சென்சார் போர்டு அனுமதியைப் பெற்றது பாரதிராஜா தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்கம்

சென்சார் போர்டு அனுமதியைப் பெற்றது பாரதிராஜா தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்கம்

தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு படத்தின் தலைப்புக்கு அனுமதி பெறுவது மற்றும், விளம்பர அனுமதிக்கான உரிமத்தை தென் பிராந்திய தணிக்கை அதிகாரி வழங்கியுள்ளார்.

இது குறித்து இந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளரான டி.சிவா இன்று காலையில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்….

“தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகஸ்ட் 2020-ல் இயக்குநர் இமயம் திரு.பாரதிராஜா தலைமையில் துவக்கப்பட்டது.

நூற்றுக்கும் மேற்பட்ட நடப்பில் அதிகம் திரைப்படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் நமது சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். மேலும் பலர் ஒவ்வொரு மாதமும் இணைந்து வருகிறார்கள்.

நமது சங்கம் தொடங்கப்பட்டதில் இருந்து, நமது உறுப்பினர்களான தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்த்து வந்திருக்கிறது. 

குயூப் (QUBE) கட்டணத்திற்கான ஒப்பந்தம் செய்வது, OTT தளங்களில் திரைப்படங்களை வெளியிடுவது குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுடன் ஒப்பந்தம் செய்வது, FEFSI தொழிலாளர்கள் சங்கத்துடன் பல விஷயங்களில் ஒருங்கிணைந்து செயல்படுவது என பல ஆக்கபூர்வமான முன்னேற்பாடுகளை நமது சங்கம் தொடர்ந்து செய்து வருகிறது.

இவ்வாறு அனைத்து சேவைகளையும் நமது தயாரிப்பாளர்களுக்கு செய்து வந்தாலும், அவர்களுக்கு தேவைப்படும் முக்கியமான சேவைகளான திரைப்பட தலைப்பு அனுமதி மற்றும் விளம்பர அனுமதிகளை நமது சங்கத்தால் உடனே தர முடியவில்லை.

நமது சங்கம் தொடங்கப்பட்டதில் இருந்து, இந்த அனுமதி கோரி, தீவிர முயற்சிகள் எடுத்து, பல முறை புதுடெல்லி சென்று மத்திய அமைச்சர் முதல் அனைத்து அதிகாரிகளையும் பார்த்து கோரிக்கை வைத்து வந்தோம்.

நமது இந்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, நேற்று (30.4.2021), இந்த அனுமதியை, பிராந்திய தணிக்கை அதிகாரி (Regional Censor Officer) வழங்கி உத்தரவு அளித்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

இனி நமது சங்க உறுப்பினர்களுக்கு திரைப்பட தலைப்பு அனுமதி மற்றும் விளம்பர அனுமதியை நமது சங்க அலுவலகத்தில் இருந்து பெற்று கொள்ளலாம் என்று தெரிவித்து கொள்கிறோம்.

இனி நமது சங்கம், உறுப்பினர்களுக்கு தேவைப்படும் அனைத்து சேவைகளையும் முழு வீச்சுடன் தர தயாராக உள்ளது என்பதை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

நமது சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள அனைவரும், இந்த சேவைகளை முழுமையாக பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். 

புதிதாக திரைப்படம் எடுக்க விழையும் புதிய தயாரிப்பாளர்களும், தமிழ் சினிமாவின் முன்னணி சங்கமாக வளர்ந்து வரும், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் தங்களை இணைத்து கொண்டு பயன் பெற அழைக்கிறோம்…” என்று கூறியுள்ளார்.

ஒரு திரைப்படத்தைத் தணிக்கை செய்ய வேண்டும் எனில் அதற்கு தயாரிப்பாளர் சங்கத்தின் ஒப்புதல் கடிதம் வேண்டும். அது டைட்டிலுக்கான அனுமதியாகவே கருதப்படும்.

தமிழ்ச் சினிமாவில் இதுவரையிலும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், கில்டு அமைப்பு, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஆகிய மூன்று அமைப்புகளில் இருக்கும் உறுப்பினர்களும் தத்தமது படங்களை சென்சாருக்கு அனுப்புவதற்காக இந்த மூன்று அமைப்புகளில் தாங்கள் இருக்கும் அமைப்புகளில் கடிதம் வாங்கி இணைத்துக் கொடுப்பார்கள். இந்தக் கடிதம் இருந்தால் மட்டும்தான் அந்தத் திரைப்படம் சென்சார் செய்யப்படும். இது விதிமுறையாகும்.

ஆனால் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் புதிதாக சென்ற ஆண்டுதான் துவக்கப்பட்டதால் அதற்கு இதுவரையிலும் இந்தக் கடிதம் கொடுக்கும் அனுமதி தரப்படவில்லை.

இதுவரையிலும் இ்ந்த நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர்கள் தாங்கள் தயாரித்த திரைப்படங்களை வெளியிடுவதற்கு அனுமதி கடிதத்தை தாங்கள் உறுப்பினராக இருக்கும் இன்னொரு சங்கமான தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்தே பெற்று தணிக்கைக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

இந்தச் சங்கடத்தைத் தவிர்க்கும் பொருட்டுத்தான் தங்களது சங்கத்திற்கும் இந்த ஒப்புதல் கடிதம் கொடுக்கும் அனுமதியை வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த அனுமதியும் அவர்களுக்குக் கிடைத்துவிட்டது. இதனால் கடைசியாக இந்தச் சங்கத்தினருக்கு இருந்த ஒரு சங்கடமும் தீர்ந்துவிட்டது.

இதனால், தற்போது நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் முற்றிலும் முழுமையான தயாரிப்பாளர்கள் சங்கமாக உருவெடுத்துள்ளது.

இதேபோல் உஷா டி.ராஜேந்தர் தலைவராக இருக்கும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் யூனியனுக்கும் இந்த சென்சாருக்குக் கடிதம் அனுப்பும் அனுமதியை தென் பிராந்திய சென்சார் போர்டு வழங்கியுள்ளது.

Our Score