full screen background image

தடம் – சினிமா விமர்சனம்

தடம் – சினிமா விமர்சனம்

‘குற்றம் 23’ திரைப்படத்தை தயாரித்த ரெதான் -தி  சினிமா  பீப்பிள்  நிறுவனத்தின் தயாரிப்பாளர்  இந்தர் குமார்தான் இந்தப் படத்தையும் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் அருண் விஜய் எழில், கவின் என்று இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். மேலும், தான்யா  ஹோப்,  ஸ்முருதி,  பெப்சி  விஜயன், யோகி  பாபு,  ஜார்ஜ்,  சோனியா  அகர்வால்,  ஜார்ஜ், வித்யா  பிரதீப்,  மீரா  கிருஷ்ணன்  உள்ளிட்ட  பலரும் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – மகிழ் திருமேனி, தயாரிப்பு நிறுவனம் – ரெதன்-தி சினிமா பீப்பிள், தயாரிப்பாளர் – இந்தர்குமார், ஒளிப்பதிவு – கோபிநாத், படத் தொகுப்பு – காந்த், கலை இயக்கம் – அமரன், இசை – அருண்ராஜ், பாடல்கள் – மதன் கார்க்கி, ஏக்நாத், சண்டை இயக்கம் – ஸ்டன் சில்வா, அன்பறிவ், நடன இயக்கம் – தினேஷ், தயாரிப்பு நிர்வாகம் – ஆர்.பி.பாலகோபி, ஈ.இளங்கோவன், ஒலி – டி.உதயகுமார், ஒலி வடிவமைப்பு – சுரன், அழகியகூத்தன், உடை வடிவமைப்பு – பிரதிஷ்டா, புகைப்படங்கள் – அஜய் ரமேஷ், கிராபிக்ஸ் – பிரசாத், விளம்பர வடிவமைப்பு – சசிதரன், உடைகள் – பி.ஆர்.கணேசன், ஒப்பனை – ராமச்சந்திரன், மக்கள் தொடர்பு – நிகில்.

தனது முந்தைய படங்களான ‘தடையறத் தாக்க’, ‘மீகாமன்’ போலவே இத்திரைப்படமும் மிகச் சிறந்த சஸ்பென்ஸ். திரில்லர் படங்களுக்கு எடுத்துக்காட்டாய் உருவாகியுள்ளது.

சிவில் என்ஜீனியரிங் படித்துவிட்டு பெரிய கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார் எழில் என்னும் அருண் விஜய்-1. தன்னுடைய நிறுவனம் இருக்கும் அதே பில்டிங்கில் வேறொரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வரும் தன்யா ஹோப்பை பார்த்தவுடனேயே பிடித்துவிடுகிறது எழிலுக்கு. அவரை விரட்டி விரட்டி காதலிப்பதாகச் சொல்லி தனது காதலுக்கும் ஓகே வாங்குகிறார் எழில்.

இன்னொரு பக்கம் கவின் என்னும் மற்றொரு அருண் விஜய்-2. ஊரறிந்த ரவுடி. தனது கூட்டாளியான யோகிபாபுவுடன் சேர்ந்து திருட்டுத் தொழிலை செய்து வருகிறார். இவருக்குப் பழக்கமான மற்றொரு பெண் கிரிமினலான மீரா கிருஷ்ணன் கவினை தனது மகன் என்று சொல்லி தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் இன்னொரு நாயகியான ஸ்முருதிக்கு அவரை மணமுடிப்பதாக நைச்சியமாகச் சொல்லி பணம் பறிக்க முயல்கிறார். இதைக் கடைசியில் கண்டுபிடிக்கும் கவின் அந்தப் பணத்தையும் மீரா கிருஷ்ணனிடம் இருந்து ஸ்வாகா செய்து கொள்கிறார்.

