full screen background image

“ஒவ்வொரு தேர்தலிலும் ஆர்.கே.செல்வமணி நாடகம் ஆடுவார்..” – இயக்குநர்களின் கோபப் பேச்சு..!

“ஒவ்வொரு தேர்தலிலும் ஆர்.கே.செல்வமணி நாடகம் ஆடுவார்..” – இயக்குநர்களின் கோபப் பேச்சு..!

வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ள தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையில் ‘இமயம் அணி’ என்ற பெயரில் ஒரு அணி போட்டியிடுகிறது.

இந்த அணியினரின் அறிமுக விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குநர் ஜெகன் பேசும்போது, “ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. 10 ஆண்டுகளாக இந்த சங்கத்தில் இருக்கிறேன். இப்போதுதான் முதன்முறையாக ஒரு வேட்பாளர் அறிமுக விழா பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நடக்கிறது. எங்கள் சங்கம் அந்தளவுக்கு மிகவும் பின் தங்கி இருக்கிறது.

சங்கம் பற்றி சமூக வலைத்தளங்களில் பேசினால் தகுதி நீக்கம் என சங்கத்தில் ஒரு சட்டம் உள்ளது. பத்திரிகைகளை சந்திக்கவே கூடாது என சொல்வது சர்வாதிகாரம். இந்த விதிமுறையை மீறி பத்திரிகையாளர்கள் முன்னிலையிலேயே இந்த நிகழ்வை நடத்தும் தலைவர் கே.பாக்யராஜ் அவர்களுக்கு நன்றி.

பாக்யராஜ் எதற்கும் துணிந்தவர். இங்கு வேலை பார்ப்பவர்கள் 75 சதவீதம் மெம்பராக இல்லாதவர்கள். இதையெல்லாம் யாரும் கண்டுகொள்வதில்லை. எதிரணியில் இருப்பவர்கள் “நாங்கள் நன்றாக வேலை செய்கிறோம். ஆனால் வேறு யாருமே எங்களைப் போல வேலை செய்ய மாட்டார்கள்” என நினைக்கிறார்கள்.. இது மாற வேண்டும்.

ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும் ஒரு அறிக்கையை சமர்ப்பிப்பார் செல்வமணி. ஆனால், தேர்தலுக்கு பின் அவையெல்லாம் காணாமல் போய் விடும். என்ன நாடகம் இது என்று தெரியவில்லை. தேர்தல் என்றால் எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும், இந்த டீம் ஜெயித்தால் சங்கத்திற்கு நல்லது, இல்லாவிட்டால் எங்களுக்கு நல்லது…” என்றார்.

வேட்பாளர்களை வாழ்த்தி இயக்குநர் செந்தில்நாதன் பேசும்போது, “இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் ஆசி பெற்று தலைவர் பாக்யராஜ் தலைமையில் போட்டியிடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ஒரு சங்கம் என்பது அனைவருக்கும் சம உரிமையை தருவது. ஆனால் ஒரு குழு மட்டுமே அமர்ந்து கொண்டு ‘எப்போதும் நாங்களே இருப்போம்’ என்பது என்ன மாதிரியான மனநிலை என்பது தெரியவில்லை. ஒரு குழு மட்டும்தான் நல்லது செய்ய வேண்டுமா..? வேறு யாரும் வரக் கூடாதா? இயக்குநராக ஆசைப்பட்டு நிறைய பேர் லட்சியத்தோடு ஊரிலிருந்து வந்தவர்கள் லட்சியத்தை மறந்து சாப்பாட்டுக்காக வேலை பார்த்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை மாறவேண்டும்.

சங்க நிர்வாகத்தில் எப்போதும் அவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். இது மாற வேண்டும். நீங்கள் ஜெயித்து வந்து நல்லது செய்ய வேண்டும். கண்டிப்பாக இவர்கள்தான் ஜெயிப்பார்கள். வெற்றி மேடையில் நான் இருப்பேன் என வாழ்த்துகிறேன்…” என்றார்.

இயக்குநர் சங்கத்தின் துணைத் தலைவரான R.மாதேஷ் பேசும்போது, “இந்தச் சங்கத்தில் பல ஆண்டுகளாக இருக்கிறேன். ஆனால் இதுவரையிலும் எந்தத் தேர்தலிலும் போட்டியிட்டதில்லை. இதுதான் முதல் முறை. நானும் போட்டி போட்டு ஜெயித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் என்னை போட்டியின்றி தேர்ந்தெடுத்துவிட்டார்கள்.

கஷ்டப்படும் ஒவ்வொரு உதவி இயக்குநர்களுக்கும் உதவுகிறேன் என்று அறிக்கையில் கூறியுள்ளனர். அதற்காகவாவது இந்த அணியை வெற்றி பெற செய்ய வேண்டும். இந்த அணி கண்டிப்பாக ஜெயிக்கும்…” என்றார்.

இயக்குநர் சாய் ரமணி பேசும்போது, “எழுத்தாளர் சங்கத்தில் பாக்யராஜ் சாருடன் சில ஆண்டுகளாக பயணித்து கொண்டிருக்கிறேன். அந்த சங்கம் இருந்த நிலையை மாற்றி தற்போது நல்ல நிலைக்கு கொண்டுவந்துள்ளார். ஓட்டே இல்லாதவர்கள் கருத்து சொன்னாலும், அவர்களை அழைத்து பிரச்சனைகளை கேட்டு தீர்த்து வைத்துள்ளார்.

பெரிய நடிகர், பெரிய நிறுவனத்திற்கு எதிராக போராடி ஒரு அசோஸியேட்டுக்கு நியாயம் வாங்கி தந்தார் பாக்யராஜ் ஸார். தனக்கான ஒரு பொறுப்பை சரியாக செய்ய வேண்டும் என்பதில் அவர் எப்போதும் உறுதியாக இருப்பவர். அவருடன் கூடவே இருந்து பார்த்தவன் என்ற முறையில், அவர் வந்தால் இயக்குநர் சங்கம் இன்னும் வளப்படும் என்று நம்புகிறேன். அவர் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் கண்டிப்பாக நிறைவேற்றுவார். சங்கத்தை சிறப்பாக முன்னெடுப்பார். இந்த ‘இமயம் அணி’ கண்டிப்பாக வெற்றி பெறும்…” என்றார்.

Our Score