தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு சென்னையில் இருக்கும் முக்கிய பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகளில் இலவச சீட்டுகள் பெறப்பட்டுள்ளன.
கல்வியாளர்களான ஜெகத்ரட்சகனின் பாரத் பொறியியல் கல்லூரி, A.C.சண்முகத்தின் எம்.ஜி.ஆர். பொறியியல் கல்லூரி, ஐசரி கணேஷின் வேல்ஸ் பொறியியல் கல்லூரி ஆகியவைகளில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்களின் சங்கத்தின் பிள்ளைகள் வரும் ஆண்டில் இருந்து தகுதியின் அடிப்படையில் தலா 10 சீட்டுகளில் சேர்த்துக் கொள்ளப்படுவார்களாம்..
மேலும் இதே மூன்று கல்லூரி குழுமத்தின் சார்பில் செயல்பட்டு வரும் கலை, அறிவியல் கல்லூரிகளிலும் தலா 20 சீட்டுகள் என்று மொத்தம் 60 சீட்டுகள் இயக்குநர்கள் சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து கல்லூரி உரிமையாளர்களான ஜெகத்ரட்சகன், ஏ.சி.சண்முகம், ஐசரி கணேஷ் மூவருக்கும் நன்றி தெரிவிக்கும் விழா இன்று காலை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் காலை 9 மணியளவில் நடைபெற்றது.
விழாவில் பேசிய இயக்குநர்கள் சங்க தலைவர் விக்ரமன் தனது உடலை சென்னை அரசு மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்குவதாக அறிவித்துள்ளார். இதுபோலவே செயற்குழு உறுப்பினர்களும், நிர்வாகிகளும் உடல் உறுப்பு தானம் செய்வதாக அறிவித்துள்ளனர்.
விழாவில் இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, வி.சேகர், எஸ்.ஏ.சந்திரசேகர், மனோபாலா, கே.பாக்யராஜ், பாண்டியராஜன், கே.எஸ்.ரவிகுமார், பாலா, சித்ரா லட்சுமணன், ராமதாஸ், ரமேஷ் கண்ணா, ரவிமரியா, விஜய், தயாரிப்பாளர் கலைபுலி.எஸ்.தாணு, கே.ஆர், பொன்வண்ணன், ஆர்.கண்ணன் மற்றும் ஏராளமான இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.