full screen background image

சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் நல்லோர் அணியே வெற்றி..!

சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் நல்லோர் அணியே வெற்றி..!

நேற்று நடைபெற்ற சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் நல்லோர் அணியே அதிகப் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுள்ளது.

சின்னத்திரையில் சீரியல்களை இயக்கும் இயக்குநர்கள், துணை, உதவி, இணை இயக்குநர்களை உள்ளடக்கிய சங்கம் தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம்.

இந்தச் சங்கத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். 2016-2018-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல், நேற்று காலை விருகம்பாக்கத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த்த் தேர்தலில் இயக்குநர் தளபதி தலைமையில் ‘நண்பர்கள் அணி’ என்றும், இயக்குநர் சுகி மூர்த்தி தலைமையில் ‘நல்லோர் அணி’ என்றும் இரண்டு அணிகள் போட்டியிட்டன.

நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரையிலும் வாக்களிப்பு நடைபெற்றது. பின்பு மாலை 6 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டன.

இதில் தலைவர் பதவிக்கு இயக்குநர் தளபதியும், பொதுச் செயலாளர் பதவிக்கு இயக்குநர் செய்யாறு ரவியும், பொருளாளர் பதவிக்கு இயக்குநர் எஸ்.என்.சக்திவேலும் தேர்வு செய்யப்பட்டார்கள்.

துணைத் தலைவர்கள் பதவிக்கு இயக்குநர்கள் நித்தியானந்தமும், சி.ரங்கநாதனும் தேர்வானார்கள்.

இணைச் செயலாளர்கள் பதவிக்கு கஸ்பைர் அலிகானும், மருது சங்கரும் தேர்வானார்கள்.

செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு அழகுலிங்கம், அறந்தாங்கி சங்கர், பாலபிரசாத், ஜி.ஜி.மதன், மஞ்சுநாத், சி.நாகராஜன், பி.நக்கீரன், என்.சிவக்குமார் ஆகிய 8 பேர்கள் வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்றவர்களில் தலைவரான தளபதியையும், துணைத் தலைவர்களில் ஒருவரான இயக்குநர் சி.ரங்கநாதன் ஆகிய இருவரைத் தவிர, மற்ற அனைவருமே இவர்களுக்கு எதிரணியாக போட்டியிட்ட நல்லோர் அணியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Our Score