‘சதுரங்க வேட்டை’ படத்தில் காட்டப்பட்ட போலி ரூபாய் நோட்டுக்கள், போலியான நவபாஷண சிலைகள், இரிடியம் விற்பனை என்ற செய்திகளெல்லாம் இப்போதும் உண்மையாகவே நடந்து கொண்டிருக்கின்றன.
நேற்றைக்கு இது போன்ற ஒரு வழக்கில் பிரபல இசையமைப்பாளரான அம்ரீஷ் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அம்ரீஷ் பிரபல நடிகையான ஜெயசித்ராவின் ஒரே மகன். 2010-ம் ஆண்டு வெளியானே ‘நானே என்னுள் இல்லை’ என்ற படத்திற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார்.
அதன் பின்பு ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘சார்லி சாப்ளின்-2’, ‘பொட்டு’, ‘சத்ரு’, ‘என் காதலி சீன் போடுறா’ என்ற படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
மேலும் ‘கர்ஜனை’, ‘யங் மங் சங்’, ‘வீரமாதேவி’, ‘பரமபத விளையாட்டு’, ‘கா’, ‘சம்பவம்’, ‘பாம்பாட்டம்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த நெடுமாறன் என்பவரிடம் அரிய வகை தனிமப் பொருளான இரிடியம் தன்னிடம் இருப்பதாகவும் அதை விற்றால் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என்றும் அம்ரீஷ் ஆசை வார்த்தைகளைச் சொன்னதால் நெடுமாறன் இதற்கு ஆசைப்பட்டு இதுவரையிலும் 26 கோடியே 30 லட்சம் ரூபாய்வரையிலும் அம்ரீஷுக்கு பணம் கொடுத்தாராம்.
கடைசியாக அம்ரீஷ் இதுதான் இரிடியம் என்று கொடுத்த ஒரு பொருள் போலியான ஏதோ ஒரு தனிமம் கலந்த கலவையாக இருந்ததை அறிந்த நெடுமாறன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறார்.
இதையடுத்து விசாரணையி்ல் இறங்கிய போலீஸார் இசையமைப்பாளர் அம்ரீஷ் இரிடியம் விற்பதாகச் சொல்லி பணம் வாங்கிய குற்றத்திற்காக அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பிரபலமான இசையமைப்பாளர். அதுவும் கோடிகளில் சம்பளம் பெறுபவர்.. கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர் இப்படியொரு வேலையைச் செய்வாரா என்பதை நம்ப முடியாமல் திகைத்துப் போய் இருக்கிறது தமிழ்த் திரையுலகம்.
பொதுவாக இது போன்ற கைதுகள் என்றால் காவல்துறையினர் மீடியாவுக்கு தகவல் சொல்லி கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரும்போது புகைப்படம், வீடியோ எடுக்க வைப்பார்கள்.
ஆனால், இந்தக் கைது சம்பவத்தில் அம்ரீஷை கைது செய்து.. நீதிமன்றத்தில் ஆஜர் செய்து.. பின்பு நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அவரை அடைத்த பின்புதான் தகவலையே வெளியிட்டிருக்கிறார்கள் போலீஸார். இது ஏன் என்றும் தெரியவில்லை.
அம்ரீஷ் வெளியில் வந்தால் இந்த வழக்கின் இன்னொரு வெர்ஷன் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.