“ஐ லவ் யூ சீப் மினிஸ்டர்…” – ஒரு முதலமைச்சருக்கு ஒரு நடிகையின் பாராட்டு..!

“ஐ லவ் யூ சீப் மினிஸ்டர்…” – ஒரு முதலமைச்சருக்கு ஒரு நடிகையின் பாராட்டு..!

தற்போது இந்தக் கொரோனாவின் இரண்டை அலை பரவிக் கொண்டிருக்கும் நேரத்தில் அந்த நோயைத் தடுப்பதில் கேரளா அரசு இந்தியாவிலேயே அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாகத் திகழ்கிறது.

இத்தனைக்கும் கொரோனா இரண்டாவது அலையில் சிக்கி.. அதிகப்படியான நோயாளிகளை தினமும் சந்தித்துக் கொண்டிருக்கும் இரண்டாவது மாநிலம் கேரளாதான்.

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக கேரளாவின் ஆளும் கட்சியினருக்குக் கொடுத்து வரும் குடைச்சலுக்கிடையேயும் மக்கள் நலப் பணிகளைத் தொடர்ச்சியாக, முறையாக.. செய்து வருகிறார் அம்மாநிலத்தின் முதல்வரான 75 வயது பினராயி விஜயன்.

இவருடைய இந்த கடின உழைப்பினைப் பார்த்த நடிகையொருவர் பினராயிக்கு “ஐ லவ் யூ” சொல்லி அசத்தியிருக்கிறார். அவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.

தமிழில் ‘ஆக்சன்’ என்ற படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தவர் இவர். மேலும், தற்போது தனுஷ் ஜோடியாக ‘ஜெகமே தந்திரம்’ படத்தில் நடித்திருக்கிறார். இவர்தான் பினராயி விஜயனை பாராட்ட வார்த்தைகளே கிடைக்கவில்லை என்பதால் இந்த ‘ஐ லவ் யூ’-வை தூதுவிட்டிருக்கிறார்.

இது குறித்து ஐஸ்வர்யா லட்சுமி தனது டிவீட்டர் பக்கத்தில் எழுதியிருப்பது இதுதான் :

“ஐ லவ் யூ சீப் மினிஸ்டர். நான் பொதுவானவள். எந்தக் கட்சியையும் சேராதவள். நமது கேரளா மாநிலத்தின் நோய் எதிர்ப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளில்  நீங்கள் எடுத்து வருகிற நடவடிக்கைகள், கவனம், அக்கறை இவையனைத்தும் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்தக் கடுமையான காலகட்டத்தில் உங்களின் செயல்பாடு பாராட்டுக்குரியது…” என்று எழுதியிருக்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி.

இந்த உண்மையை எழுதியதற்காக ஐஸ்வர்யா லட்சுமிக்கு பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கிறது..!

 
Our Score