இந்தக் கொரோனா காலகட்டத்திலும் கொடைக்கானலில் ‘தி நைட்’ என்ற படத்தின் படப்பிடிப்பை வேகமாகவும், பாதுகாப்பாகவும் நடத்தி முடித்திருக்கிறார்கள் படக் குழுவினர்.
இந்த ‘தி நைட்’ படத்தினை ‘குட் ஹோப் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் கோகுலகிருஷ்ணன் மற்றும் கலாசா செல்வம் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இத்திரைப்படம் தமிழ், ஹிந்தி என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகியுள்ளது.
இத்திரைப்படத்தில் கதையின் நாயகனாக ‘விது’ என்கிற பாலாஜி அறிமுகமாகிறார். இவர் இசையமைப்பாளரும்கூட! நாயகியாக ‘பிக்பாஸ்’ புகழ் சாக்ஷி அகர்வால் நடிக்கிறார்.
மேலும் ஒரு புதுமையான வேடத்தில் நகைச்சுவை நடிகை மதுமிதா மிரட்டியிருக்கிறார். வில்லனாக பாலிவுட்டில் இருந்து பிரபல நடிகர் ரன்வீர் குமார் அறிமுகமாகிறார். இவர்களைத் தவிர மேலும் பல முன்னணி நடிகர், நடிகைகளும் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.
படத்தில் மிரட்டலான பின்னணி இசையும், அருமையான பாடல்களையும் தந்து இசையமைப்பாளராக அன்வர் கான்டாரிக் அறிமுகமாகிறார்.
ஒளிப்பதிவில் பல சிரமங்களைக் கடந்து காடுகளில் மிகச் சிறப்பாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரமேஷ்.G. இவரோடு பல முன்னணி தொழில் நுட்பக் கலைஞர்களும் இந்தப் படத்தில் பணியாற்றியிருக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் ரங்கா புவனேஷ்வர். இவர் தமிழில் ‘ஆறாவது வனம்’ மற்றும் மலையாளத்தில் வெளியான சில படங்களை ‘R.புவனேஷ்’ எனும் பெயரில் இயக்கியிருக்கிறார்.
இத்திரைப்படத்தைப் பற்றி இயக்குநர் ரங்கா புவனேஷ் கூறுகையில், “இது தமிழில் இதுவரை சொல்ல மறந்த, சொல்லப்படவேண்டிய கதையுடன் கூடிய திரைப்படம்.
இது காடுகள் சார்ந்த கதைக் களத்துடன் கம்யூட்டர் கிராஃபிக்ஸ்(G G) காட்சிகள் நிறைந்த அனிமல் திரில்லர் படம்.
இந்தப் படத்தின் கதை பல சுவாரஸ்யமான சம்பவங்களோடு யாரும் யோசிக்க முடியாத திருப்பங்கள் நிறைந்தது.
இந்தக் கொரோனா காலகட்டத்திலும் இக்கட்டான சூழ்நிலையில் கடுமையான குளிரில் பல போராட்டமான நிகழ்வுகளோடு தொழில் நுட்பக் கலைஞர்களும், தொழிலாளர்களின் ஒத்துழைப்புடனும் இடைவிடாது 30 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி முதல்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளனர்.
இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் சென்னையில் நடைபெற உள்ளது…” என்றார் இயக்குநர் ரங்கா புவனேஷ்வர்.