யோகிபாபுவுக்கு தொழில் அபிவிருத்திக்காக கந்து வட்டிக்காரரிடம் வாங்கிய 9 லட்சம் ரூபாய் கடனை அடைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கடனை கட்டாததால் யோகியை அந்தக் கந்து வட்டிக் கும்பல் தூக்கிச் சென்று விடுகிறது. இப்போது அந்தப் பணத்தைக் கட்டி தனது நண்பனை மீட்க முயல்கிறார் கவின். வேறு வழியில்லாமல் ஸ்முருதியிடமே சென்று பண உதவி கேட்கிறார் கவின். ஸ்முருதியும் காதல் உணர்வுடன் கவினிடம் பணத்தைக் கொடுக்கிறார்.

இன்னொரு பக்கம் தனது அலுவலகத்தில் தானே வைத்த பிறந்த நாள் பார்ட்டியில் இருந்து பாதியிலேயே கிளம்புகிறார் எழில். ஆனால் ஏதோவொரு மனப் பதற்றத்தில் இருக்கிறார். இன்னொரு பக்கம் கவின் கந்து வட்டிக்காரனிடம் பணத்தைக் கட்டிவிட்டு யோகிபாபுவை மீட்கிறார்.  

அன்றைய இரவில் ஆகாஷ் என்றொரு இளைஞர் நீலாங்கரை அருகேயுள்ள அவரது வீட்டில் கொலை செய்யப்படுகிறார். இந்தக் கொலையை செய்வது எழிலா அல்லது கவினா என்று தெரியவில்லை. ஆனால் இவர்கள் இருவரில் ஒருவர்தான் என்று காட்சிப்படுத்தப்படுகிறது.

நீலாங்கரை ஸ்டேஷனில் சப்-இன்ஸ்பெக்டராக இருக்கும் வித்யா பிரதீப் இந்த வழக்கை விசாரிக்கிறார். போலீஸ் விசாரணையில் முதல் சில நாட்கள் எந்தத் துப்பும் இல்லாமல் போகிறது. ஆனால் கடைசியாக ஆகாஷ் வீட்டின் பின்னால் இருக்கும் ஒரு வீட்டுக்காரரின் செல்போனில் இருந்து எடுக்கப்பட்ட ஷெல்பியில் ஆகாஷ் வீட்டின் பால்கனியில் எழில், அல்லது கவின் இருவரில் ஒருவர் நிற்பது தெரிய வருகிறது.

இந்தப் புகைப்படத்தைப் பார்க்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெப்சி விஜயன், எழிலை தனக்கு முன்பேயே தெரியும் என்று சொல்லி எழிலை பிடித்து வந்து சித்ரவதை செய்கிறார். ஆனால் எழில் தனக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்கிறா்.

இதே நேரம் குடிபோதையில் டூவீலரில் வந்து போலீஸ் கார் மீது மோதியதாக கவினை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். எழிலும், கவினும் ஒரே மாதிரியாக இருப்பதை பார்த்து போலீஸார் அதிர்ச்சியடைய.. இருவரையு தனித்தனியாக விசாரிக்கிறார்கள். அப்படியும் இருவரும் ஒரே மாதிரியாகவே பதிலைச் சொல்கிறார்கள்.

தற்செயலாக அங்கேயிருந்து தப்பிக்கப் பார்க்கும் எழில், போலீஸ் ஸ்டேஷனில் இருந்த கவினைப் பார்த்தவுடன் அவருடன் அடிதடியில் இறங்குகிறார். தடுக்க வந்த போலீஸாருக்கும் மூக்கு உடைகிறது. வாயில் ரத்தம் வருகிறது.

இந்த அளவுக்குக் கடுமையான அடிதடியாகப் போக.. இருவருக்கும் முன் விரோதம் இருக்கிறது என்பதை நினைத்து அதிர்ச்சியாகும் போலீஸ் இது குறித்து மேலும் விசாரிக்க.. இருவருமே அண்ணன், தம்பிகள் என்ற கதை அவர்களுக்குத் தெரிய வருகிறது.

