இந்தப் படத்தில் அதர்வா முரளி, லாவண்யா திரிபாதி, அஸ்வின் காக்கமனு, லட்சுமிபிரியா சந்திரமெளலி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – ரவீந்திர மாதவா, இசை – ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு – சக்தி சரவணன், படத்தொகுப்பு – ஆர்.கலைவாணன், கலை இயக்கம் – எஸ்.ஐயப்பன், சண்டை இயக்குநர் – ஆர்.சக்தி சரவணன், நடன இயக்கம் – ஹரி கிரண்.
தணல் என்றால் நெருப்பு. டணல்(Tunnel) என்றால் சுரங்கம். இந்தப் படத்தில் நெருப்பு, சுரங்கம் இரண்டுக்குமே நேரடி தொடர்பு இருப்பதால் இந்தத் தலைப்பை வைத்து விட்டார்கள் போலும்.!
போலீஸ் கான்ஸ்டபிளான அதர்வா டூட்டியில் சேர்வதற்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார். அவருடன் சேர்ந்து அன்றைக்கு மொத்தம் ஆறு பேர் அந்த ஸ்டேஷனில் பணியாற்ற மாறுதலாகி வந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கான ஜாயினிங் லெட்டரை கொடுக்க வேண்டிய இன்ஸ்பெக்டர் வெளியில் சென்று இருப்பதால் அவர் வரும்வரை காத்திருக்க சொல்கிறார்கள்.
இரவு வரையிலும் இன்ஸ்பெக்டர் வராததால் அப்படியே 6 பேரும் ராத்திரி ரவுண்ட் போக இன்று சபை பெற்ற அனுப்பி வைக்கிறார் சப்–இன்ஸ்பெக்டர்.
அப்படி இவர்கள் ரவுண்டு வரும்போது ஒரு பாதாள சாக்கடையில் இருந்து ஒருவன் மட்டும் வெளியே வருகிறான். அது இந்த கான்ஸ்டபிள்களுக்கு வித்தியாசமாக தெரிய அவனை விரட்டுகிறார்கள். அவன் ஓட்டமாய் ஓடுகிறான். இவர்களும் விடாமல் துரத்துகிறார்கள்.
கடைசியாக ஒரு சேரி பகுதிக்குள் அவன் நுழைந்துவிட கான்ஸ்டபிள்கள் கூட்டமும் உள்ளே நுழைந்து விடுகிறார்கள். ஆனால் உள்ளே போன பின்புதான் அந்த இடமே வேறு விதமாக தெரிகிறது.
எந்த வழியாக வந்தோம்? எந்த வழியாக செல்கிறோம்? எது வாசல்.. எந்த வழியாக வெளியேற வேண்டும் என்பதே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அந்த சேரி அமைக்கப்பட்டு இருப்பதால் இவர்கள் என்ன செய்வது என்று யோசிக்கும்போது வில்லன் அஸ்வின் இவர்கள் முன் வருகிறார்.
ஆறு கான்ஸ்டபிள்களுடன் ஒருவராக இருக்கும் தரணியின் தலையை தன்னுடைய வாளால் வெட்டி எரிகிறார் அஸ்வின். இதைப் பார்த்த மற்ற கான்ஸ்டபிள்கள் விலகி ஓடுகிறார்கள். அவர்களை அஸ்வினின் கூட்டமும் பின்னாலேயே துரத்துகிறது.
உள்ளே இருக்கின்ற குடிசைகளில் ஒரே ஒரு குடிசையில் மட்டுமே ஒரு பெண் இருக்க அவரிடம் விசாரிக்கும் போதும் எதுவும் தெரியாமல் போகிறது. செல்போன் டவர் கிடைக்கவில்லை. அதனால் சிக்னல் கிடைக்காமல் செல்போனை யூஸ் பண்ண முடியவில்லை. போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் சொல்ல முடியவில்லை. போலீசாரையும் அழைக்க முடியவில்லை. இவ்வளவு பிரச்சனைகளில் கொலை செய்ய வருபவர்களிடமிருந்து தப்பிக்க வேண்டிய சூழல்.
இறுதியில் அதர்வா அண்ட் கோ என்ன செய்தது?.. அஸ்வின் யார்? அவர் எதற்காக போலீசாரை கொலை செய்கிறார்?.. என்கிற மில்லியன் டாலர் சந்தேகங்களுக்கு பதிலை இடைவேளைக்கு பின்னான காட்சிகளில் ஃப்ளாஷ்பேக்கோடு இணைத்து சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
துடிப்பான இளைஞனாக அதர்வா இப்போதும் திரையில் தோன்றும் பொழுது நம்மால் வெகுவாக ரசிக்க முடிகிறது. அந்த துடிப்பு இன்றைக்கு இருக்கும் அதிகமான நடிகர்களிடம் இல்லை என்பது உண்மை. ஆனால், அதர்வாவிடம் அது இருக்கிறது. அதற்காகவே அவருக்கு இது மாதிரியான கதாபாத்திரங்களையே இயக்குநர்கள் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
இந்தப் படத்திலும் காவல் துறையின் உடை அணிந்திருக்கும் நேரத்தில் அவருடைய காக்கி உடை மீதான பாசத்தையும், குற்றவாளிகள் யார் என்பதை கண்டுபிடித்து தீர வேண்டும் என்று நினைக்கின்ற அந்த முனைப்பையும் அதர்வாவின் நடிப்பினால் நம்மால் ரசிக்க முடிந்திருக்கிறது. லாவண்யா திரிபாதியுடனான ரொமான்ஸ் காட்சிகளிலும் பிளாஷ்பேக்கில் கொஞ்சம் நம்மை ரசிக்க வைத்திருக்கிறார் அதர்வா.
