இன்று தமிழ்நாடு திரைப்பட விநியோஸ்தர்கள் கூட்டமைப்பின் கூட்டம் சென்னையில் உள்ள சென்னை செங்கல்பட்டு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் சார்பில் அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்கப்பட்டன.
அதன்படி,
1. விநியோகஸ்தர்கள் படங்களை விநியோகித்து அதன் மூலம் வரும் வருவாய்க்கு விதிக்கப்படும் 10% TDS வரியை முற்றிலுமாக ரத்து செய்யவேண்டும் என்றும், இதற்கு மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தும்விதமாக, வரும் மார்ச் மாதம் 27-ம் தேதி முதல் எந்த விநியோகஸ்தரும் படங்களை விநியோகிப்பதில்லை என்று ஒரு மனதாக முடிவேடுக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு விநியோகஸ்தர்களுக்கு விதிக்கப்படும் TDS வரியை நீக்கும்வரை நடைமுறையில் இருக்கும்.
2. தற்போது திரையரங்க நுழைவுக் கட்டணங்களுக்கான GST (12%) வரியுடன் கூடுதலாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு LBT (8%) கேளிக்கை வரி செலுத்துவதால், இது திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களுக்கும் கூடுதல் சுமையாக அமைகிறது.
ஆகையால் மேற்படி வரியினை (8%) முற்றிலும் ரத்து செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க தலைவர் திரு. டி.ராஜேந்தர், செயலாளர் திரு.மன்னன், கோவை மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க தலைவர் ராஜமன்னார், திருநெல்வேலி மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க உப தலைவர் திரு. பிரதாப் ராஜா, மதுரை மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க செயலாளர் சாகுல் அமித் மற்றும் தமிழ் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க கூட்டமைப்பின் சங்க உறிப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதனால் மார்ச் 27-ம் தேதி முதல் புதிய திரைப்படங்கள் வெளியிடுவது சிக்கலுக்கு உள்ளாகும். படத்தின் தயாரிப்பாளர்களே திரையரங்கு உரிமையாளர்களிடத்தில் பேசி நேரடியாக படத்தினை வெளியிட வேண்டி வரலாம்..! இதனால் மத்திய தர, சின்ன பட்ஜெட் படங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ளது.