கவின் அந்த இரவில் கந்துவட்டிக்காரனுக்கு 9 லட்சம் ரூபாய் கொடுத்து யோகி பாபுவை மீட்டது போலீஸுக்குத் தெரிய வருகிறது. ஆகாஷின் வீட்டிலும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை ஆகாஷின் அக்காள் உறுதிப்படுத்துகிறாள். இதனால் ஒருவேளை கவின்தான் இந்தக் கொலையைச் செய்திருப்பாரோ என்கிற சந்தேகம் போலீஸுக்கு வருகிறது.

இன்ஸ்பெக்டர் பெப்சி விஜயன் தனது மகளது காதல் திருமணத்தை நடத்தி வைத்த காரணத்திற்காக எழிலை பழி வாங்க நினைக்கிறார். எப்படியாவது இந்தக் கொலையை கவின் செய்திருந்தாலும் எழில் செய்ததாக காட்டி அவனை ஜெயிலுக்கு அனுப்பத் துடியாய் துடிக்கிறார்.

எழில் இந்தக் கொலையைச் செய்யவில்லை என்று நம்பும் சப்-இன்ஸ்பெக்டர் வித்யா பிரதீப் எப்படியாவது எழிலை காப்பாற்றவும், உண்மையான குற்றவாளியை கைது செய்யவும் துடியாய் துடிக்கிறார்.  

எழில், கவின் இருவருமே ஆகாஷை தாங்கள் கொலை செய்யவில்லை என்று அடித்துச் சொல்கிறார்கள். கோர்ட்டில் ஆஜர்படுத்த ஒரு நாள் மட்டுமே கெடு உள்ள நிலையில் போலீஸ் இதற்கு மேல் என்ன செய்தார்கள்..? நிஜமான குற்றவாளிகள் யார்..? ஆகாஷை கொலை செய்தது யார்..? ஏன் கொலை செய்தார்கள்…? என்பதுதான் இந்த சஸ்பென்ஸ் திரில்லர் படத்தின் சஸ்பென்ஸான கதை.

பொதுவாகக் குற்ற வழக்குகளில் கைரேகை, நேரில் பார்த்த சாட்சியம், வீடியோ ஆதாரங்கள் இல்லையெனில் குற்றவாளியின் ரோமம், அல்லது அவர்களது எச்சில், ரத்தம் இவற்றில் இருக்கும் டி.என்.ஏ.வை வைத்தே இவர்தான் குற்றவாளி என்று ஊர்ஜிதப்படுத்துவார்கள். இதுதான் உலகமெங்கும் உள்ள நடைமுறை.

ஆனால் எந்த ஆதாரமும் இல்லாத பட்சத்தில் டி.என்.ஏ. ஒப்பீடு என்பது இரட்டையர்களாக பிறந்து வளர்ந்தவர்களிடத்தில் கண்டு பிடிக்கவே முடியாது என்பது பல்வேறு நாடுகளில் நடந்த குற்ற வழங்குகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மலேசியா, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் சில இரட்டையர்கள் கொலை, கொள்ளை, போதை மருந்து கடத்தல் ஆகிய குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால் இரட்டையர்களில் யார் குற்றவாளி என்று டி.என்.ஏ டெஸ்ட் செய்து பார்த்தபோது இருவரின் டி.என்.ஏ.வும் ஒன்று போல் இருந்ததால் இருவரில் யார் இந்தக் குற்றத்தைச் செய்தது என்பது நிரூபிக்க முடியாமல் விடுதலையாகியிருக்கிறார்கள்.

இந்தச் சம்பவங்களை மையமாக்கித்தான் இயக்குநர் மகிழ் திருமேனி இந்தக் கதையைப் படமாக்கியிருக்கிறார். நிச்சயமாக இது இந்திய சினிமாவுக்கே புத்தம் புதிய கதைதான்.

