இசைஞானி இளையராஜாவின் 1000-வது இசையமைப்பான ‘தாரை தப்பட்டை’ படத்தின் இசை வெளியீட்டு உரிமையை பிரபல ஆடியோ நிறுவனமான ‘தின்க் மியூஸிக்’ கைப்பற்றியுள்ளது.
இயக்குநர் பாலாவின் பி ஸ்டூடியோஸ் மற்றும் நடிகர் சசிகுமாரின் கம்பெனி புரொடெக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் தாரை தப்பட்டை.
இதில் இயக்குநர் சசிகுமார் ஹீரோவாகவும், சரத்குமாரின் மகள் வரலட்சுமி ஹீரோயினாக நடித்திருக்கிறார்கள். பாலா இயக்கியிருக்கிறார். இந்தப் படம் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா இசையமைக்கும் 1000-மாவது படம் என்பது இந்தப் படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய சிறப்பு.
இந்தப் படம் வரும் 2016 பொங்கல் தினத்தன்று ரீலிஸாகவுள்ளது. ஐங்கரன் நிறுவனம் உலகமெங்கும் இந்தப் படத்தை வெளியிடவுள்ளது.
இந்த நிலையில் இதன் ஆடியோ வெளியீட்டு உரிமையை தின்க் மியூஸிக் நிறுவனம் பெற்றுள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் சினிமாவின் இரு பெரும் மேதைகள் இணைந்து உருவாக்கியிருக்கும் ‘தாரை தப்பட்டை’ படத்தின் இசை வெளியீட்டு உரிமையை எங்களது நிறுவனம் பெற்றிருப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.
அதே நேரம் உலகம் போற்றும் இசைஞானியின் 1000-மாவது படத்தின் இசையை வெளியிடும் பாக்கியத்தைப் பெற்றதற்காக நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்.
இத்திரைப்படத்தில் 7 பாடல்கள் உள்ளன. பாடல்கள் அனைத்துமே கிராமியம், ஆடல், பாடல், மெலடி, மேற்கத்திய இசை என்று பல்வேறு வடிவங்களில் உள்ளன. இசைஞானியின் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை இந்தப் படத்தின் பாடல்கள் அளிக்கப் போகின்றன என்பதில் சந்தேகமில்லை..” என்று சொல்லியிருக்கிறார்கள்.
படத்தின் இசை வெளியீடு அநேகமாக டிசம்பர் 17-ம் தேதி நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இசை வெளியீட்டு நிகழ்ச்சியின் உரிமையை விஜய் டிவி 5 கோடி ரூபாய் கொடுத்து கைப்பற்றியிருக்கிறதாம்.