full screen background image

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு ஏ.சி.எஸ். மருத்துவமனையில் இலவச சிகிச்சை

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு ஏ.சி.எஸ். மருத்துவமனையில் இலவச சிகிச்சை

தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் A.C.S மருத்துவ கல்லுரியின் மருத்துவமனையில் இலவச மருத்துவ வசதி பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான மருத்துவ அடையாள அட்டை வழங்கம் விழா நேற்று மாலை ஆழ்வார்பேட்டை நாரத கான சபாவில் நடைபெற்றது.

IMG_7530

இந்த விழாவில் நடிகர் சங்க நிர்வாகிகளான நாசர், பொன்வண்ணன், கருணாஸ், விஷால், கார்த்தி மற்றும் செயற்குழு உறுப்பினர்களான ராஜேஷ், ஜூனியர் பாலையா, பூச்சி முருகன், பசுபதி, ஸ்ரீமன், A.L.உதயா, ரமணா, பிரேம் குமார், நந்தா, பிரகாஷ், தளபதி தினேஷ், அயுப்கான், பாலதண்டபாணி, குட்டி பத்மினி, சிவகாமி, சங்கிதா, சோனியா நியமன குழு உறுப்பினர்களான மனோபாலா, ல்லிதாகுமாரி, ஹேமச்சந்திரன், ஜே.கே.ரித்தீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக நடிகைகள் லிஸி, ஸ்ரீப்ரியா, விஜயகுமார், வெண்ணிற ஆடை நிர்மலா, சச்சு அம்மா, A.L.அழகப்பன், சுஹாசினி மணிரத்னம், சித்ராதேவி, நடிகர் மோகன் ஆகியோரும் கலந்து கொண்டு சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினர்.

மூத்த சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும்போது அனைவரும் மேடையில் இருந்து இறங்கி வந்து அவர்களுக்கு அடையாள அட்டையை வழங்கினர்.

IMG_7456

இந்த விழாவில் நாசர் பேசும்போது, “வெளியூரிலிருந்து இன்றுதான் இங்கு வந்தேன். வந்தவுடன் கேட்டறிந்த செய்தி மிகவும் மனவருத்தத்தை உண்டாக்கியது. நடிகர் சாய் பிரசாந்தின் துர்மரண செய்தி, மிகுந்த மன வருத்தத்தை உண்டாக்கியது.

மருத்துவத்தைவிட மேலானது மனோதத்துவ முறையிலான சிகிச்சை. இந்த நடிகர் சங்கத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்ட ஒரு விஷயம், நமது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் மனோதத்துவ முறையிலான சிகிச்சை மையம் அமையும் என்பதை இங்கே கூறிக் கொள்கிறேன்.

இந்த ஆறு மாத காலத்தில், ஆறு வருட பணியை செய்து முடித்திருக்கிறோம். தேர்தல் முடிந்த உடன், தீபாவளிக்கான பொருட்கள் வினியோகம் செய்வது என்று ஒரு பணி. உறுப்பினர்கள் எல்லாரும் தான் ஒரு நடிகன் என்பதை மறந்து சிறப்பாக வேலை செய்தார்கள்.

நடிகர் சங்கத்தின் தேர்தல் அறிக்கை தயார் செய்யும்போது இதைல்லாம் நம்மால் செய்துவிட முடியுமா என்று நான் யோசித்தேன். அப்போது என்னுடன் இருந்த இந்த இளைய தலைமுறையினர் எனக்கு நம்பிக்கையளித்து முதலில் இலக்கை நிர்ணயம் செய்வோம்.. பின்பு அதை நோக்கி பயணம் செய்வோம் என்று கூறினார்கள். அதைத்தான் இப்போது நாங்கள் பின்பற்றுகிறோம்.

சங்கத்தின் முதல் திட்டம் ‘குருதட்சணை திட்டம்’. முதலில் இது ஓய்வூதியம் என்று தானிருந்தது, நமக்கு முன் வந்த நமக்கு குருவாக இருந்த சங்க உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் என்பதற்கு பதிலாக குருதட்சிணை என்று கொடுப்போம் என்று வடிவமைத்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறோம். அதற்கு உறுதுணையாக இருந்த A.C.S. ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி.

‘நோய் என்பதற்கு வயது வரம்பு கிடையாது, எனவே சங்க உறுப்பினர்கள் 3500 பேருக்கும் மருத்துவ வசதி செய்து கொடுக்கிறேன்’ என்று உறுதியளித்தார். மேலும், ‘இந்த 3500 பேரில், 3000 உறுப்பினர்கள் கலைஞர்கள் இதை பயன்படுத்தாமல் ஆரோக்கியமாக இருந்தால் எனக்கும் சந்தோஷம்தான்..’ என்றார்.