அருண் விஜய் மிகக் கடுமையாக உழைத்திருக்கிறார். இரட்டை வேடங்களில் அதிக வித்தியாசமில்லை. அணிந்திருக்கும் உடைகளும், பேச்சு ஸ்டைலும் மட்டுமே மாற்றம். மற்றபடி அதிக ஒற்றுமையுடன் சில காட்சிகளில் படம் பார்ப்பவர்களுக்கே சற்றுக் குழப்பத்தைத் தரும் அளவுக்கு நடித்திருக்கிறார்.

அவருடைய நடிப்பு படத்திற்கு படம் மாறுபட்டே வருகிறது என்பதற்கு இத்திரைப்படமும் ஒரு சான்று. படத்தின் துவக்கத்தில் எழிலாக தனது காதலியிடம் தன் காதலைச் சொல்ல அவர் தவிக்கும் தவிப்பும், காபி சாப்பிட கேண்டீனுக்கு அழைத்ததில் என்ன தவறு என்று யோசித்துக் கொண்டேயிருக்கும் காட்சியில், ரசிக்க வைத்திருக்கிறார்.

ஸ்முருதியிடம் போய் பண உதவி கேட்டு கவினாக நிற்கும் காட்சியில் “இந்தப் பொண்ண ஏமாத்திராதப்பா” என்று நம்மையே சொல்ல வைக்கிறது அவரது நடிப்பு. “சிவில் என்ஜீனியரிங்கெல்லாம் ஒரு படிப்பா..?” என்று எழிலின் காதலியான தன்யா ஹோப் கேட்டவுடன் அதற்கு எழில் கொடுக்கும் உதாரண விளக்கத்தை மட்டும் நீக்கியிருக்கலாம். கொஞ்சம் ஓவர் டோஸ் அது..!

போலீஸிடம் இருவரும் மாறி, மாறி உண்மையை உரக்கச் சொல்லும் காட்சிகளில் உண்மையாகவே நமக்கே குழப்பத்தைத் தரும் அளவுக்கு நடித்திருக்கிறார் அருண் விஜய். அவருக்கு நிச்சயம் பெருமையளிக்கும் படம் இது.

நாயகிகளில் தன்யா ஹோப் குளோஸப் காட்சிகளில் வித்தியாசமாக வசனத்தை உச்சரித்திருப்பதுபோல தெரிகிறது. ஆனால் அழகாக இருக்கிறார். பல கேமிரா கோணங்களில் இவரது அழகு பரிபூரணமாக பளிச்சிடுகிறது. எழில் தன்னை சைட் அடிப்பதை தனது கண்களாலேயே உணர்த்தும் காட்சியும், காபியை டீயாக மாற்றிச் சொல்லும்வரையிலும் “தப்பா பேசுறீங்க. கரெக்ட்டான கேள்வியை கேளுங்க. வரேன்” என்று சொல்லி ஏமாற்றிக் கொண்டே போகும் காட்சியிலும் ரசிக்க வைக்கிறார். 

மென்மையான நாயகியாக.. கல்யாணத்திற்காகக் காத்திருக்கும் சராசரி பெண்ணாக ஸ்முருதி.. நடிப்பில் பூரணத்தைச் செய்திருக்கிறார். கவின் தன்னை ஏமாற்றிவிட்டார் என்று தெரிந்தும் அவரைக் காதலுடன் காண்பதும், திரும்பவும் அவருக்கு உதவி செய்யும் காதலியாக ஒரு பாவத்தை முகத்தில் காட்டுகிறார். நன்று.

வருகின்ற சில காட்சிகளில் போரடிக்காமல் இருக்கும்வகையில் நகைச்சுவையை சிதறடிக்கிறார் யோகிபாபு. கொஞ்சம் அழுத்தமான செண்டிமெண்ட் காட்சிகளாகவும் அவைகள் இருப்பதால் ரசிக்க முடிகிறது.

