full screen background image

“சத்தமாகப் பேசியதையே ‘கட்டப் பஞ்சாயத்து’ என்கிறார்கள்” – சிவசக்தி பாண்டியனின் வருத்தம்..!

“சத்தமாகப் பேசியதையே ‘கட்டப் பஞ்சாயத்து’ என்கிறார்கள்” – சிவசக்தி பாண்டியனின் வருத்தம்..!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான தேர்தல் நவம்பர் 22-ம் தேதி நடக்கவிருக்கிறது.

இதில் தேனாண்டாள் முரளி தலைமையிலான தயாரிப்பாளர்கள் நலன் காக்கும் அணி’யில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சிவசக்தி பாண்டியனிடம் ஓர் உரையாடல்.

உங்கள் அணியின் பலம் என்ன..? வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது..?

‘தேனாண்டாள்’ முரளி தலைமையிலான எங்கள் அணியில் ஆர்.கே.சுரேஷ், கே.ஜே.ராஜேஷ் போன்ற இளையவர்களும் ராதாகிருஷ்ணன் மற்றும் நான் உள்ளிட்ட அனுபவசாலிகளும் இணைந்திருக்கிறோம். இது எங்களுக்குப் பெரும் பலம். எனவே எங்களுக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

எதிரணியில் டி.ராஜேந்தர் இருக்கிறாரே…?

அவர் தனிப்பட்ட முறையில் நல்ல மனிதர். இப்போது விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவராக இருக்கிறார். அப்படி இருக்கும்போது இங்கு வந்து போட்டியிடுவது எதனால்..? இதற்கடுத்து இயக்குநர்கள் சங்கம் சரியில்லை என்று அங்கு போவாரா..? அதற்கடுத்து நடிகர்கள் சங்கம் சரியில்லை என்று அதில் போட்டியிடுவாரா…?

கடவுள் நமக்கு ஒரு பொறுப்பைக் கொடுத்திருக்கிறார் என்றால் அதை நிறைவாகச் செய்ய வேண்டும். அதைவிடுத்து அடுத்தடுத்து என்று போனால் எல்லாம் வீணாகும்.

நாங்கள் ஓட்டுக் கேட்டுப் போகும் எல்லா இடங்களிலும் சக தயாரிப்பாளர்கள் டி.ஆர்., ‘ஏன் இப்படிச் செய்கிறார்’ என்றுதான் கவலையுடன் கேட்கிறார்கள்.

இம்முறை நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தனியாக இருக்கிறதே..?

விஷால் தலைவராக இருந்த பின் கிட்டத்தட்ட இரண்டாண்டுகளாக தயாரிப்பாளர்கள் சங்க செயல்பாடு முடங்கியது. அட்ஹாக் கமிட்டியால் முக்கிய முடிவுகள் எடுக்கவியலாது. இதனால் படமெடுக்கும் தயாரிப்பாளர்களுக்குப் பல சிக்கல்கள். அதனால் உடனடியாக அப்படி ஒரு சங்கம் உருவானது.

ஆண்டவன் அருளால் நாங்கள் வெற்றி பெற்ற பின்பு அவர்களோடு பேசி பிரிந்த சங்கத்தை ஒன்றாக்குவோம்.

இராம.நாராயணனோடு பணிபுரிந்தீர்கள். இப்போது அவர் மகனோடு இணைந்திருக்கிறீர்கள். பயணம் எப்படி இருக்கிறது..?

அண்ணன் இராமநாராயணன் அவர்கள் மிகுந்த ஆற்றல் உடையவர். அமைதியாக அதே சமயம் மிக ஆளுமையுடன் செயலாற்றுவார். மேசையைத் தட்டி சத்தமாகப் பேசாமலேயே எதிராளியைப் பணிய வைக்க முடியும் என்பது உட்பட பல நல்ல விசயங்களை அவரிடம் கற்றேன்.

