தமிழ்த் திரையுலகத்தினர் மீண்டும் ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இம்முறை இவர்களது போராட்டத்திற்கு காரணமானவர்கள் திரைப்படங்களை தியேட்டர்களில் திரையிடும் டிஜிட்டல் நிறுவனங்களான QUBE / UFO ஆகியவை.
திரைப்படங்களை தியேட்டர்களில் ரிலீஸ் செய்யும்போது உடன் திரையிடப்படும் விளம்பரங்களுக்காக வசூலிக்கப்படும் கட்டணத்தில் தயாரிப்பாளர்களுக்கு எந்தப் பங்கையும் அளிக்காமல் டிஜிட்டல் நிறுவனங்கள் தாங்களே வைத்துக் கொள்வதை கண்டித்துதான் இந்த உண்ணாவிரதப் போராட்டமாம்..!
இது குறித்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இதுதான் :
தயாரிப்பாளர்களிடம் அதிகக் கட்டணம் வசூலித்து கோடி, கோடியாய் கொள்ளையடித்து திரையுலகத்தை கபளீகரம் செய்யும் QUBE மற்றும் UFO போன்ற டிஜிட்டல் நிறுவனங்களை கண்டிக்கும்வகையில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் திரையுலகத்தைச் சேர்ந்த முன்னோடிகள் அனைவரும் வரும் மே 10, ஞாயிற்றுக்கிழமையன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரையிலும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தினை சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் நடத்தவுள்ளார்கள்.
இதன் நோக்கம், தயாரிப்பாளர்களிடமிருந்து திரைப்படங்களை டிஜிட்டல் முறையில் வெளியிடுவதற்கான கட்டணத்தை அதிகமாகவும் பெற்றுக் கொள்ளும் இந்த டிஜிட்டல் நிறுவனங்கள், திரையரங்குகளில் திரையிடப்படும் விளம்பரங்கள் மூலமாக வருடத்திற்கு சுமார் 400 கோடி ரூபாயை சம்பாதித்துவிட்டு தயாரிப்பாளர்களுக்கு அதில் பங்கு தர மறுக்கிறார்கள். இது தயாரிப்பாளர்கள் மற்றும் திரையுலகத்தினரின் வாழ்வாதாரத்தை நசுக்க நினைக்கும் செயலாகும்.
மேற்படி QUBE / UFO டிஜிட்டல் நிறுவனங்களின் அத்து மீறிய செயலை தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டுவரும் வகையிலும், தயாரிப்பாளர்களுக்கு வர வேண்டிய சுமார் 400 கோடி ரூபாயை தர மறுக்கும் மேற்படியான டிஜிட்டல் நிறுவனங்களை தாயன்போடு வழி நடத்தும் மக்களின் முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்களின் ஆசியோடு தமிழக அரசே ஏற்று நடத்தி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களையும் திரையுலகத்தினரின் வாழ்வாதாரத்தையும் மீட்டுத் தருமாறும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்..”
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.