full screen background image

தாரை தப்பட்டை – சினிமா விமர்சனம்

தாரை தப்பட்டை – சினிமா விமர்சனம்

எத்தனை புதிய இயக்குநர்கள் வந்து கொண்டிருந்தாலும், வருடத்திற்கு ஒரு படம் கொடுத்து வந்தாலும் இயக்குநர் பாலாவின் படங்களுக்கென்றே ஒரு தனி எதிர்பார்ப்பு தமிழ்த் திரையுலகில் உண்டு.

அது படம் நல்லாயிருக்குமா இல்லையா என்பதைவிட பாலா இந்தப் படத்தில் யாரை டார்ச்சர் செய்திருக்கிறார் என்கிற எதிர்பார்ப்பின் அடிப்படையிலேயே இருந்து தொலைவதுதான் சிக்கலான விஷயம். இதிலும் அது சாத்தியப்பட்டிருக்கிறது..!

கலையையும், நெல்லையும் வளர்த்த தஞ்சைத் தரணியில் தொன்றுதொட்ட கலையான கரகாட்டத்தையும், ஆடல் பாடலையும் வளர்க்கும் தொழிலில் தலைமுறை தலைமுறையாக ஈடுபட்டிருக்கும் ஒரு பரம்பரையின் தற்போதைய தலைமையாளராக இருக்கிறார் சாமி புலவர் என்னும் ஜி.எம்.குமார்.

பாடலின் மூலம் கதையைச் சொல்லி அதன் மூலம் பாடலைப் பாடி.. பாடலுக்காக ஆட்டத் திறனைக் காட்டி கலையை வளர்த்த காலம் போய் இப்போதெல்லாம் கரகாட்டம் என்கிற பெயரில் அடிக்கும் கூத்துக்களால் மனம் நொடிந்துபோய் மூலையில் முடங்கிக் கிடக்கிறார் ஜி.எம்.குமார். மகா குடிகாரராகவும் இருக்கிறார்.

இவரது மகன் ‘சன்னாசி’ என்னும் சசிகுமார். குழுவின் தலைவராக இருக்கும் இவர் குழுவின் அனைத்து வேலைகளையும் செய்து வழி நடத்தி வருகிறார். இவரை தீவிரமாக காதலித்து வரும் ‘சூறாவளி’ என்னும் ஆட்டக்காரி வரலட்சுமி. தைரியமானவர். கெட்ட ஆட்டம் போடுகிறார். அதேபோல் ராத்திரியானால் வரும்கால மாமனாருடன் சேர்ந்து ‘கட்டிங்’ போடும் பழக்கமுள்ள நல்ல தமிழச்சி..! தன்னைத் தீவிர வெறியுடன் காதலித்து வரும் வரலட்சுமியின் காதலை சசிகுமார் ஏற்றுக் கொண்டாலும், அதை வெளிப்படுத்திக் கொள்ளும் சராசரி காதலனாக அவர் இல்லை.

திடீரென்று அடக்க ஒடுக்கமாக மாவட்ட ஆட்சியரின் கார் டிரைவராக வேலை பார்ப்பதாகச் சொல்லி அங்கே வரும் சுரேஷ், வரலட்சுமியை தான் தீவிரமாக காதலிப்பதாகவும், அவரை தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறும் வரலட்சுமியின் தாயை மூளைச்சலவை செய்கிறார்.

வரலட்சுமியின் தாயும் தனது மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டி இதற்காக சசிகுமாரிடம் கேட்க.. சசிகுமாரும் வரலட்சுமியிடம் இது பற்றிச் சொல்லி வாங்கிக் கட்டிக் கொள்கிறார். ஆனாலும் சசிகுமாரின் பாராமுகத்தாலும், வேண்டுதலாலும் வரலட்சுமி கல்யாணத்துக்கு சம்மதிக்கிறார்.

இதற்குப் பின்பு வரலட்சுமியின் ஆட்டம் இல்லாததால் சன்னாசி குழுவினரை அழைக்க ஆட்கள் குறைந்துபோக கூட்டத்திற்கு வருமானம் குறைகிறது. குடும்பங்களில் பல பிரச்சினைகள் எழ.. வேறு ஆட்டக்காரிகளை தேடிப் போய் செத்துப் போன பிணத்தின் முன்பெல்லாம் ஆட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது சன்னாசி குழுவினருக்கு..!

