தமிழகத்தில் இருக்கும் சினிமா தியேட்டர்களின் நுழைவுக் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.
மாறிவிட்ட காலச் சூழல், பொருளாதார வளர்ச்சிகளின் அடிப்படையில் சினிமா தியேட்டர்களின் கட்டணங்களை உயர்த்தித் தரும்படி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், தென்னிந்திய திரைப்பட சம்மேளனமும் அரசுக்குக் கோரிக்கை வைத்திருந்தன.
இதனால் இந்த இரண்டு அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய உயர் மட்டக் கமிட்டியை அரசு நியமித்து தற்போதைய சினிமா கட்டணங்களை உயர்த்துவது பற்றி ஆலோசித்தது.
இந்த ஆலோசனையின் அடிப்படையில் சினிமா தியேட்டர்களின் அடிப்படை கட்டணத்தில் இருந்து 25 சதவிகிதத்தை உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
மல்ட்டி பிளக்ஸ் தியேட்டர்களில் குறைந்தப்பட்ச கட்டணம் 15 ரூபாயும், அதிகப்பட்ச கட்டணமாக 150 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2 திரைகள் கொண்ட தியேட்டர்களில் குறைந்தப்பட்ச கட்டணமாக 15 ரூபாயும், அதிகப்பட்ச கட்டணமாக 118 ரூபாய் 80 காசுகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3 திரைகள் கொண்ட தியேட்டர்களில் குறைந்தப்பட்ச கட்டணமாக 15 ரூபாயும், அதிகப்பட்ச கட்டணமாக 106 ரூபாய் 30 காசுகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெரு நகராட்சிகளில் இருக்கும் ஏசி தியேட்டர்களுக்கு குறைந்தப்பட்ச கட்டணாக 15 ரூபாயும், அதிகப்பட்ச கட்டணமாக 62 ரூபாய் 50 காசுகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெரு நகராட்சிகளில் இருக்கும் ஏசி வசதியில்லாத தியேட்டர்களில் குறைந்தப்பட்ச கட்டணமாக 10 ரூபாயும், அதிகப்பட்ச கட்டணமாக 37 ரூபாய் 50 காசுகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நகராட்சிகளில் இருக்கும் ஏசி தியேட்டர்களுக்கு குறைந்தப்பட்ச கட்டணமாக 10 ரூபாயும், அதிகப்பட்சமாக 50 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நகராட்சிகளில் இருக்கும் ஏசி வசதியில்லாத தியேட்டர்களுக்கு குறைந்தப்பட்ச கட்டணமாக 10 ரூபாயும், அதிகப்பட்சமாக 37 ரூபாய் 50 காசுகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டவுன் பஞ்சாயத்துகளில் இருக்கும் ஏசி தியேட்டர்களுக்கு குறைந்தப்பட்ச கட்டணமாக 10 ரூபாயும், அதிகப்பட்சமாக 31 ரூபாய் 25 காசுகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டவுன் பஞ்சாயத்துகளில் இருக்கும் ஏசி வசதியில்லாத தியேட்டர்களுக்கு குறைந்தப்பட்ச கட்டணமாக 10 ரூபாயும், அதிகப்பட்சமாக 25 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிராமப் பஞ்சாயத்துகளில் இருக்கும் ஏசி தியேட்டர்களுக்கு குறைந்தப்பட்ச கட்டணமாக 10 ரூபாயும், அதிகப்பட்சமாக 18 ரூபாய் 75 காசுகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிராமப் பஞ்சாயத்துகளில் இருக்கும் ஏசி வசதியில்லாத தியேட்டர்களுக்கு குறைந்தப்பட்ச கட்டணமாக 10 ரூபாயும், அதிகப்பட்சமாக 15 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டணம் அடிப்படையான கேளிக்கை வரி என்பதால் இதனுடன் மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரியான 28 சதவிகிதம் மற்றும் தமிழக அரசின் கேளிக்கை வரியான 10 சதவிகித்த்தையும் சேர்த்தால் மொத்தம் 38 சதவிகித வரியையும் கூட்டித்தான் தியேட்டர்களில் கட்டணங்கள் வசூலிக்கப்படும்.
இதன்படி பார்த்தால் சென்னையில் மல்ட்டி பிளக்ஸ் தியேட்டர்களின் கட்டணம் நேரடியாக தியேட்டர் கவுண்ட்டரில் வாங்கினால் 207 ரூபாயாகவும், இணையம் மூலமாக பதிவு செய்தால் 237 ரூபாயாகவும் இருக்கும்.
அடிப்படை கட்டணம் = 150
ஜி.எஸ்.டி. வரி 28% = 42
தமிழக அரசின் கேளிக்கை வரி 10% = 15
இணைய பதிவுக் கட்டணம் = 30
மொத்த டிக்கெட் கட்டணம் = 237
மற்ற மொழி திரைப்படங்களுக்கான கட்டணம் :
அடிப்படை கட்டணம் = 150
ஜி.எஸ்.டி. வரி 28% = 42
தமிழக அரசின் கேளிக்கை வரி 20% = 30
இணைய பதிவுக் கட்டணம் = 30
மொத்த டிக்கெட் கட்டணம் = 252
இந்த புதிய தியேட்டர் கட்டணங்கள் வரும் அக்டோபர் 9-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அரசு அறிவித்துள்ளது.