முரளி மிக நல்ல பண்பாளர். சொந்தப் பணத்தில் நற்பணிகள் செய்யக் கூடிய நல்ல மனசுக்காரர். அவருக்கு உறுதுணையாக இருந்து செயலாற்ற இணைந்திருக்கிறேன்.

இராம.நாராயணன் காலத்தில் நீங்கள் கட்டப் பஞ்சாயத்து செய்தீர்கள் என்று சொல்லப்படுகிறதே..?

பட வெளியீட்டு நேரத்தில் பைனான்சியர், விநியோகஸ்தர், டெக்னீசியன் உட்பட பல வகையிலும், பல தரப்பட்ட சிக்கல்கள் வரும். அவை சம்பந்தமாகப் பேசும்போது சில நேரம் கெஞ்சுவோம், சில நேரம் மிஞ்சுவோம். தயாரிப்பாளர்களைப் பாதுகாக்க சத்தமாகப் பேசியதையே கட்டப் பஞ்சாயத்து’ என்று சொல்லிவிட்டார்கள்.

தயாரிப்பாளர்களின் நலன்களுக்காகவே நான் பேசினேன் என்பதால் இந்தப் பேச்சுகளைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

அப்போதைய முதல்வர் கலைஞரோடு நெருக்கமாக இராமநாராயணன் இருந்ததால் சங்கத்துக்குள் அரசியல் தலையீடு வந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறதே?

இது முற்றிலும் தவறான தகவல். தலைவர் கலைஞரோடு இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி சிறு படங்களுக்கு மானியம், நலத்திட்ட வாரியம், பையனூரில் தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கம், சின்னத்திரைக் கலைஞர்கள் ஆகியோருக்கு வீடு கட்டவும், திரைப்படத் தொழிலாளர்களுக்கு வீடுகள் மற்றும ஸ்டுடியோ அமைக்க இடம் கொடுத்து அரங்கம் அமைக்க உதவினார் தலைவர் கலைஞர்.

அங்கே தொழிலாளர்களிடம் முதலாளிகள் அனுமதி பெற்று படப்பிடிப்புகள் நடத்துகிறோம். உலகிலேயே எங்கும் இல்லாத இந்த நல்ல அதிசயம் நடத்தியவர் கலைஞர்.

அது மட்டுமின்றி இன்றைக்கு மாட மாளிகை, கூட கோபுரமாக இருக்கும் தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகம் இயங்கும் திரைப்பட வர்த்தக சபை கட்டிடம் கலைஞர் அவர்களின் முயற்சியால் உருவானதுதான். அதற்குக் காரணம் அண்ணன் இராமநாராயணன்தான்.

இன்றைய ஆட்சியாளர்களும், திரைப்படத்துறைக்கு நல்ல விசயங்கள் செய்கிறார்கள். ஆகவே எங்களைப் பொறுத்தவரை ஆட்சியாளர்கள் அனுசரனையுடன் சங்கத்துக்கு நல்லது செய்வோம். இதற்கு அரசியல் சாயம் பூச வேண்டியதில்லை.

நீங்கள் படம் தயாரிப்பது குறைந்துவிட்டதே…?

படத் தயாரிப்புச் செலவுகள் பன்மடங்கு அதிகமாகிவிட்டதால் அதை குறைத்துக் கொண்டு விநியோகத்தில் அதிக கவனம் செலுத்துகிறேன்.

அர்ஜுனன் காதலி படம் என்னவானது..?

பல காரணங்களால் தாமதமான அந்தப் படம் இப்போது முழுமையாகத் தயாராகிவிட்டது. 2021 னவரி அல்லது பிப்ரவரியில் வெளியிடவிருக்கிறோம்.

தொடர்ந்து வேறு படங்கள் தயாரிக்கும் திட்டம் இருக்கிறதா…?

நல்ல கதைகள் அமைந்தால் படத் தயாரிப்பில் இறங்குவேன். அடுத்த ஆண்டு நிச்சயம் அது நடக்கும்.

Our Score