இந்த நேரத்தில் அப்பனுக்கும், மகனுக்கும் இது தொடர்பான பிரச்சினையில் மோதல் எழ.. அப்பா ஜி.எம்.குமாரை வார்த்தைகள் கொத்தியெடுக்கிறார் சசிகுமார். இது தாங்காமல் அவர் மரணமடைய.. மேலும் குழப்பமாகிறது அந்தக் குப்பம்.

கல்யாணமாகிப் போன வரலட்சுமி ஒரு வருடமாகியும் திரும்பியே வராமல் இருப்பது குறித்து சசிகுமார் அவரது தாயாரிடம் விசாரிக்க தான் வரலட்சுமியை பார்த்தே பல மாதங்களாகிவிட்டதாக அவர் சொல்ல.. சசிகுமார் வரலட்சுமியை பற்றி விசாரிக்க ஓடுகிறார்.

அங்கே அவருக்கு பல அதிர்ச்சி தகவல்கள் காத்திருக்க.. படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியான விஷயங்கள் காத்திருக்க.. அவைகள் என்ன..? முடிவென்ன என்பதுதான் படம்..!

இந்தப் படத்தின் ஹீரோவும், ஹீரோயினும் வரலட்சமிதான். இவரது முதல் படம் இது என்றேதான் சொல்ல வேண்டும். வாய்த் துடுக்கு.. துள்ளலான நடனம்.. மிக வேகமாக நடிப்பு.. அவருடைய அனைத்துவித அங்க அசைவுகள்.. என்று தனது அனைத்து நடிப்பையும் இந்த ஒரு படத்திலேயே கொட்டித் தீர்த்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே மது பாட்டிலை கையிலெடுத்து அதிர்ச்சியூட்டும் இவர் கடைசிவரையிலும் அந்த அதிர்ச்சிகளை தொடர்ந்து கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். இத்தனை வெளிப்படையாக அசிங்கம், அசிங்கமாக பேசுபவர், தன்னை படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் சூறாவளியாய் பாய்ந்து அழைத்தவர்களை புரட்டி புரட்டியெடுக்கிறார். இதுவும் அவரது கேரக்டர் ஸ்கெட்ச்சாம்..!

நடனத்தில் காட்டிய அதே வேகத்தை வசன உச்சரிப்பிலும் காட்டியிருக்கிறார். இரட்டை அர்த்த வசனங்களை அதே வேகத்தில் பேசிக் காட்டி அதிர்ச்சியாக்கினாலும் திருமணத்தன்று வாயே திறக்காமல் அமைதியாக, வெறுமையாக அவர் இருக்கின்ற சில ஷாட்டுகளே மனதை முட்டுகின்றன..! கிளைமாக்ஸில் தனது இறுதிப் பயணத்தில் வெறித்த பார்வையுடன் அவர் கிடக்கும் சில ஷாட்டுகள்கூட ஒரு கதையைச் சொல்கின்றன.. பிரமாதம் வரலட்சுமி..!

சசிகுமாருக்கும் இது நிச்சயம் பெயர் சொல்லும் படம்தான்.. முகத்தில் திரண்டு வந்து விழும் முடியுடன் அவர் பேசும் பேச்சும், நடிப்பும், காட்டும் ஆவேசமும் பாலாவின் இயக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் இருக்கின்றன. ஜி.எம்.குமாரிடம் மல்லுக்குப் போய் “அடிச்சே கொன்னுருவேன்..” என்று பெத்த அப்பனையே அடிக்கப் போன கோபம் தீராமல் திரும்பிப் போகும் சசிகுமாருக்கு இது நிச்சயம் ஒரு புதுமையான அனுபவம்தான்..!

