற்சவம் நாடு தழுவிய மதவாதத்தினால் இப்போது கிராமங்களையும் ஆக்கிரமித்துவிட்டது. எரிமலைக்குண்டு கிராமத்தில் விநாயகர் சதுர்த்திக்காக விநாயகரை உருவாக்கிவிட்டார்கள். ஆனால் இதனை வித்தியாசமாக கண்ணாடியால் செய்திருக்கிறார்கள்.
இந்த கண்ணாடி விநாயகரை அதே ஆற்றில் கரைக்க முயல்கிறார்கள் ஊர்க்காரர்கள். கண்ணாடி ஆற்றில் விழுந்து உடையும்பட்சத்தில் ஆற்றில் வாழும் மீன்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படுமே என்றெண்ணி மாவட்ட ஆட்சியர் இதற்கு அனுமதி தர மறுக்கிறார். ஊர்க்காரர்கள் போர்க்கொடி தூக்குகிறார்கள். இதனால் நிலைமையைச் சமாளிக்க வேண்டி அந்த ஊரில் 144 தடையுத்தரவை பிறப்பிக்கிறார் மாவட்ட ஆட்சியர்.
இந்த நேரத்தில்தான் கதை துவங்குகிறது. ஊரில் பெரிய பணக்காரரான மதுசூதனன் தான் கடத்தி வந்த தங்க பிஸ்கெட்டுகளை அந்த விநாயகர் சிலைக்குள் பதுக்கி வைத்திருக்கிறார். பறிபோன தங்க பிஸ்கெட்டுகளை மீட்கும் வேலை டார்ச்சர் பார்ட்டியான கூலிப் படைத் தலைவனான உதயபானு மகேஷ்வரனிடம் வருகிறது.
இந்த நேரத்தில் மதுசூதனின் கார் டிரைவரான அசோக் செல்வனுக்கும் மதுசூதனின் மகளான ஸ்ருதி ராமகிருஷ்ணனுக்கும் இடையே காதல் பூத்துக் குலங்குகிறது. வீட்டை விட்டு ஓடிப் போலாமா என்கிற லெவலுக்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் அலுங்காமல், குலுங்காமல் திருட்டு வேலைகளைச் செய்து வரும் மிர்ச்சி சிவா, சின்னச் சின்னத் திருட்டுக்களிலேயே போலீஸிடம் பிடிபட்டு திருட்டு வேலைக்கே லாயக்கில்லாதவன் என்று போலீஸாலேயே அவமானப்படுத்தப்படுகிறார். இந்த அவமானத்தைத் துடைக்க வேண்டி மிகப் பெரிய திருட்டு ஒன்றை செய்து தன் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள முடிவெடுக்கிறார். இதற்கு உடந்தையாக அதே ஊரில் கொடி கட்டிப் பறக்கும் விலைமாதுவான ஓவியாவைப் பயன்படுத்தக் கொள்ள நினைக்கிறார் சிவா.
ஒரு சுப முகூர்த்த நாளில் அசோக் செல்வனும், ஸ்ருதியும் ஊரைவிட்டு ஓடிப் போக திட்டம் தீட்டுகிறார்கள். அதே நாள் இரவில் சிவாவின் ஏற்பாட்டில் ஓவியா ஜூவல்லரியை கொள்ளையடித்துவிட்டு எஸ்கேப்பாகுகிறார். ஒரே நாளில் இரண்டு இடிகள் மதுசூதனுக்கு விழுகிறது. போதாக்குறைக்கு மகேஷ்வரனும் சேர்ந்து தங்க பிஸ்கட்டை கொடுக்கும்படி டார்ச்சர் செய்ய மதுசூதனன் வெறியாகுகிறார்.
இப்போது அனைவருமே அதே ஊரில்தான் இருக்கிறார்கள். ஊரில் தெருவுக்குத் தெரு போலீஸ் நிற்கிறது. எங்கும் தப்பிக்க முடியாத நிலைமை. கடைசியில் என்ன ஆகிறது..? பிஸ்கட் கை மாறியதா..? விநாயகர் ஆற்றில் கரைந்தாரா..? அசோக் செல்வன், ஸ்ருதி காதல் என்னாச்சு என்பதெல்லாம் இடைவேளைக்கு பின்னால திரைக்கதை..!