படத்தின் இரண்டாவது ஹீரோவான அஸ்வின் ஒரு அழுத்தமான போராளி என்கின்ற கதாபாத்திரத்தை மிக அழகாக நடித்திருக்கிறார். அவருடைய விரைப்பான முகமும், உடல் வாகுவும் வில்லன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறது.
லாவண்யா திரிபாதி தன்னுடைய சின்ன போர்ஷனுக்காக நடித்துக் கொடுத்திருக்கிறார். அதுவும் ரசிப்பாகவே இருக்கிறது.
மற்ற கான்ஸ்டபிள்களாக அடித்தவர்களும் அந்தத் துயரத்திலும் உயிரைக் காக்க ஓடுகின்ற அந்த ஓட்டத்திலும் ஒரு சிறப்பான நடிப்பை காண்பித்திருக்கிறார்கள்.
அதர்வாவின் அப்பாவாக நடித்திருக்கும் அழம்பெருமாள், அம்மாவான சோனியா வெங்கட், பிரதீப் விஜயன் மற்றும் பலரும் அவரவர் கதாபாத்திரங்களுக்கேற்ற நடிப்பையே காண்பித்து இருக்கிறார்கள்.
தொழில் நுட்பத்தில் பாராட்ட வேண்டும் என்றால் முதலில் இந்தப் படத்தின் கலை இயக்குநரை வெகுவாக பாராட்டலாம். அவ்வளவு பெரிய கிரவுண்டில் அழகாக குடிசை வீடுகளை சேரி மாதிரி செட் செய்து அதற்குள்ளாகவே கேமராவை தூக்கிக் கொண்டு ஓடும்விதமாகவும் இடைவெளி விட்டு இடம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கான குழப்பத்தை தரும் குடியிருப்பாக இதை மாற்றி அமைத்திருக்கும் கலை இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.
ஒளிப்பதிவாளர் ரொம்பவே பாவம். படம் முழுக்க ஓடிக் கொண்டே இருந்திருப்பார் போலும்! அப்படி பரபரப்பாக கேமராவை வைத்துக்கொண்டு ஓட்டமாய் ஓடி கொலை செய்யும் கும்பலையும், கொலை செய்ய வருபவர்களும் தப்பிக்கும் கூட்டத்தையும் விடாமல் துரத்தி, துரத்தி காண்பித்திருக்கிறார் அவருடைய ஒளிப்பதிவு திறமைக்கு நமது பாராட்டுக்கள்.
இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பின்னணி இசைதான் அசத்தல். அந்த அளவுக்கு அவர்கள் ஓடும்போதே அந்த இசையும் நம்முடைய மனதை தடதடவென்று ஓட வைத்திருக்கிறது.
படத் தொகுப்பாளர் எவ்வளவு கஷ்டப்பட்டு காட்சிகளை தொகுத்து அளித்திருக்கிறார் என்பது இன்னொரு முறை படம் பார்த்தால் நமக்கே தெரிய வரும். அவ்வளவு இருட்டான பகுதிகளில் எதை அடையாளப்படுத்திக் கொண்டு காட்சிகளை வடிவமைத்தார்கள்.. வரிசைப்படுத்தினார்கள்.. என்று யோசித்தால் படத் தொகுப்பாளரின் திறமைக்காக நாம் அவருடன் கை குலுக்கத்தான் வேண்டும்.
ஒரு முட்டாள்தனமான கதை, திரைக்கதையில் ஏற்றுக் கொள்ள முடியாத கருத்துகள் சம்பவங்களை வைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கும் இயக்குநருக்கு நமது வன்மையான கண்டனங்கள்.
வாக்கி டாக்கியை பயன்படுத்தி இவர்கள் என்ன திட்டம் விடுகிறார்கள் என்பதை அதர்வா கண்டுபிடிக்கும்விதமும், அதை தெரிந்து கொள்வதற்காக அந்த நேரத்தில் அவர்கள்படுகின்ற அவஸ்தையும் படம் பார்க்கின்ற நமக்குள் லப்டப் என்று ஒரு உணர்வினை தூண்டிவிட்டிருக்கிறது.