மூன்றாவது பெத்த பெயரைத் தட்டிச் சென்றிருப்பவர் ஜி.எம்.குமார். அவருடைய உடல்வாகுவே அவரது கேரக்டருக்கு மிகப் பெரிய பலம். அந்த உடலுக்கேற்ற இறக்கத்தோடு அவர் பேசும் வசன உச்சரிப்பும், கொக்கரிப்பும் அவரது கேரக்டருக்கேற்ற பலம். “என்ன வெளக்குப் பிடிக்க போகலையா..?” என்று சசிகுமாரை வெறுப்பேத்துவதாகட்டும்.. “அத்தனை பேரும் போய் நக்கித் தின்னுங்கடா..” என்று திட்டித் தீர்ப்பதாகட்டும் ஒரு தலைமுறையின் சாபத்தை மொத்தமாக கொட்டித் தீர்த்துள்ளார் ஜி.எம்.குமார்.

இந்தப் படத்திலேயே ஒரேயொரு ஆறுதல் காட்சியாக இருப்பது ஜி.எம்.குமார், வெளிநாட்டு பிரதிநிதிக்காக பாடும் அந்த பாடல் காட்சிதான்.. இந்தக் காட்சியை அத்தனை அழகாக படமாக்கியிருக்கிறார் பாலா..!

ஸ்டூடியோ 9 தயாரிப்பாளர் சுரேஷிற்கு இது முதல் படம். முதல் பாதியில் அப்பாவியாய் வலம் வந்தவர் இரண்டாம் பாதியில் டெர்ரர் பார்ட்டியாக வந்து கதி கலங்க வைக்கிறார். இத்தனை குரூரம் தேவையா என்று இவரைக் கேட்க முடியாது. இயக்குநரைத்தான் கேட்க வேண்டும் என்பதால் இவர் தப்பித்தார்..!

இசைஞானி இளையராஜாவின் 1000-மாவது படம் என்பதால் இந்தப் படத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பெயரை இந்தப் படம் முழுக்க முழுக்க பெற்றுள்ளதா என்பதில் சந்தேகம்தான். ஆனால் பின்னணி இசையில் ராஜா அசத்தியிருக்கிறார். டைட்டிலில் துவங்கி இறுதியில் கிளைமாக்ஸில் வரலட்சுமியின் திறந்து கிடக்கும் கண்ணை காட்டும்போது ஒலிக்கும் சின்னஞ்சிறிய இசைவரையிலும் தனி கேரக்டராகவே வலம் வந்து படத்திற்கு பலம் கூட்டியிருக்கிறார்.

செழியனின் கேமிரா பாடல் காட்சிகளில்கூட ஆடியிருக்கிறது.. நடனக் கலைஞர்கள் அனைவரும் ஆளுக்கொரு பாடலை கையில் எடுத்துக் கொண்டு பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். ‘அவன் இவன்’ படத்தில் முதல் பாடலில் எத்தனை கெட்ட ஆட்டம் இருந்ததோ அந்த ஆட்டங்கள் மொத்தத்தையும் இதில் காட்டியிருக்கிறார்கள்.

‘பிதாமகன்’ படத்தில் வரும் பல பாடல்களின் தொகுப்பு போல இதிலும் ஒரு பாடலை வைக்க முடிவு செய்து அதில் சில சொதப்பல்களை செய்திருக்கிறார் பாலா. பாடல் தேர்வுகள் சரியில்லை. இசைஞானியின் இசையில் திருவாசகத்தை மையப்படுத்திய பாடல் ஒன்றே கேட்கும்படியிருந்தது..! மற்றதெல்லாம் தாரையும், தப்பட்டையும் அடித்ததில் காதில் கேட்காமலேயே போய்விட்டது.

நல்ல விஷயங்களை நல்லவிதமாகத்தான் சொல்ல வேண்டும். கெட்ட விஷயங்களையும் நல்லவிதமாகவே சொல்லலாம். இது பாலாவுக்கு மட்டும்தான் தெரிய மாட்டேன் என்கிறது. சென்ற படமான ‘பரதேசி’ வரலாற்றுடன் தொடர்புடைய படம் என்பதால் அதன் பல காட்சிகளை ஏற்றுக் கொள்ள முடிகிறது. ஆனால் இது..?