பெண் துணை ஆய்வாளரான வித்யா பிரதீப் போலீஸ் தோற்றத்திற்கு செட்டாகவில்லை என்றாலும் அழகி. காவல்துறையில் புதிதாகப் பணிக்கு சேரும் பெண் அதிகாரிகள் என்ன பாடுபடுவார்கள் என்பதை உதாரணப்படுத்துவதுபோல நடித்திருக்கிறார் வித்யா. கடைசியில் இவரது உதவிக்கரமே இரட்டையர்கள் தப்பிக்க உதவியாய் இருப்பதும் சுவையான டிவிஸ்ட்.

இதுவரையிலும் நடித்திருக்காத ஒரு பெண் கிரிமினல் கேரக்டரில் நடித்திருக்கிறார் அம்மா நடிகையான மீரா கிருஷ்ணன். அதிர்ச்சியாகவும் இருக்கிறது. ஆச்சரியமாகவும் இருக்கிறது. இந்த வயதில் சிகரெட் பிடிப்பது போல இவர் நடித்திருப்பது படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய கிப்ட் என்றே சொல்லலாம்.

இன்ஸ்பெக்டரான பெப்சி விஜயன் மிரட்டியிருக்கிறார். வசமா சிக்கிட்டாண்டா ஒருத்தன் என்ற நினைப்பில் எழிலைத் தூக்கி வருவதும், அவரை கேஸில் சிக்க வைத்து தண்டனை வாங்கிக் கொடுக்க எத்தனித்து அது ஒவ்வொரு டிவிஸ்ட்டிலும் கொஞ்சம், கொஞ்சமாக உடையும்போது இவர் காட்டும் கடுப்பும் ரசிக்கத்தக்கது.

பிளாஷ்பேக் கதையில் அம்மாவாக நடித்திருக்கும் சோனியா அந்தக் கேரக்டருக்கு மிகக் கச்சிதமான பொருத்தம். தனது மகனே தன்னைத் தவறாக நினைத்துவிட்டானே என்ற வருத்தம் மேலோங்க அவர் எடுக்கும் முடிவு பரிதாபமானது. ஆனால் அவரது செயல்பாடுகளை அவரே தவறு என்று நினைக்கும் அளவுக்கு காட்சிகள் இல்லாதது ஒரு குறைதான்..!

மேலும் கான்ஸ்டபிள் ஜார்ஜ், கந்துவட்டி பிஸினஸ் செய்யும் ஆள், ஏடிஎம் மிஷினை வாங்கும் சேட்டு, எழில், கவினின் அப்பா என்று படத்தில் இடம் பெற்றிருக்கும் ஒரு சிலரும் படத்தில் நன்கு நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

மகிழ் திருமேனியின் படங்களில் அவரது இயக்கத்துக்கு பிறகு சிறப்பானதாக இருப்பது ஒளிப்பதிவாகத்தான் இருக்கும். இந்தப் படத்திலும் அது ஒளிப்பதிவாளர் கோபிநாத்தால் சாத்தியமாகியிருக்கிறது.

அதிகப்பட்சம் இருட்டு, குறைந்தபட்ச ஒளியுடனான பகல் காட்சிகள் என்று இரண்டையும் சம அளவில் பாவித்து ஒளிப்பதிவை கையாண்டிருக்கிறார் கோபிநாத். போலீஸ் ஸ்டேஷன் காட்சிகள், ஆகாஷ் கொலை செய்யப்படும் காட்சி, எழில், கவின் சண்டை காட்சிகள், கிளைமாக்ஸில் உண்மையை இரட்டையர்களே உடைக்கும் காட்சி என்று பலவற்றிலும் கேமிராவின் பங்களிப்பு மிக அதிகம்.

பாடல்கள் வழமையாக இருந்தாலும் பின்னணி இசையில் பெயர் சொல்லும் அளவுக்கு இசைத்திருக்கிறார் இசையமைப்பாளர் அருண் ராஜா. சில இடங்களில் மெளனித்தும், பல இடங்களில் வேகமெடுத்தும் திரைக்கதைக்கும், காட்சிக்கும் உயிரூட்டியிருக்கிறார் இசையமைப்பாளர்.

