full screen background image

பல்லவ மன்னன் நந்தி வர்மனின் வரலாற்றில் உருவாகும் புதிய படம்

பல்லவ மன்னன் நந்தி வர்மனின் வரலாற்றில் உருவாகும் புதிய படம்

‘மரகத நாணயம்’, ‘ராட்சசன்’, ‘புரூஸ்லி’ போன்ற படங்களில் இணை ஒளிப்பதிவாளராகவும், ‘கன்னி மாடம்’ படத்தில் துணை இயக்குநராகவும் பணியாற்றிய ஜி.வி.பெருமாள் வரதன், 1000 வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார்.

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை ஏ.கே. பிலிம் ஃபேக்டரி சார்பில் தயாரிப்பாளர் அருண்குமார் தயாரிக்கிறார்.

‘காவல் துறை உங்கள் நண்பன்’ படத்தில் காவல் துறையினரின் அத்துமீறல்களையும், அடாவடித்தனத்தை வெளிக்காட்டும் கதாப்பாத்திரத்தில் நடித்த சுரேஷ் ரவி, இப்படத்தில் காவல் துறையின் பெருமையையும், அவர்களுடைய நேர்மையையும் வெளிக்காட்டும் கதாப்பாத்திரத்தில் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஆஷா கவுடா நடிக்கிறார்.

மேலும் ‘நிழல்கள்’ ரவி, போஸ் வெங்கட், ‘ஆடுகளம்’ முருகதாஸ், கஜராஜ், அம்பானி சங்கர், முல்லை – கோதண்டம், மீசை ராஜேந்திரன், ‘அசுரன் அப்பு’, பொம்மி ராஜன், ஜே.எஸ்.கே கோபி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

கிருஷ்ண மூர்த்தி ஒளிப்பதிவு செய்ய, மதன் கார்கி பாடல்கள் எழுதுகிறார். ஷான் லோகேஷ் படத் தொகுப்பு செய்ய, முனிராஜ் கலையை நிர்மாணிக்கிறார். நடனக் காட்சிகளை சந்தோஷ் வடிவமைக்கிறார்.

படம் குறித்து இயக்குநர் ஜி.வி.பெருமாள் வரதன் பேசியபோது, “பல்லவ மன்னர்களில் முக்கியமமானவர் நந்தி வர்மன். அவரைப் பற்றிய உண்மை சம்பவம் ஒன்றை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை அமைத்திருக்கிறேன். இதில், 75 சதவீதம் உண்மையும், 25 சதவீதம் கற்பனையும் இருக்கும்.

1000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த நந்தி வர்மன், சூழ்ச்சியினால் கொலை செய்யப்படுகிறார். அப்போது நடக்கும் போரில் அவர் வாழ்ந்த அந்த ஊரே பூமிக்கு அடியில் புதைந்து விடுகிறது. அந்த சம்பவத்தில் இருந்து, அந்த ஊரில் 6 மணிக்கு மேல் பல்வேறு அமானுஷ்ய விஷயங்கள் நடப்பதாக ஒரு நம்பிக்கை இருந்து வருவதால், தற்போதைய காலக்கட்டத்திலும் அந்த ஊரில் வசிக்கும் மக்கள் 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வர மாட்டார்கள்.

இதற்கிடையே, அந்த ஊரில் புதைந்த நந்தி வர்மனின் இடத்தை கண்டுபிடிப்பதற்காக தொல்லியல் துறையினர் வருகிறார்கள். அவர்களில் ஒருவர் பின் ஒருவராக மர்மமான முறையில் மரணம் அடைகிறார்கள்.

அதன் பின்னணி என்ன என்பதை, சுவாரஸ்யமான வரலாற்று கதையுடன், சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் சொல்லப் போகிறோம். படம் நிச்சயம் ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும். படத்தில் இடம் பெறும் நகைச்சுவை காட்சிகளும் ரசிகர்களை கவரும்.

‘மரகத  நாணயம்’ மற்றும் ‘ராட்சசன்’ ஆகிய படங்களை ஒன்று சேர்த்தால் எப்படிப்பட்ட உணர்வு கிடைக்குமோ, அப்படிப்பட்ட உணர்வை இந்தப் படம் கொடுக்கும்…” என்றார்.

சென்னை, செங்கல்பட்டு, கள்ளக்குறிஞ்சி, செஞ்சி ஆகிய இடங்களில் படமாக்கப்பட உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் ராம்குமார், ரவிகுமார், விருமாண்டி, கெளதம், மோகன்.ஜி, ’மான்ஸ்டர்’ நெல்சன், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவாளர்கள் கோகுல் பெனாய், பி.வி.சங்கர் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு இயக்குநர் ஜி.வி.பெருமாள் வரதன், சுரேஷ் ரவி, தயாரிப்பாளர் அருண்குமார் உள்ளிட்ட படக் குழுவினரை வாழ்த்தினார்கள்.

 
Our Score