full screen background image

டெடி – சினிமா விமர்சனம்

டெடி – சினிமா விமர்சனம்

ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சயீஷா இருவரும் தங்களது கல்யாணத்திற்குப் பிறகு ஜோடியாக இந்தப் படத்தில்தான் நடித்துள்ளனர்.

இவர்களுடன் இயக்குநர் மகிழ் திருமேனி, கருணாகரன், சதீஷ், சாக்‌ஷி அகர்வால் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

டி.இமான் இசையமைக்க, மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார். மிருதன்’, ‘டிக் டிக் டிக்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

இத்திரைப்படம் ஹாலிவுட்டில் தயாராகி வெளியான ‘TED’ என்ற ஆங்கிலப் படத்தின் தமிழ் ரீமேக்காகும். ‘கோச்சடையான்’ படத்திற்குப் பிறகு இந்தப் படத்திற்குத்தான் ஹாலிவுட்டை சேர்ந்த ஒரு அனிமேஷன் நிறுவனம் பணியாற்றியுள்ளது.

ரோனா அச்சுறுத்தலினால் வெளியாகாமல் இருந்தது. ஊரடங்கு சமயத்தில் ஓடிடி வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், திரையரங்குகள் திறக்கப்பட்டதால் திரையரங்குகளிலேயே வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது திரையரங்குகளில் எந்தப் படம் போட்டாலும் இரட்டை இலக்கத்தில் மட்டுமே டிக்கெட்டுகள் விற்பனையாவது கண்டு அதிர்ச்சியடைந்த இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் தங்களது படத்தை ஓடிடி பக்கம் தள்ளிவிட்டுவிட்டனர்.

டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் இந்த டெடி’ படத்தை பெரும் தொகைக்கு வாங்கியுள்ளது. நேற்று மார்ச் 12-ம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடியில் ‘டெடி’ படம் வெளியானது.

ஒரு மெடிக்கல் க்ரைம் கதையில் பேண்டஸி கலந்து கொடுத்தால் அதுதான் ‘டெடி’ திரைப்படம்.

இந்த உலகில் எதுவுமே அறிவுக்கு அப்பாற்பட்டது அல்ல என்ற கருத்தை முன் வைத்திருக்கும் படம் இது.

அளவற்ற அறிவை தனக்குள் வைத்திருப்பவர் ஆர்யா. அரசியல், அறிவியல், உளவியல், பொருளியல், மருத்துவயியல் என எல்லா இயல்களையும் தன் விரல் நுனியில் வைத்திருக்கும் மாமேதை அவர். எதையும் துளி அளவும் மறக்காத ஞாபக சக்தியும் அவருக்கு உண்டு. அப்படியான ஆர்யா ஒரு தனிமை விரும்பியும்கூட. அவருக்கான இன்ட்ரோ பாடலின் முதல் வரியே..”என் இனிய தனிமையேதான்..”

சோ, இப்படியான டெடிகேசன் ஆர்யாவிடம் ஒரு ‘டெடி பேர்’ பொம்மை உயிர் பெற்று வந்து ஓர் உதவி கேட்குறது. அடுத்தடுத்த என்னென்ன ஆச்சர்யங்கள் நிகழ்கிறது என்பதே இந்த ‘டெடி’ படத்தின் திரைக்கதை..!

பேண்டஸி விசயத்திலும் தலையைக் காட்டி சிரிக்க வைத்து மகிழ்கிறது. டெக்கனிக்கல் விசயங்களை அலசி ஆராய்ந்து படம் எடுப்பவர்கள் இனி இயக்குநர் சக்தி செளந்தரராஜனிடம் பாடம் படிக்கலாம் போல. படம் நெடுக அவ்வளவு தகவல்களை அள்ளித் தெளித்திருக்கிறார்.

பொய் சொல்லும்போது கண்களின் கரு விழி இடது பக்கம் அசையும் என்ற மேட்டர் எல்லாம் மிரட்டல். இது மட்டும் உண்மை என்றால் காதலர்கள் & கணவன் மனைவிகள் கவனமாக இருப்பது நலம்.

ஆர்யா எப்போதும் முறைப்பாகவே இருக்கிறார். அவரின் அந்தக் கேரக்டருக்கும் அது பக்காவாக பொருந்துகிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடி காட்டுகிறார். முகத்தில் கொஞ்சம் முதிர்ச்சி தெரிந்தாலும் காதல் காட்சிகளில் கவரவே செய்கிறார்.

சாயிஷா அழகுப் பதுமையாக வந்து போகிறார். கதையின் போக்கை தீர்மானிக்கும் கேரக்டர் அவர் என்பதால் அழகாக ஈர்க்கிறார். வில்லனாக அறிமுகமாகி இருக்கிறார் இயக்குநர் மகிழ்திருமேனி. ஓரளவு பராவாயில்லை. அவரது கேரக்டரை இயக்குநர் இன்னும் ஸ்ட்ராங்காக எழுதியிருந்தால் இந்தப் படமே அவருக்கு நல்ல வேல்யூவை கொடுத்திருக்கும். மற்றபடி மாசூம் சங்கர், சதிஷ், கருணாகரன் ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்துள்ளார்கள்.

படத்தின் மற்றொரு பலம்  டெக்னிஷியன்ஸ். குறிப்பாக இசை அமைப்பாளர் டி.இமான். ஒவ்வொரு காட்சிகளையும் பெரிதாக உணர வைக்கிறது அவரது பின்னணி இசை. பாடல்களும் ரசிக்கும்படியே இருக்கின்றன. ஒளிப்பதிவும் படத்தின் தரத்தைத் தாங்கி நிற்கிறது. எடிட்டிங், கலரிங், குட்டி குட்டி சிஜி போன்றவையும் சிறப்பாக இருக்கின்றன.

என்னதான் பேண்டஸி மேட்டரைச் சொன்னாலும் ஒரு சில காட்சிகளில் லாஜிக் பல்லைக் காட்டிச் சிரிக்கிறது. அதைக் கொஞ்சம் நேர் செய்திருக்கலாம். பின் அந்தப் பொம்மைக்கும், ஆர்யாவிற்குமான எமோஷ்னல் பெரிதாக வொர்க்கவுட் ஆகவில்லை என்பதே உண்மை. இயக்குநர் அந்த ஏரியாவை மட்டும் இன்னும் ஸ்ட்ராங்க் செய்திருந்தால் டெடி’ வெடியாக வெடித்து அள்ளு சில்லு கிளப்பியிருக்கும்.

இப்போதும் ஒரு முறை ஜாலியாக குடும்பத்தோடுப் பார்க்கும் எல்லாத் தகுதியோடும் இந்தப் படம் இருக்கிறது.

Our Score