தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி பட நிறுவனமாக விளங்கும், பி.வி.பி. சினிமா தயாரிப்பு நிறுவனம் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’, ‘நான் ஈ’, ‘இரண்டாம் உலகம்’ உட்பட பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளது.
தற்போது கார்த்தி – நாகார்ஜுனா நடிக்கும் படம், ஆர்யா நடிக்கும் ‘இஞ்சி இடுப்பழகி’, ‘பெங்களூர் டேஸ்’ படத்தின் தமிழ் ரீமேக் உட்பட பல படங்களைத் தயாரித்து வரும் நிலவையில், அடுத்து ‘பிரம்மோற்சவம்’ என்ற படத்தை தமிழில் பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கவுள்ளது. இத்திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகவுள்ளது.
தெலுங்குப் பட உலகில் இளைய சூப்பர் ஸ்டாராக விளங்கும் மகேஷ்பாபு, இந்தப் படம் மூலமாக தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமாகிறார். ராகுல் பிரீத் சிங், ப்ரணிதா ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். முக்கிய வேடம் ஒன்றில் சத்யராஜ் நடிக்கிறார்.
பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். மிக்கி மேயர் இசையமைக்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். தோட்டாதரணி கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார். ‘பிரம்மோற்சவம்’ படத்தை எழுதி இயக்குகிறார் ஸ்ரீகாந்த் அதலா. தயாரிப்பு – பேர்ல் வி.பொட்லூரி – பரம் வி.பொட்லூரி.
“ஒரு மியூசிக்கல் எண்ட்டர்டெயினராக இப்படம் உருவாகவுள்ளது. குடும்ப உறவுகளின் மகிமையையும்… உன்னதங்களையும் சொல்வதோடு, குடும்ப உறவுகளை எப்படி கொண்டாட வேண்டும், தலைமுறைகளைத் தாண்டி நம் பாரம்பரியத்தை எப்படி போற்றிப் பாதுகாப்பது என்பதையும் சொல்லும் படம் இது. வாழ்க்கையைப் பற்றிய பாசிட்டிவ்வான பார்வையையும் எடுத்துரைக்கும் படமாகவும் இது இருக்கும்…” என்கிறார் இயக்குநர்.