மேலும், மாதாமாதம் 1000 ரூபாய்  வீதம் 150 மூத்த உறுப்பினர்களுக்கு  பென்சன் வழங்கப் போகிறார். பிரசவத்திற்கு முழுவதும் இலவசம். பெங்களூரில் உள்ள அவரது மருத்துவமனையில் இதயம் தொடர்பான சிகிச்சைக்கு மருந்துக்கு மட்டும் நாம் செலவு செய்தால் போதும். சிகிச்சை முற்றிலும் இலவசமாக தரப்படும். இதற்காக உங்கள் அனைவரது சார்பாக, உங்களில் ஒருவனாக ஏ.சி.சண்முகம் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்..” என்றார்.

IMG_7497

நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளரான விஷால் பேசும்போது, “மூன்றரை வருடங்களுக்கு முன்னர், நான் யோசித்துக் கொண்டிருந்த ஒரு விஷயம், இன்று இந்த பதவியின் மூலம் சாத்தியமானது. இந்த பதவியின் வெற்றியை அனுபவிப்பது என்பது ஒவ்வொரு நிகழ்வும் நடக்கும்போது மட்டுமே நினைவிற்கு வருகிறது,

உதாரணத்திற்கு நான் காசோலையில் கையெழுத்திடும்போது. தமிழகத்தைத் தாண்டிய ஒரு வெற்றியை நாம் அடைந்திருக்கிறோம். வருகின்ற 20-ம் தேதி நமது சங்க கட்டிடத்தின் மாதிரியை நீங்கள் எல்லாரும் பார்க்க இருக்கிறீர்கள்.. இதற்காக இரண்டு நபர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.

முதலாவதாக பலவிதமான பிரச்சினைகளையும் தாண்டி இதை முடித்துக் கொடுத்த, ஐசரி கணேஷ் அவர்கள். இரண்டாவதாக நமது உறுப்பினர்கள். நமது உறுப்பினர்களின் ஒத்துழைப்பால் மட்டுமே 6 வருடத்தில் நாம் செய்யக் கூடிய வேலையை 4 மாதங்களில் செய்து முடிந்தது.

நமது உறுப்பினர்கள் கோவை சரளா, ஸ்ரீமன், சோனியா, ஹேமச்சந்திரன் மற்றும் நமது நாடக நடிகர்கள். இவர்களுடைய ஒத்துழைப்பு இல்லாமல் எதுவுமே நடந்திருக்க முடியாது. மூத்த தலைமுறை நடிகர்கள், நடிகைகளுடன் எப்போதும் நாங்கள் இணைந்திருக்க வேண்டுமென்று விரும்புகிறோம். இந்தக் கட்டிடம் அதற்கு முன் மாதிரியாக இருக்கும்.

இந்த வகையில் ACS அய்யா அவர்களுக்கு எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றிகள். நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் எல்லாருடைய குடும்பத்திலும் நல்ல விஷயங்கள் கண்டிப்பாக நடக்கும், சக நடிகனாக என்னுடைய உத்திரவாதமாக இங்கே இதை நான் பதிவு செய்ய விரும்புகிறேன்..” என்றார்.

IMG_7506

பொருளாளர் கார்த்தி பேசும்போது, “இந்த வெற்றிக் கூட்டணியை மூத்த தலைமுறையினரின் ஆசீர்வாதமாகவே நான் கருதுகிறேன். நமது தலைவர் நாசர் அவர்கள் பேசும்போது சங்கம் என்பது மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்ளும் இடமாக இருந்தால் நலமாக இருக்கும் என்று அடிக்கடி சொல்வார், அது சங்க கட்டிடத்தின் மூலம் கூடிய விரைவில் சாத்தியமாகும்.

கட்டிட  குழு அமைத்தாயிற்று. வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. இப்போது நடந்து கொண்டிருக்கும் அனைத்து விஷயங்களுக்கும் முதற்காரணமாக இருக்கும் ஐசரி கணேஷ் ஸார் அவர்களுக்கு எங்கள் நன்றிகள்.

குருதட்சணை திட்டத்தின் மூலம் ஆரம்பித்த தகவல் சேகரிப்பின் மூலம் அனேக தகவல்களை தெரிந்து கொண்டோம். மூத்த தலைமுறை நடிகர்களின் உடல் நிலை சம்பந்தமான பிரச்சினைகள் அதிகமாக வருகிறது. அதை  சிறப்பாக கையாள்வதில் துணையாக இருந்த ACS அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி.

உறுப்பினர்களுக்கு எழும் சந்தேகங்களை தீர்த்து வைக்க சங்கம் எப்போதும் தயாராக இருக்கின்றது. சங்கத்திற்கான கட்டிடம் தயாரானதும் நாம் இன்னும் நிறைய விஷயங்களை மீண்டும் நாம் பேசலாம்..” என்றார்.

Our Score