அசோக் செல்வனை மிகவும் கஷ்டப்பட்டு மதுரைக்காரன் தோற்றத்திற்கு மாற்றியிருக்கிறார்கள். ஆனால் வசனம்தான் கை கொடுக்கவில்லை. மிர்ச்சி சிவாவின் டைமிங் வசனங்கள் பல இடங்களில் சிரிக்க வைக்கின்றன. சில இடங்களில் புரியாமல் போகின்றன. ஓவியா, ஸ்ருதி ராமகிருஷ்ணன் இருவரின் நடிப்பும் அது போலத்தான். ஸ்ருதியின் டப்பிங் வாய்ஸ் சில இடங்களில் இடிக்கிறது. எப்படி கவனிக்காமல் விட்டார்கள்..? ஒளிப்பதிவின் குறைவினால் ஓவியாவின் அதீத மேக்கப் திரளாகத் தெரிகிறது. நடிப்புக்கேற்ற ஸ்கோப் இல்லை என்பதால் மெழுகு பொம்மை போல வந்து செல்கிறார் ஓவியா.
நடிப்பில் அனைவரைவிடவும் ஸ்கோர் செய்திருப்பது ராம்தாஸ்தான். பேச இயலாத நிலைமையிலும் அவர் பேசும் ஒவ்வொரு ஆக்சனும் ஸ்பீடு.. ஓவியாவுடன் கை தட்ட அவர் நினைக்கும்போதெல்லாம் கடைசிவரையிலும் விடாமல் மிர்ச்சி சிவா தடுப்பதும் தொடர்ச்சியான காமெடிகள்..
உதயபானு மகேஷ்வரனின் டார்ச்சர் டெக்னிக்குகள் சில இடங்களை புன்னகைக்க வைத்தாலும் கதைக்கு உதவவில்லை. உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனையே கைக்குள் வைத்திருக்கும் மதுசூதனானல், மகேஷ்வரனை சமாளிக்க முடியவில்லை என்பதெல்லாம் திரைக்கதையில் நம்ப முடியாத கதையாகிவிட்டது இயக்குநர் ஸார்.
கிராமத்துக் கதை என்றாலும் 144 என்ற பெயருக்கேற்றாற்போல் திரைக்கதையை மாற்றியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இந்தத் தடை உத்தரவால் ஊர் மக்கள் படும் அவஸ்தையும், அதை நீக்க அவர்கள் செய்யும் போராட்டமும் கதைக்களமாக இருந்திருந்தால் படம் சிறப்பாக வந்திருக்கும்.
முதற்பாதியில் இருக்கும் சில டிவிஸ்ட்டுகளும், இரண்டாம் பாதியில் தங்க பிஸ்கெட்டுகள் கை மாறும் காட்சிகளும் பரபரவென்று தீயாய் இருந்தாலும் இவைகளே முழு படத்தையும் சிறப்பானதாக்க போதவில்லை.
பின்னணி இசையில் நகைச்சுவையின் ஆஸ்தான இசையைப் போட்டுத் தாளித்தும் பல இடங்களில் சிரிப்பலை குறைவுதான். பாடல்களும் வழக்கம்போல ஒரு முறை கேட்பது போல மட்டுமே இருந்தது. மங்கலான ஒளிப்பதிவு ஏன் என்பதெல்லாம் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.
தயாரிப்பாளர் சி.வி.குமாரின் தயாரிப்பிலேயே இந்தப் படம்தான் அதிக பொருட்செலவைத் தொட்டிருக்கும் என்பது படத்தை பார்க்கும்போது தெரிகிறது. இத்தனை பிரயத்தனப்பட்டு எடுத்திருக்கும் படத்தில் கதைக்காக இன்னும் கொஞ்சம் யோசித்து சீன் பிடித்து செய்திருந்தால் படம் இதைவிடவும் சிறப்பாகவே வந்திருக்கும் என்றே கருதுகிறோம்.!