படம் முடிந்த பின்புதான் பின்னணி இசை என்ற ஒன்றுதான் கடைசிவரையிலும் தங்களை நகர்த்தியிருப்பதை உணர்கிறார்கள் பார்வையாளர்கள். இதற்குகாகவும் இயக்குநருக்கு ஒரு தனி பாராட்டுக்கள்..!

காவல் நிலையத்திற்குள் நடைபெறும் எழில்-கவின் சண்டை காட்சியை மிக அழகாக வடிமைத்திருக்கிறார் சண்டை இயக்குநர்கள் அன்பறிவ் இரட்டையர்கள். இந்தத் தாக்குதலை கச்சிதமாகப் படம் பிடித்த ஒளிப்பதிவாளருக்கும், அதைவிட அழகாகத் தொகுத்தளித்திருக்கும் படத் தொகுப்பாளர் ஸ்ரீகாந்துக்கும் நமது பாராட்டுக்கள்.

கலை இயக்குநர் அமரனின் கைவண்ணத்தில் அனைத்து செட்டிங்குகளும் செட்டிங்குகளாகவே இல்லை எனலாம். போலீஸ் ஸ்டேஷன் செட்டப்பை நிஜமாகவே அழகுற அமைத்திருக்கிறார் அமரன்.

இயக்குநர் மகிழ் திருமேனியை எத்துனை பாராட்டினாலும் தகும்..! சிறந்த இயக்குநர்களால்தான் இது மாதிரியான உண்மைத்தனத்தை அனைத்துப் பிரிவுகளிலும் கொண்டு வர முடியும். அந்த வகையில் மகிழ் திருமேனி சிறந்த இயக்குநர்களில் ஒருவராகவே இருக்கிறார்.

அவருடைய முந்தைய படங்கள் அனைத்துமே கதை, திரைக்கதை, இயக்குதலில் தனி சிறப்பிடத்தைப் பிடித்தவை. இத்திரைப்படமும் அப்படியேதான் அமைந்திருக்கிறது.

நம்பும்படியான திரைக்கதை, காதலர்களுக்கே பிடித்தமான காதல் கதைகள், நெகிழ்ச்சியையூட்டும் குடும்பக் கதை, பரபரப்பான திரைக்கதை, இனிமையான பின்னணி இசை, அட்டகாசமான இயக்கம் என்று படம் முழுவதிலும் பார்வையாளர்களை கட்டிப் போட்டிருக்கிறார் இயக்குநர் மகிழ் திருமேனி.

கதையாக இதுவரையிலும் யாருமே சொல்லாத விஷயத்தைச் தொட்டவிதத்திலேயே பாராட்டைப் பெற்றுவிட்டது. இந்தக் கதையை திரைக்கதையாக விரிவாக்கிய விதம், ஒரு நிமிடம்கூட போராடிக்காத வண்ணம் செய்திருப்பதும் இயக்குநரின் திறமைக்கு ஒரு சான்றாக இருக்கிறது.

இடையிடையே வரும் சுவாரஸ்யமான பல காட்சிகளே படத்தின் மீதான அழுத்தமான பார்வைக்கு உதாரணமாகியிருக்கின்றன. காதலுக்காக எழில்-தன்யா ஹோப் காதல் காட்சிகள்.. நட்புக்காக யோகி பாபுவை மீட்க கவின் படும் கஷ்டம்.. சராசரி மனுஷியின் காதலுக்காக கவின்-ஸ்முருதியின் கல்யாணக் காதல்.. என்று பல திரைக்கதைக் காட்சிகள் படத்தை விறுவிறுப்பாக்கியிருக்கின்றன.