படத்தின் இரண்டாம் பாதியில்தான் படத்தின் சஸ்பென்ஸ் ஃப்ளாஷ் லைட் சீன்கள் எல்லாம் வெளியில் வருகின்றன. இதில் அஸ்வினின் பிளாஷ்பேக் காட்சி கொஞ்சம் லாஜிக் எல்லை மீறலாக இருந்தாலும் ரசிக்கக் கூடியதாகவே இருந்தது. ஆனால் அதர்வாவின் பிளாஷ்பேக் காட்சியில் கொஞ்சம் ஏற்க முடியாததாகவே கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர்.
இவ்வளவு சண்டைகளுக்கிடையில் இந்த பிளாஷ் பேக் காட்சிகளை நாம் பார்த்து ரசிக்கும் அளவுக்கான திரைக்கதையில் செருகல்களை சரியானவிதமாகத்தான் இயக்குநர் செய்திருக்கிறார்.
ஆனால் கதைப்படி பார்த்தால் நிச்சயமாக இந்த படத்தில் மிகப் பெரிய தவறு இருக்கிறது. ஒரு போலீஸ்காரன் தவறு செய்ததற்கு அத்தனை போலீஸ்காரர்களையும் கொலை செய்ய வேண்டும் என்று நினைப்பது எந்த விதத்திலும் நியாயம் அல்ல! விவசாயிகள் தங்களுடைய வாழ்வாதாரத்துக்காகவே போராடுகிறார்கள். இல்லை என்று சொல்லவில்லை. விவசாயிகளுக்கான போராட்டத்தில் அவர்கள் அதிகம் எதிர்ப்பது தங்களுடைய நிலங்களை கார்பரேட் நிறுவனங்களுக்காக அரசுகள் கையகப்படுத்தும்போதுதான். இதில் நாம் அரசுகளைதான் குற்றம் சொல்ல வேண்டும். அதன் பிறகுதான் கார்ப்பரேட் நிறுவனங்கள். அதற்கு பின்பு இவர்களின் கையாளர்களான போலீஸ்காரர்களை..!
இயக்குநரோ மொத்தமாக பலி முழுவதையும் போலீஸ்காரர்கள் மேல் திணித்து அவர்கள் அனைவரையும் கொலை செய்வதுதான் சரியானது. அப்படி செய்தால்தான் அவர்களுக்கு சாமானிய மக்கள் மீது ஒரு பயம் வரும் என்றெல்லாம் வில்லன் அஸ்வின் சொல்வது ஒரு தவறான புரிதல். இந்த விஷயத்தில் தவறான பாதையை இயக்குநர் காட்டியிருக்கிறார் என்றுதான் நாம் சொல்ல வேண்டும்.
வங்கிகளில் இருக்கும் பணம் நிச்சயமாக மக்களுடைய பணம்தான். அந்த பணத்தையே கொள்ளையடித்தால் பின்பு மக்களுக்காக போராடுகின்றவர்கள் என்று அவர்கள் தங்களை சொல்லிக் கொள்ள முடியுமா.. முடியாதில்லையா.. ஆக வங்கிகளை கொள்ளையடித்து அதையும் சுரங்கத்திற்குள் வீசி விட்டு போகின்ற அந்த திட்டமெல்லாம் முட்டாள்தனமாகவே நமக்கு தெரிகிறது.
அஸ்வின் கடைசியாக நம் முன்பாக ஒரு போராளியாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறார் என்று மட்டுமே நமக்கு தோன்றுகிறது. ஆனால் அவர் நம்முடன் மனரீதியாக நெருங்கவே இல்லை என்பது துரதிர்ஷ்டமானது.
கார்ப்பரேட் நிறுவனங்களை வளர்த்துவிட்டு அவர்கள் மூலமாக தங்களை வளப்படுத்திக் கொள்ளும் அரசியல் வியாதிகள்தான் அனைத்திற்குமான காரணம். ஆனால் இதில் அவர்களைப் பற்றி மட்டும் சொல்லாமல் அப்பாவி மக்கள் நம்பி பணம் போட்டிருக்கும் வங்கியை கொள்ளையடிப்பது ஏற்புடையதல்ல.
தங்களுடைய குடும்பத்திற்காக அரசு வேலை என்கின்ற பாணியில் காவல் துறையில் வேலை பார்க்கும் போலீசார் அனைவரையுமே வில்லன்களாக சித்தரித்து அவர்களை சாகடிக்க நினைப்பது என்ற இரண்டு முரண்பாடான பிரச்சனைகளை இயக்குநர் ஒரே தட்டில் வைத்து எப்படி எடை போட்டு பார்த்திருக்கிறார் என்பது நமக்கு புரியவில்லை.
படத்தில் நடித்திருக்கும் பலரும் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டிருந்தாலும் வியக்க வைக்கும் கடுமையான உழைப்பில் இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தாலும், ஒரு கருத்தியல் கண்ணோட்டத்தில் இத்திரைப்படம் தவறான திரைப்படமாகவே நமக்கு தோன்றுகிறது.
இந்தத் தணல் எந்த விதத்திலும் நம்மை சுடவில்லை என்பதுதான் உண்மை.
RATING : 3 / 5