கரகாட்டம் ஆடுபவர்களின் இப்போதைய வாழ்க்கைச் சூழலை இப்படம் உரித்துக் காட்டுகிறது என்பதை அப்படியே எடுத்துக் கொள்ள முடியாது. இது உண்மையென்றால் இப்படியொரு கேவலமான வாழ்க்கையை வாழ்பவர்கள்தான் கரகாட்டக்காரர்கள்.. அவர்கள் தமிழர்கள் என்றெல்லாம் சொன்னால் அது நமக்குத்தான் கேவலம்..!

ஆண்களுக்கு சமமாக மதுவருந்துவிட்டு.. அதிலும் வரும்கால மாமனாருடனேயே ‘சியர்ஸ்’ சொல்லி சரக்கு அடிக்கும் அளவுக்கு ஒரு திருமணமாகாத பெண் ஒருவர் இருப்பது போலவும்.. உற்சாகத்தில் மாமனாரின் கன்னத்தையே கடிக்கும் அளவுக்கு பாசமுள்ளவராக இருக்கிறார் என்பதெல்லாம் எத்தனை அதீதமான கேரக்டர் ஸ்கெட்ச் கொண்டது..?

மேலும் படத்தில் வரலட்சுமி பேசும் பல வெளிப்படையான பேச்சுக்கள் சிம்புவின் பீப் பாடலைவிடவும் 100 மடங்கு வீரியமானவை. கடையில் உள்ளாடை வாங்கப் போன இடத்தில் ஒரு பெண்ணிடம் “என்ன சைஸ்..?” என்று வயதான ஒரு ஆண் கேட்க.. “நீயே பார்த்துக்க..” என்று அந்தப் பெண் தன் மார்பை காட்டும் காட்சியையெல்லாம் எந்த யதார்த்தவாத, மையவாத, பக்கவாத, திரிபுவாத காட்சியாக எடுத்துக் கொள்வது..?

இதே காட்சியில் வரலட்சுமி தனது கையில் பிராவைத் தூக்கிக் கொண்டு வந்து சசிகுமாரிடம் காட்டி “மாமா.. இந்த சைஸ் எனக்கு பொருந்துமா.. நீயே சொல்லு..?” என்று கேட்கிறார்..? எந்த ஊரில் இந்த அநியாயம் நடக்கிறது..? நடக்கும்..? காட்சிகளை யோசிப்பதற்கும், வைப்பதற்கும் ஒரு அளவு இல்லையா பாலா..?

கரகாட்டக்காரக் குழுவினர் போல்டாக.. வெளிப்படையாக பேசுவார்கள் என்பது உண்மைதான். ஆனால் அதற்கான சூழலை உருவாக்கியது நமது சமூகம்தான் என்பதைத்தான் அங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

அரசர்கள் காலத்தில் இந்தக் கலையை ஒரு கலையாக ஒரு குடும்பமே, குழுவே, கூட்டமே தொடர்ந்து வளர்த்து வந்திருக்கிறது. அப்போது அவர்களை ஆதரிக்க ஒரு கூட்டமும், அரசுகளும், நிர்வாகங்களும் இருந்தன. ஆனால் இப்போது அவைகளெல்லாம் இல்லை. அதோடு மக்களுக்கும் பொழுது போக்குவதற்கும், வேறு வகையான கலைகளை அணுகும் பக்குவமும், ரசனையும் மாறிவிட்டதால் இவர்களுக்கு மவுசு இல்லாமல் போய்விட்டது.

அவர்களைக் கவர வேண்டியே சினிமா வந்த பின்புதான் கரகாட்ட குழுவினரின் போக்கிலும் வித்தியாசம் தென்பட்டது. சினிமா பார்த்து வேறு உலகத்திற்குள் போய்க் கொண்டிருந்த கூட்டத்தைக் கவர வேண்டி இரட்டை அர்த்த ஆபாச வசனங்களை பேச ஆரம்பித்தவர்கள் இன்றைக்கு அதிலிருந்து அவர்களே விடுபட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பக்தியை வளர்க்கிறோம் என்று சொல்லி வள்ளி திருமணம் நாடகம் போட்டவர்கள்.. அதில் பபூன் கேரக்டர்களில் இடையிடையே இரட்டை அர்த்த வசனங்களைத்தான் அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் எங்கேயிருக்கிறது பக்தி..?