பொதுவாக தடய அறிவியல் துறையின் அதிகாரிகளுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் இருக்கும் உறவு சாதாரணமாக தொழில் முறையாக இருக்கும். அதைக்கூட ஒருவகையில் நெருக்கமாக்கிக் காட்டி வித்தியாசப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

“பொண்ணு பார்க்க வந்தப்போ என்னை ஏன் மேடம் வேணாம்ன்னு சொன்னீங்க?” என்று தடய அறிவியல் துறை அதிகாரி வித்யா பிரதீப்பிடம் கேட்கும் கேள்விக்கு தியேட்டரில் கை தட்டல்கள் பறக்கின்றன. அதோடு அவரது பெயரை செல்போனில் “இடியட்” என்று பதிவு செய்து வைத்திருப்பதையும் காட்டுகிறார் இயக்குநர். ஒரு திசை திருப்பல்தான். ஆனால் அழகானது.

இதேபோல் அடுக்கடுக்காக டிவிஸ்ட்டுகளை திரைக்கதை முழுவதும் பரவிவிட்டிருக்கிறார் இயக்குநர். இதனாலும் படத்தை இமை கொட்டாமல் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர்.

போலீல் ஸ்டேஷனில் எழில்-கவின் இருவரும் தங்களது கதையை போலீஸாரிடம் மாறி, மாறி சொல்லும்விதம்.. இந்தக் காட்சியில் இருக்கும் தொடர்ச்சியான திடீர் திருப்பங்கள்.. இருவரும் நடந்த விஷயத்தை மாற்றி, மாற்றி அதுவும் நம்பும்படியாகச் சொல்வதையெல்லாம் படத் தொகுப்பில் சேர்த்து கச்சிதமாக தொகுத்தளித்திருப்பதால் திரைக்கதை ஜெட் வேகத்தில் பறக்கிறது.

கடைசியாக மன நல மருத்துவமனையில் தலைமை மருத்துவரை கத்தியால் குத்தியது யார் என்கிற கேள்விக்கு விடை கிடைக்கும்போது நமக்கே “திக்” என்று தோன்றும் அளவுக்கு அதை பரபரப்பாக்கியிருக்கிறார் இயக்குநர்.

கடைசி டிவிஸ்ட்டாக சப்-இன்ஸ்பெக்டர் வித்யா பிரதீப் செய்த ஒரு வேலையே இந்தக் கேஸை திரும்பவும் ஒப்பன் செய்யவே முடியாத சூழலை ஏற்படுத்தியிருப்பதை உணர்த்தும் காட்சியில் ‘சபாஷ்’ என்று இயக்குநரை வெகுவாகப் பாராட்ட வைக்கிறது.

வித்தியாசமான கதையுடன், திரைக்கதையையும் சேர்த்து, அழுத்தமான இயக்கத்தையும் கொடுத்தால் அத்திரைப்படம் மிகவும் சிறப்பாகவே இருக்கும். அது போன்ற திரைப்படங்களுக்கு பார்வையாளர்களின் வரவேற்பும் அதிகமாகவே இருக்கும். அந்த வகையில் இத்திரைப்படம் தமிழ்த் திரைப்பட ரசிகர்களால் கொண்டாடப்படும் என்பது உறுதி.

இது எல்லாவற்றிற்கும் மேலாக பெற்றோர்களின் பிரிவினை.. விவாகரத்து.. அவர்கள் செய்யும் தவறுகளால் பிள்ளைகள் எந்த அளவுக்குப் பாதிக்கப்படுவார்கள் என்பதையும் இத்திரைப்படம் எழில்-கவின் வாழ்க்கைக் கதையில் அழுத்தமாகச் சொல்லியிருக்கிகிறது. இதையும் பார்வையாளர்கள் உணர்ந்து கொண்டால் நல்லதுதான்..!

தடம் – தமிழ்ச் சினிமாவில் அழுத்தமாய் தன் தடத்தைப் பதிவு செய்திருக்கிறது..!

Our Score