அதோ, இதோ என்று பெரும் சிக்கலில் சிக்கித் தவித்த ‘ரஜினி முருகன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி அடு்தத வெள்ளியன்று வெளியாவது உறுதியாகிவிட்டது.
வசூல் ராஜாவாகத் திகழுந்து கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள இந்த ‘ரஜினி முருகன்’ திரைப்படத்தில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படக் குழுவினரில் பெரும்பான்மையோர் இணைந்து வேலை செய்துள்ளனர்.
இதில், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்திருக்கின்றனர். டி.இமான் இசையமைத்திருக்கிறார். பொன்ராம் இயக்கியிருக்கிறார்.
ஈராஸ் நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட வேண்டிய கடனுக்காக இந்தப் படத்தின் ரிலீஸ் கடந்த 6 மாத காலமாக தள்ளிப் போடப்பட்டு வந்தது.. ஆனால் மூன்று தினங்களுக்கு முன்பாக அனைத்து தடைகளும் பேச்சுவார்த்தை மூலம் பேசித் தீர்க்கப்பட்டுவிட்டதாம். இதையடுத்து ‘ரஜினிமுருகனின்’ ரிலீஸுக்கு திருப்பதி பிரதர்ஸ் தயாராகிவிட்டது.
படத்திற்கு விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படத்தின் திடீர் வரவினால் சூர்யாவின் ‘பசங்க-2’ திரைப்படம் தள்ளிப் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.