“நாங்க என்னங்க செய்யறது..? கூப்பிடுறவங்கதான அப்படி பேசுங்கன்னு சொல்றாங்க” என்கிறார்கள். அழைத்தவர்களோ.. “அப்பத்தான கூட்டம் சேருது..” என்கிறார்கள். கூட்டத்தினரோ அதை எதிர்பார்த்துதான் வருகிறார்கள்.. ஆக ஒரு தலைமுறை கலையை அழித்துக் கொண்டே வர.. வேறு வழியில்லாமல் கலைஞர்களும் இதற்கு உடந்தையாகிக் கொண்டே போகிறார்கள்.. இது எங்கே போய் முடியும்..?

படத்தில்கூட இது தொடர்பான மிகப் பெரிய முரண்பாடு உண்டு. சன்னாசி குழுவினர் அந்தமானில் ஆடும் ஆட்டமும், செத்த பிணத்தின் முன்பு ஆடும் ஆட்டமும் ஒன்றுதான். பின்பு எதற்கு சசிகுமார் “கலையை ஏண்டா கொல்றீங்க..?” என்று இன்னொருவரை திட்டுகிறார். “தங்கச்சிகூடயே இரட்டை அர்த்த டயலாக்குள பேசுறியே..?” என்றும் திட்டுகிறார்.  இரண்டு ஆட்டமும் ஒன்றாகத்தானே இருந்த்து..? இதிலென்ன வித்தியாசம் இருக்கிறது காப்பாற்ற.. அழிக்க..!

சித்ரவதை என்பதை பாலாவின் படங்கள் தொடர்ச்சியாக சொல்லாமல் சொல்லி வருகின்றன. இதிலும் அப்படியே..? பிரார்த்தல் தொழில் செய்யும் பெண்கள் தனியே போக விரும்பி தப்பித்துப் போக அவர்களை போலீஸ் துணையுடன் இழுத்து வரும் சுரேஷ்.. அவர்களை செய்யும் கொடுமைகளெல்லாம் தாங்க முடியாதவை. சவுக்கால் அடிப்பது.. அடித்து உதைப்பது.. எட்டி உதைப்பது.. அனைவருக்கும் மொட்டையடிப்பது என்று சகல பெண்ணிய விரோதத்தையும் இந்த ஒரே காட்சியில் காட்டி முடித்திருக்கிறார்.

வரலட்சுமியை சுரேஷ் அடித்து உதைக்கும் காட்சியில் ரத்தம் சிந்தவில்லை என்றாலும் குத்துச் சண்டை போட்டிகளில்கூட இப்படியொரு ரணகளம் ஏற்பட்டிருக்காது என்பது மட்டும் உண்மை. இது போன்ற காட்சிகளை பார்ப்பவர்களின் மனதில் ஏற்படும் வலியையும், வதையையும் பாலா போன்றவர்களால் உணரவே முடியாது..!

இதுவே வேறு யாராவது ஒரு அறிமுக இயக்குநர் வைத்திருந்தால் இந்நேரம் என்ன ஆகியிருக்கும்..? பத்திரிகாவுலகமே பொங்கியெழுந்திருக்கும். இது பாலாவின் படம் என்பதால் கையது, வாயது பொத்தி, சகல துவாரங்களையும் அடக்கிக் கொண்டு மெளனம் காக்கிறார்கள்..!

இது மாதிரியான.. ஒரு சைக்கோத்தனமான படத்தை எடுக்க பாலா போன்ற ஒரு சைக்கோ இயக்குநரால் மட்டுமே முடியும்..!

‘தாரை தப்பட்டை’ அடித்து, கிழித்து, துவைத்து எடுக்கப் போகிறது என்றார்கள். ஆனால், இது தன்னைத்தானே கிழித்துக் கொண்டு அசிங்கமாய் நிற்கிறது..!

அநியாயம்.. அக்கிரமம், ஆபாசம், வக்கிரம் என்று அனைத்தையும் தாங்கிய கலவை இந்தப் படம்..! நிச்சயம் தமிழ்ச் சினிமா என்றுகூட சொல்ல முடியாத படம்..!

Our Score